News
Loading...

லோக் ஆயுக்தாவைக் கொண்டுவர ஜெயலலிதாவுக்கு தைரியமில்லை!

லோக் ஆயுக்தாவைக் கொண்டுவர ஜெயலலிதாவுக்கு தைரியமில்லை!

ஊழலுக்கு எதிராக விசாரணை செய்யும் மாநில நீதி அமைப்பான லோக் ஆயுக்தாவைக் கொண்டுவருவதாக அ.தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையில் சொன்னது எல்லாம் சுத்தப் பொய். மக்களை ஏமாற்றும் போலி வாக்குறுதி அது. கவர்னர் உரையில்கூட அது பற்றி சொன்னார்கள். ஆனால், எதுவும் செய்யவில்லை” என்று கொந்தளிக்கிறார் எஸ்.ஏ.என்.வசீகரன். 

ஆம் ஆத்மி கட்சியின் மாநில ஒருங்கிணைப்​பாளரான வசீகரன், தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டத்தை உடனடியாகக் கொண்டுவர வேண்டும் என்று கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கினார். 10 நாட்களாக உண்ணாவிரதம் இருந்தும், அரசிடம் எந்த அசைவும் இல்லை. எனவே, கடந்த 6-ம் தேதி போயஸ் கார்டனில் முற்றுகைப் போராட்டம் நடத்த முயன்றார். அப்போது, அவரை போலீஸார் கைது செய்தனர். 

கைது செய்யப்படுவதற்கு முன் வசீகரனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

“லோக் ஆயுக்தாவுக்காக பல போராட்டங்களை நடத்திய அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆட்சிதான் டெல்லியில் நடக்கிறது. அங்கே கூட, லோக் ஆயுக்தா கொண்டுவரப்படவில்லை. உங்கள் போராட்டத்தால் இங்கு அதைக் கொண்டு​வர முடியும் என்று நினைக்கிறீர்களா?”

“கெஜ்ரிவால் தலைமையிலான அரசு லோக் ஆயுக்தா சட்டத்தை கொண்டு வரவேண்டும் என்று சட்டசபையில் அறிக்கை வெளியிட்டது. ஆனால், அது பிரதமர் மோடியால் தடுத்து நிறுத்தப்பட்டது. உள்துறை அமைச்சகம், ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைக்கவில்லை. ஒப்புதல் கிடைத்துவிடக்கூடாது என்பதற்காக மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்ப்பட்டு வருகிறது. அதுபோலதான், தமிழகத்திலும் லோக் ஆயுக்தா வந்துவிடக்கூடாது என்று தமிழக அரசு செயல்படுகிறது. அதற்காகப் பல போராட்டங்களை நடத்திவிட்டோம். இனி, அது பற்றிய விழிப்பு உணர்வை மக்களிடம் கொண்டுவர வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்.”

“அப்படி என்றால் மோடியும், ஜெயலலிதாவும் நினைத்தால்தான் ஊழலை ஒழிக்க முடியுமா?”

“இவர்கள் இருவரும் ஊழலுக்கு எதிரானவர்கள் அல்ல. ஊழலின் ஆணிவேரே இவர்கள்தான். லோக்ஆயுக்தா, லோக்பால் சட்டங்களை அமல்படுத்தினால் இவர்களின் பதவிகள் பறிபோவது உறுதி. எனவே, ஒருபோதும் அவற்றை இவர்கள் கொண்டுவரமாட்டார்கள்.”

“ ‘தமிழ்நாடு, ஊழல் இல்லாத மாநிலம் என்று தைரிய​மாகச் சொல்வேன்’ என முதலமைச்சர் ஜெயலலிதா அடிக்கடி சொல்கிறாரே?”

ஜெயலலிதா

“தைரியமான முதலமைச்சரா..? ஜெயலலிதாவா? உண்மையிலே அவர்கள் தைரியமற்ற முதலமைச்சர். தைரியமான முதலமைச்சர் என்றால் லோக்ஆயுக்தாவை உடனே கொண்டுவர வேண்டும். அதற்கு தைரியம் இருக்கிறதா? இந்த சட்டம் ஊழலுக்கு எதிரானது என்ற பயமா? அல்லது தனக்கு எதிரானதுன்னு நினைக்குறாங்களோ என்னவோ?

“உங்க போராட்டதுக்குத் தமிழக அரசின் பதில் என்ன?”

“மனிதநேயம் அற்றவங்கதான் இப்போ அரசியல்ல இருக்காங்க, ஒருத்தன் 10 நாளா சாப்பிடாம ஊழலுக்கு எதிரா உண்ணாவிரதம் இருக்கான், என்னா? ஏதுன்னு? கூட கேக்காத ஒரு யோக்கியமற்ற அரசுதான் தமிழ்நாட்டுல இயங்கிக்கிட்டு இருக்கு. ஆம் ஆத்மிலாம் ஒரு கட்சி! அதுல ஒருத்தன் உண்ணாவிரதம் இருக்குறதுலாம் பெரிய விஷயமான்னுக் கூட நினைக்கலாம், ஆனால் ஊழல் பெருகிப்போன தமிழ்நாட்டுல ஊழல்வாதிகளை மக்களுக்கு அடையாளம் காட்டும்போதுதான் தெரியும் ஆம்ஆத்மி கட்சியோட பலம்.”

“தமிழ்நாட்டில் நடக்கும் அரசியல் மற்றும் சட்ட நடவடிக்கைகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”

“இங்கே எந்த அரசியல் கட்சியும் மக்களுக்காக இயங்குவது இல்லை. தான் நல்லா இருக்க வேண்டும், தன் குடும்பம் நல்லா இருக்க வேண்டும் என்று நினைத்து செயல்படுகிறார்களே தவிர, மக்கள் நல்லா இருக்கவேண்டும் என்று யாரும் நினைப்பதே இல்லை. சட்டம் ஒழுங்கைப்பற்றிச் சொல்லவா வேண்டும்? எங்கே பார்த்தாலும், கொலை, கொள்ளை, குற்றவாளிகளுக்கு இங்கு தண்டனை என்பதே கிடையாது, குற்றவாளிகள் யார் என்று கண்டுபிடிப்பதும் கிடையாது, அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் வாங்குறதுக்கும், ஊழல் செய்யுறதுக்குமே நேரம் சரியா இருக்கு, அப்பறம் எப்படி அவங்க சட்டம் ஒழுங்கை பாதுகாப்பார்கள்?”

“உங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்?”

“மக்களிடம் எப்படியெல்லாம் லோக் ஆயுக்தாவை பற்றியும், தமிழக ஊழல் பற்றியும், அரசின் செயல்பாடுகளைப் பற்றியும் கொண்டுசெல்ல முடியுமோ அப்படியெல்லாம் கொண்டு செல்வோம். இந்தியாவை ஒரு லஞ்சம், ஊழல் இல்லா நாடாக மாற்ற ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும்.”

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...