News
Loading...

வியப்பூட்டும் லிஃப்ட்கள்!

லிஃப்ட்டில் செல்லும்போது ஆபீஸ் வரும் மாடியைத்தான் நினைத்திருப்போம். ஆனால் அந்த லிஃப்ட்களின் சாதனைகள், வெரைட்டிகள் பற்றி எப்போதாவது ஏதேனும் நினைத்திருக்கிறோமா? ஆனால் யோசிக்கிற கனவான்கள் சும்மாயிருப்பார்களா என்ன! மலையில், மீன் தொட்டிக்கு நடுவில் என கிரியேட்டிவிட்டியை தூள் பரத்தியிருக்கிறார்கள்.

வியப்பூட்டும் லிஃப்ட்கள்

பைலாங் லிஃப்ட்: 

சீனாவின் தேசிய பூங்காவில் உள்ளது படத்திலுள்ள லிஃப்ட்! இந்த லிஃப்ட்டிற்கு ‘நூறு டிராகன்கள் எலிவேட்டர்’ என்ற செல்லப் பெயரும் உண்டு. கட்டிடங்களுக்கு வெளிப்புறமாகச் செயல்படும் உலகின் மிக உயரமான லிஃப்ட் என்ற பெருமையைப் பெற்றுள்ள இது, 330 மீட்டர் உயரத்திற்கு பயணிகளை ஒரே நிமிட நேரத்தில் அழைத்துச் சென்று சிலிர்ப்பூட்டுகிறது. 120 மில்லியன் யுவான் செலவில் இந்த லிஃப்ட் உலகின் பாரம்பரியமான மலை உள்ள இடத்தில் கட்டப்பட்டு உள்ளதால் இதற்கு எதிர்ப்புகளுக்கும் பஞ்சமில்லை. ஒரே நேரத்தில் 50 பேர் பயணிக்கலாம். சவாலே சமாளி!

கண்ணாடி லிஃப்ட்: 

ஸ்வீடனின் தலைநகரம் ஸ்டாக்ஹோமில் உலகின் மிகப்பெரிய கோள உருண்டை வடிவிலான கட்டிடமான ‘எரிக்ஸன் குளோப்’ உள்ளது. 2010ம் ஆண்டு கட்டப்பட்ட,  கடல் மட்டத்திலிருந்து 130 மீட்டர் உயரமான இந்தக் கட்டிடத்தில்  வெளிப்பக்கம் உச்சி வரை செல்ல ஏதுவாய் கண்ணாடி லிஃப்ட் உருவாக்கப்பட்டுள்ளது. கோள வடிவத்தில் இப்படி இரண்டு லிஃப்ட்கள், உருண்டை கட்டிடத்தின் உச்சிக்குச் செல்கின்றன. இதன் மீது ஏறிச் சென்று, ஸ்டாக்ஹோம் நகரின் அழகை அள்ளிப் பருகலாம். 

வியப்பூட்டும் லிஃப்ட்கள்

ஹாமட்ச்வாண்ட் லிஃப்ட்: 

சுவிட்சர்லாந்து நாட்டின் லூசெர்ன் பகுதியில் வெளிப்புறத்தில் அமைந்துள்ள மிக உயர்ந்த பார்வையாளர் பாயின்ட் இதுதான். ஐரோப்பாவின் மிக உயரமான இந்த ஹாமட்ச்வாண்ட் லிஃப்ட், நம்மை 153 மீட்டர் உயரத்திற்கு விண்ணில் அழைத்துச் செல்கிறது. கண்ணாடி சுவர்கள் கொண்ட இந்த லிஃப்ட்டில் பயணித்தபடி நகரை ஏரியல் வியூவில் ஏகாந்தமாக ரசிக்கலாம். லிஃப்ட்டில் ஒரே நேரத்தில் 8 பேர் பயணிக்கலாம். 30 நொடிக்கு 2.7 மீட்டர் உயரத்தில் பயணிக்கும் இந்த லிஃப்ட் மூலம் லூசெர்ன் ஏரி மற்றும் ஆல்ப்ஸ் மலைக்காட்சிகளை எக்ஸ்க்ளூசிவாக ரசிக்க முடிகிறது.

வியப்பூட்டும் லிஃப்ட்கள்

மேரியட் மார்க்யூஸ் லிஃப்ட்:

நியூயார்க்கின் மேரியட் மார்க்யூஸ் ஹோட்டலில் லிஃப்ட் விஷயத்தில் வித்தியாசமான அணுகுமுறை. ஹோட்டலில் உள்ள பல லிஃப்ட்டுகள் மூலம் மேலே பயணிக்கலாம். லிப்ட்டின் வேகம் குறிப்பிடப்பட்டு இருப்பதால் அதைப் பார்த்து தங்கள் தேவைக்கேற்ற லிஃப்ட்டில் ஏறலாம். பயணிப்பவர்களின் நேரத்தை பாதியாக குறைத்து, அவர்களை அசத்தி சபாஷ் வாங்குவதுதான் கம்பெனியின் திட்டம். லிஃப்ட்  கூண்டு கண்ணாடி கேபினால் ஆனது. நிமிடத்திற்கு 304 மீட்டர் தூரம் கடக்கிறது. தடையற வேகம்!

முதல் பாட்டர் நோஸ்டர் லிஃப்ட்:

லண்டனில் 1876ம் ஆண்டு இந்த லிஃப்ட் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. தன்னைத்தானே சுற்றியபடி மேலும், கீழும் சென்று வரும். இரண்டு நபர்கள் பயணிக்க முடியும் இதன் சுற்று வேகம் வினாடிக்கு 0.45 மீட்டர். அதாவது கண்காட்சிகளில் காணப்படும் ஜெயன்ட் வீல்களைவிட மெதுவாகத்தான் சுற்றும். காதலர் லிப்ட்!

ஈபிள் டவர் லிஃப்ட்: 

உலகின் மிக ரொமான்டிக் லிஃப்ட் எனலாம் இதனை! பாரீஸில் 120 வருடங்களாக ஈபிள் டவர் செயல்பாட்டில் உள்ளது. இந்த டவரின் தூண்களுக்கு இடையே பயணிக்கும் லிஃப்ட் மூலம் தினமும் 20 ஆயிரம் பேர் பயணிக்கின்றனர்.  ஈபிள் டவர் உச்சியைத் தொட, படிகளும்  
உள்ளன. ஆனாலும் பலர் லிஃப்ட்டையே தேர்வு செய்கின்றனர். அலுக்காத லிஃப்ட் இது.

ராடிசன் ப்ளூ ஹோட்டல் லிஃப்ட்: 

ஜெர்மனி தலைநகரமான பெர்லினில் உள்ள இந்த ஹோட்டலில்தான் இந்த மீன்காட்சியகத்தோடு இணைந்த லிஃப்ட் உள்ளது. பெரிய உருளை வடிவத்தில் 25 மீட்டர் உயரத்தில், 10 லட்சம் லிட்டர் நீரில் நீர்வாழ் உயிரினங்கள் வாழும் இந்த மீன் காட்சியகம் உலகிலேயே பெரியது ஆகும். 1500 மீன்கள் உட்பட 97  வகை கடல்வாழ் உயிரிகள் இங்குள்ளன.  இங்குள்ள லிஃப்ட்டின் சிறப்பே, இந்தக் காட்சி மீன்சாலைக்கு ஊடாக இயங்குவதுதான். போரடிக்காமல், நீர்வாழ் உயிரினங்களை ரசித்தபடிபயணிக்கலாம். 2004ல் இந்த லிஃப்ட், மற்றும் மீன்காட்சிச்சாலை கட்டி முடிக்க ஆன செலவு 12.8 மில்லியன் டாலர்களாகும். சுற்றுலா லிஃப்ட்!

லசெர்டா லிஃப்ட்: 

1873ம் ஆண்டு முதல் பிரேசிலின்  துறைமுகத்திற்கும், சால்வடார் நகரின் பழைய டவுனுக்கும் இடையே செல்லும் வகையில் இந்த லிஃப்ட் இயங்கி வருகிறது. முதலில் கயிறு மற்றும் உருளை வடிவமைப்பில் இந்த லிஃப்ட் செயல்பட்டாலும் 1928ஆம் ஆண்டிலிருந்து பல்வேறு கட்டமாக மாற்றப்பட்டு இன்று நவீன வடிவமைப்புக்கு மாறிவிட்டது. 72 மீட்டர் உயரத்தை இது 30 வினாடிகளில் சென்றடைகிறது. வேகம் என்பதைத் தாண்டி ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் லிஃப்ட் அவசியம்தானே?

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.