News
Loading...

‘‘நானே கொல்லப்படலாம்!’’ - தனலாகும் தமிழச்சி!

‘‘நானே கொல்லப்படலாம்!’’ - தனலாகும் தமிழச்சி!

சுவாதி கொலை வழக்கில் சுவாதி, ராம்குமார் ஆகிய பெயர்களுக்கு அடுத்தபடியாக அதிகமாக அடிபட்ட பெயர் தமிழச்சி. இயற்பெயர், யுமா. புதுச்சேரியைச் சேர்ந்தவர். சுவாதி கொலை வழக்கு பற்றி பல தகவல்களை முகநூலில் வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பியவர். பிரான்ஸில் வசிக்கும் இவர், சுவாதி குறித்து ஃபேஸ்புக்கில் வெளியிட்ட கருத்துகள் எல்லாம் பகீர் ரகம். ‘ராம்குமாரை சிறையில் காவல்துறை கொலைசெய்துவிட்டது’ என்று கூறி இப்போதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார், தமிழச்சி. ஃபிரான்ஸில் உள்ள அவரிடம் வீடியோ கால் மூலம் பேசினோம்.

‘‘ராம்குமார் கொலைசெய்யப்பட்டார் என்று எதை வைத்துச் சொல்கிறீர்கள்?’’

‘‘ராம்குமாருக்கு ஜாமீன் கிடைக்க அதிக வாய்ப்பு இருந்தது. ராம்குமாரை ஜாமீனில் எடுக்கவும், வெளியே வந்தால் அவருக்குப் பாதுகாப்பு வழங்கவும் 150 பேரைத் தயார்செய்து வைத்திருந்தோம். ராம்குமார் வெளியே வந்திருந்தால் ‘போலீஸும், கருப்பு முருகானந்தம் ஆட்களும்தான் என் கழுத்தை அறுத்தார்கள்’ என்று சொல்லியிருப்பார். அதனால்தான் சிறையிலேயே அவரை போலீஸ் கொலை செய்துவிட்டது. டி.எஸ்.பி விஷ்ணு ப்ரியாவின் மரணமே ஒன்றும் இல்லாமல் போய்விட்டது. அரசியல்வாதிகளின் கட்டாயத்தாலும், அரசின் தூண்டுதலிலும்தான் இந்தக் கொலை நடத்தப்பட்டுள்ளது.’’

‘‘தற்கொலை என்று போலீஸ் சொல்கிறதே?’’

‘‘நிச்சயமாக இருக்காது. ‘நான் இந்தக் குற்றத்தைச் செய்யவில்லை’ என்பவர் ஏன் சாகவேண்டும்? 19-ம் தேதி ஜாமீன் மனு விசாரணைக்கு வரும் நிலையில், ஒரு நாள் முன்னதாக அவர் இறக்க வேண்டிய அவசியம் என்ன? ராம்குமாரை அவரது அப்பாவும், அம்மாவும் பார்க்கச் சென்றனர். அப்போது, ‘அம்மா என்னை எப்படியாவது இங்கிருந்து கூட்டிட்டுப் போயிடுங்க...’ என்று காலைப்பிடித்து கெஞ்சியிருக்கிறார். அவர் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பே இல்லை. சிறையில் மின்சார ஒயர்கள் எல்லாம் எட்டிப்பிடிக்கும் இடத்தில் இருக்காது என்பது சாமானியனுக்குக்கூட தெரியும். போலீஸ் நன்றாகத் திரைக்கதை எழுதியிருக்கிறது.’’

‘‘சுவாதி கொலைக்கும், ராம்குமாருக்கும் தொடர்பு இல்லை என்கிறீர்களா?’’ 

‘‘ராம்குமாரும், சுவாதியும் ஃபேஸ்புக்கில் நண்பர்களாக இருந்தனர் என்றும், அதனால் காதல் வந்தது என்றும் சொன்னார்கள். ஆனால், ராம்குமாரின் ஃபேஸ்புக்கில் அவரது நண்பர்கள் பட்டியலில் சுவாதி இல்லை. ஃப்ரண்ட் ரிக்வெஸ்ட் கூட அவர் கொடுக்கவில்லை. அப்படி இருக்க, எப்படி இருவருக்கும் தொடர்பு இருக்கும்?’’

‘‘சுவாதி வழக்கில் உங்களது சந்தேகம்தான் என்ன?’’

‘‘நானே கொல்லப்படலாம்!’’ - தனலாகும் தமிழச்சி!

‘‘சுவாதி ஏற்கனவே திருமணம் செய்திருப்பதுதான் கொலைக்குக் காரணம். பெங்களூருவில் அதற்கான ஆதாரங்கள் உள்ளன. அவற்றை வெளியிட மறுக்கிறார்கள். சுவாதி இஸ்லாம் மதத்துக்கு மாற முயற்சி செய்துள்ளார். சுவாதி கொலையின் பின்னணி அவரது குடும்பத்தினருக்கு நிச்சயம் தெரியும். ‘சுவாதி உடற்கூறு பரிசோதனை நடந்த பிறகு, இதில் அதிர்ச்சியான தகவல்கள் இருக்கின்றன. அதை வெளியே சொல்ல முடியாது’ என்று சொன்னார்கள். அது என்ன அதிர்ச்சி? அதைச் சொல்லுங்கள். ‘ஒருதலைக் காதல்’ என ஜோடித்து, குக்கிராமத்தில் இருந்த ஒருவனைக் கைதுசெய்து, அவரது கழுத்தை அறுத்து பேச முடியாமல் செய்தார்கள். ஜாமீனில் வெளியே வந்து உண்மைகளைச் சொன்னால் ஆபத்து என நினைத்துக் கொலையை அரங்கேற்றி​ உள்ளனர். சுவாதி கொலை, ஒரு ஆணவக்கொலை.’’

‘‘இதை, ஒரு யூகத்தில் சொல்கிறீர்கள் என எடுத்துக்கொள்ளலாமா?’’

‘‘யூகங்கள் இல்லை. ராம்குமார்தான் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பின்னர், பிலாலிடம் 10 மணி நேரம் போலீஸார் ஏன் விசாரணை நடத்த வேண்டும்? கொலை நடந்த ஓரிரு தினங்களில் ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்டோர், ‘பிலால்தான் காரணம்’ என்று  எப்படி சொன்னார்கள். பிலால் யார் என அவர்களுக்கு எப்படித் தெரியும்? பிலாலுக்கும் சுவாதிக்கும் என்ன தொடர்பு? அதை ஏன் மறைக்க வேண்டும்? தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு சினிமா காட்சியை சில மாதங்களுக்கு முன்பு சுவாதி பதிவிட்டிருந்தார். அதில் ஹீரோயின் சரிதா, இந்து மதத்தைச் சேர்ந்தவர். ஹீரோ ஒரு கிறிஸ்தவர். இதை சுவாதி பதிவுசெய்ததன் நோக்கம் என்ன? இஸ்லாம் மதத்துக்கு மாற சுவாதி திட்டமிட்டார் என்ற தகவலை எளிதாகக் கடந்துசெல்ல முடியவில்லை.’’

‘‘உங்களுக்கு இந்தத் தகவல்கள் எப்படி கிடைத்தன?’’

‘‘சமூகம் சார்ந்து நிறைய எழுதிக்கொண்டு இருக்கிறேன். முகம் காட்ட முடியாத சமூக நலன் விரும்பிகள் எனக்குத் தகவல்களை அனுப்புகிறார்கள். இந்த வழக்கில் தற்கொலைகள் எனும் பெயரில் இன்னும் சில கொலைகள் நடக்கும். ராம்குமாரின் அப்பா உள்ளிட்டோருக்கு ஆபத்து இருக்கிறது. ஏன், நான்கூட கொல்லப்படலாம். அதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை. இந்த வழக்கின் உண்மையை நான் தொடர்ச்சியாக வெளிப்படுத்துவேன்”

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.