News
Loading...

மழை இல்லாததால் விலைநிலங்களாகும் விளைநிலங்கள்

மழை இல்லாததால் விலைநிலங்களாகும் விளைநிலங்கள்

காரியாபட்டி பகுதியில், போதிய மழை இல்லாததால், விலை நிலங்கள் விளைநிலங்களாக மாறி வருகின்றன. இதனால், விவசாயிகள் வாழ்வாதாரம் தேடி நகரங்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பகுதியில் உள்ள கிராமங்களில் பெரும்பாலும் விவசாயத்தை முக்கிய தொழிலாக செய்து வருகின்றனர். நெல், சோளம், கம்பு, பருத்தி, கடலை உள்ளிட்ட தானியங்கள் பயிரிடப்படுகின்றன. பருவமழையை நம்பியே விவசாயம் நடந்து வருகிறது. கம்பிக்குடி, பாப்பணம், மாந்தோப்பு, ஆவியூர், முடுக்கன்குளம், எஸ்,மரைக்குளம் உள்ளிட்ட கிராமங்கள் பெரியகண்மாய்கள் மூலம் நீர் பாசன வசதி பெற்று வந்தது. இந்த கண்மாயில் நீர் நிறைந்தால் ஆண்டுக்கு இருபோக விளைச்சல் நடைபெறும். இந்நிலையில், கடந்த 15 ஆண்டுகளாக பருவமழை போதிய அளவில் பெய்யவில்லை. 

தண்ணீர் பற்றாக்குறையில் விவசாயம் மெல்ல, மெல்ல அழிந்து வருகிறது. கண்மாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டு அடையாளம் இழந்து வருகிறது. தண்ணீர் வரத்துக்கால்வாய்கள் தூர்வாரப்படாமல் தூர்ந்து கிடக்கின்றன. விவசாயம் பொய்த்ததால், விவசாயிகள் வாழ்வாதாரம் தேடி நகரங்களுக்குச் செல்லும் நிலை உள்ளது. விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாக மாறி, சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து வருகின்றன. பெரும்பாலான விளைநிலங்கள் விலை நிலங்களாக மாறிவருகின்றன. இந்த பகுதி விவசாயத்தை மேம்படுத்த கம்பிக்குடி, தென்னம்பட்டி கால்வாய்திட்டம், கிருத்துமால் நதித்திட்டம் உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றாமல் அரசு ஒதுக்கிய நிதியை வீணடித்து விட்டனர். 

எனவே, விவசாயிகள் இடம்பெயர்வை தடுக்க, முக்கிய கால்வாய் திட்டங்களை நடத்த சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘கடன் வாங்கி விவசாயம் செய்கிறோம், பருவமழை பொய்த்ததால் விளைச்சல் இல்லை. கிணற்று பாசனத்தில் விவசாயம் செய்தவர்களும், நிலத்தடிநீர் குறைவால், பக்கத்து விளைநிலங்களுக்கு தண்ணீர் தருவதற்கு தயங்குகின்றனர். விவசாயம் பொய்த்ததால், வங்கியில் வாங்கிய கடனை அடைக்கமுடியாமலும், விளைச்சல் இல்லாமல் நஷ்டப்பட்டு வருகிறோம். மேலும், நீர்வரத்து கால்வாய்களும் சீமைக்கருவேல் மரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகளின் இடம்பெயர்வை தடுக்க, விவசாயத்தை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.