News
Loading...

போதையால் அதிகரிக்கும் சாலை விபத்துகளை தடுக்க முழு மதுவிலக்கே தீர்வு: ராமதாஸ்

போதையால் அதிகரிக்கும் சாலை விபத்துகளை தடுக்க முழு மதுவிலக்கே தீர்வு: ராமதாஸ்

போதையால் அதிகரிக்கும் சாலை விபத்துகளை தடுக்க தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்துவதே தீர்வு என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவோரின் எண்ணிக்கையும், குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த புள்ளி விவரங்கள் அதிர்ச்சி அளிக்கும் நிலையில், மதுபோதையால் விபத்துக்கள் அதிகரிப்பதை தடுக்கவும், உயிர்களைக் காக்கவும் அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

குடித்து விட்டு வாகனங்கள் ஓட்டுவதால் ஏற்படும் கோர விளைவுகளுக்கு சென்னையில் கடந்த சில வாரங்களில் நடைபெற்ற இரு சாலை விபத்துக்கள் தான் உதாரணம் ஆகும். கடந்த ஜூலை மாதம் 2-ஆம் தேதி சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் திருவான்மியூர் அருகே ஐஸ்வர்யா என்ற பெண்ணும், அவரது தோழிகளும் குடிபோதையில் ஓட்டி வந்த மகிழுந்து மோதி முனுசாமி என்ற கூலித் தொழிலாளி கொல்லப்பட்டார்.

அதன்பின் கடந்த 19-ஆம் தேதி திங்கட்கிழமை அதிகாலை சென்னை இராதாகிருஷ்ணன் சாலையில் விகாஸ் ஆனந்த் என்ற இளைஞரும், அவரது நண்பர் ஒருவரும் போதையில் ஓட்டி வந்த மகிழுந்து மோதி 12 ஆட்டோக்கள் சேதமடைந்தன. அவற்றில் உறங்கிக் கொண்டிருந்த ஆறுமுகம் என்ற ஆட்டோ ஓட்டுனர் உயிரிழந்தார். மேலும் 10 ஆட்டோ ஓட்டுனர்கள் படுகாயமடைந்தனர்.

சென்னையில் நடந்த இரு விபத்துக்களும் பணக்காரர்கள் நிகழ்த்தியவை என்பதால் அவை பரபரப்பு செய்தியாகின. ஆனால், இதேபோன்ற விபத்துக்கள் தமிழகம் முழுவதும் அடிக்கடி நிகழ்ந்து கொண்டிருக்கின்றன; அதனால் ஏராளமான அப்பாவிகள் கொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை.

குறிப்பாக சென்னையில் குடிபோதையில் மகிழுந்தை ஓட்டிச் செல்வதால் அதிக எண்ணிக்கையில் விபத்துக்கள் நடைபெற்றுள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு போதையில் வாகனம் ஓட்டியதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் 50% அதிகரித்திருக்கின்றன.

சென்னையில் 2015-ஆம் ஆண்டு முழுவதும் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 35,000 மட்டுமே. ஆனால், நடப்பாண்டில் ஆகஸ்ட் மாதம் வரை மொத்தம் 32,600 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக சென்னை மாநகரக் காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு நிறைவடைய இன்னும் 4 மாதங்கள் இருப்பதாலும், தீப ஒளி மற்றும் கிறிஸ்துமஸ் திருநாள்கள் இனிமேல் வரவிருக்கின்றன என்பதாலும் இந்த ஆண்டு இறுதிக்குள் குடித்து விட்டு வாகனம் ஓட்டியதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டி விடும் என்று சென்னை மாநகரக் காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு தெரிவித்திருக்கிறது.

சாலை விபத்துக்கள் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளில் தமிழகம் தான் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. தமிழகத்தில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் குறைந்துள்ள போதிலும், விபத்துக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.

இதற்குக் காரணம் தமிழகத்தில் வரைமுறையின்றி திறக்கப்பட்டுள்ள மதுக்கடைகள் தான் என்பதை மறுக்க முடியாது. பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்த வழக்குகளின் பயனாக தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்த 604 மதுக்கடைகள் மூடப்பட்டன.

ஆனால், மாநில நெடுஞ்சாலைகளிலும், மற்ற சாலைகளிலும் மிக அதிக எண்ணிக்கையில் மதுக்கடைகள் இருப்பதாலும், தேசிய நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட கடைகள் சாலைகளில் இருந்து சற்று தொலைவில் திறக்கப்பட்டதாலும் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறதே தவிர ஒரு போதும் குறையவில்லை என்பதை புள்ளி விவரங்கள் உறுதி செய்கின்றன.

தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்தப் போவதாக கூறி ஆட்சிக்கு வந்த அதிமுக, அதற்கான நடவடிக்கைகளை உண்மையான அக்கறையுடன் மேற்கொள்ளவில்லை. ஆட்சிக்கு வந்தவுடன் மது விற்பனை 2 மணி நேரம் குறைக்கப்பட்டதுடன், 500 மதுக்கடைகளும் மூடப்பட்டன.ஆனால், அதனால் தமிழகத்தில் மது விற்பனை எந்த வகையிலும் குறையவில்லை என்பது தான் உண்மை. மதுக்கடைகள் மூடப்பட்டதால் மது விற்பனையிலும், அதன் மூலம் கிடைக்கும் வருவாயிலும் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டதா? என்பது பற்றி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி எழுப்பப்பட்ட வினாக்களுக்கு டாஸ்மாக் நிறுவனம் பதிலளிக்க மறுக்கிறது.

கடந்த ஜூன் மாத விற்பனை குறித்து தகவல்களை கூட தெரிவிக்க மறுக்கும் டாஸ்மாக் நிறுவனம், கணக்குகள் தணிக்கை செய்யப்படுவதாகக் கூறி மக்களை ஏமாற்றி வருகிறது.

தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு தயாராக இல்லை என்பதையே இது காட்டுகிறது. மதுவின் கொடுமையால் அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வருவாய் ஈட்டுவதற்காக மது குடிக்கும் வழக்கத்தை ஊக்குவிக்கும் வகையிலான செயல்களில் அரசு ஈடுபடுவது முறையல்ல.

தமிழக மக்களின் நலன் கருதி, மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2-ஆம் தேதி முதல் தமிழகத்தில் முழு மதுவிலக்கை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லாவிடில் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும்"

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.