News
Loading...

மாற்றுப்பாதையில் சேது சமுத்திர கால்வாய் பாக் ஜலசந்தியில் அதிகாரிகள் ஆய்வு

மாற்றுப்பாதையில் சேது சமுத்திர கால்வாய் பாக் ஜலசந்தியில் அதிகாரிகள் ஆய்வு

ராமேஸ்வரம்: பாக் ஜலசந்தி கடலில் சேது சமுத்திர கால்வாய் திட்ட பகுதிகளை நேற்று மத்திய கப்பல் போக்குவரத்துறை மற்றும் சேதுசமுத்திர திட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தூத்துக்குடி, மும்பையிலிருந்து சென்னை, விசாகப்பட்டினம் செல்லும் பெரிய கப்பல்கள் அனைத்தும் இலங்கையை சுற்றி இந்திய பெருங்கடல் வழியாக சென்று திரும்புகிறது. இதனால் காலவிரயம், அதிக எரிபொருள் செலவு ஏற்படுகிறது. இதனை தவிர்த்து இந்திய கடல் வழியாகவே கப்பல்கள் செல்லும் வகையிலான திட்டம் ஆங்கிலேயர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டது. இலங்கையை சுற்றாமல் மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் வழியாக கப்பல்கள் செல்லும் வகையில் 1860 முதல் 2006ம் ஆண்டு வரை 6 வகையான வழித்தடங்கள் மற்றும் திட்டங்கள் போடப்பட்டன.இறுதியாக தனுஷ்கோடி கடல் ஆதம்பாலம் மணல் திட்டு  துவங்கி பாக்ஜலசந்தி கடலில் கால்வாய் தோண்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது.

இதற்காக மத்திய அரசு 2,427 கோடியை ஒதுக்கீடு செய்ததோடு, 2005, ஜூலை 2ம் தேதி சேது சமுத்திரக்கால்வாய் திட்டப்பணிகளும் துவக்கி வைக்கப்பட்டது. இதனிடையே ‘ராமர் பாலம்’ என்றழைக்கப்படும் ஆதம்பாலம் மணல் திட்டுப்பகுதியில் கால்வாய் தோண்டுவதற்கு எதிர்ப்பு கிளம்பியதால், இத்திட்டப்பணிகள் 2009ம் ஆண்டு ஜூலையில் நிறுத்தப்பட்டது. 832 கோடி செலவு செய்யப்பட்ட நிலையில் மாற்று வழிப்பாதையில் இத்திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனிடையே, பாம்பன் கடல் பகுதியில் சேதுக்கால்வாய் திட்டத்தை நிறைவேற்றும் சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. நேற்று ராமேஸ்வரம் வந்த மத்திய கப்பல் போக்குவரத்து துறை செயலாளர் ராஜீவ்குமார் மற்றும் சேதுக்கால்வாய் திட்ட அதிகாரிகள், பாக்ஜலசந்தி கடலில் ஆய்வு செய்தனர். 

பின்னர் காவல்படை ஹோவர் கிராப்ட் கப்பலில் தனுஷ்கோடி கடல் பகுதிக்கு சென்றனர். அங்கு, இந்திய கடல் எல்லை முடியும் பகுதியில், கடலுக்குள் ஏற்கனவே கால்வாய் தோண்டும் பணிகள் நடைபெற்ற இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து ராமேஸ்வரம் கடல் வழியாக கப்பலில் சென்று பாம்பன் கடல் பகுதியையும் பார்வையிட்டு மண்டபம் கடலோர காவல்படை முகாமுக்கு சென்றனர்.. இதுபற்றி, ராஜீவ்குமார் நிருபர்களிடம் கூறுகையில், ‘தனுஷ்கோடி கடல் பகுதியில் ஏற்கனவே கால்வாய் தோண்டப்பட்ட பகுதி, பாம்பன் கடல் பகுதிகளை பார்வையிட்டேன். இதுகுறித்து மத்திய அரசிடம் அறிக்கை வழங்கப்படும்’ என்றார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...