News
Loading...

இருண்ட மரணங்கள்... வெளிச்சத்துக்கு வரும் ‘கருப்பு’ முருகானந்தம்!

இருண்ட மரணங்கள்... வெளிச்சத்துக்கு வரும் ‘கருப்பு’ முருகானந்தம்!

சுவாதி கொலை செய்யப்பட்டார். அதற்குக் காரணம் என்று குற்றச்சாட்டப்பட்ட ராம்குமார் மர்மமான முறையில் இறந்து போனார். சுவாதியை ராம்குமார் காதலித்தார், அதனை சுவாதி மறுத்தார், அதனால் கோபம் அடைந்த ராம்குமார் சுவாதியை கொலை செய்தார்... இதுதான் போலீஸ் சொல்லப்போகும் குற்றப்பத்திரிகை. சுவாதி கொலை செய்யப்பட்டது முதல் இன்னொரு விஷயம் பேசப்பட்டது. ‘முஸ்லிம் இளைஞர் பிலாலை சுவாதி காதலித்தார். அதனை அவரது பெற்றோர் ஏற்கவில்லை. இந்தப் பின்னணியில் சுவாதி கொலை செய்யப்பட்டார்’ என்பது இன்னொரு வட்டாரம் சொல்லும் செய்தி. இதைத்தான் பிரான்ஸை சேர்ந்த தமிழச்சி சொல்லி  வருகிறார். சுவாதியின் பெற்றோர், மீடியாவை சந்திக்க மறுத்தே வந்தார்கள். போலீஸும் ராம்குமாரைத் தாண்டி எது பற்றியும் பேசத் தயாராக இல்லை. இந்த நிலையில், ‘கருப்பு’ முருகானந்தம் தலை உருண்டது. 

‘சுவாதி படுகொலைக்குக் காரணம் கருப்பு முருகானந்தம்தான். சுவாதி, மதம் மாறி திருமணம் செய்ய முடிவு எடுத்த காரணத்தால்தான் கொல்லப்பட்டார். கொலை நடந்த பகுதியில் சி.சி.டி.வி-யில் பதிவான மர்மநபர் குறித்த காட்சியை பத்திரிகைகள் வெளியிட்டன. அதன்பின், ராம்குமார் நடந்து போவதாகக் கூறி மற்றொரு காட்சியை வெளியிட்டனர். முதலில் காட்டிய மர்ம நபர் யார்? அவர் கருப்பு முருகானந்தத்தின் கூலிப்படையைச் சேர்ந்தவர்...’ எனத் தகவல்களை வெளியிட்டு அதிர்ச்சியைக் அதிகரித்து வருகிறார் தமிழச்சி. இந்தத் தகவல்கள் சமூக வலைத்தளங்களில் சூட்டைக் கிளப்பி வருகின்றன. 

அந்த  கருப்பு முருகானந்தம், பி.ஜே.பி-யின் மாநில பொதுச் செயலாளராகவும், சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகத்தின் அறங்காவலராகவும் இருக்கிறார். அவரிடம் பேசினோம்.

“உங்கள்  மீது சர்ச்சை வளையம் எழுப்பப்படுவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“சுவாதி கொலை வழக்கு தொடர்பாகப் பல சந்தேகங்களை மீடியாக்கள் எழுப்பி வருகின்றன. அதில் என்னைத் தொடர்புபடுத்தி சில கும்பல்கள் திட்டமிட்டு வேலை செய்கின்றன. என்னை ஒரு கொலைகாரனாகச் சித்தரிக்கும் முயற்சி நடக்கிறது. ‘மதம் மாறினால் இந்துத்துவ அமைப்பினர் கொலைசெய்வார்கள்’ என்ற தோற்றத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள். மதம் மாறினால் கொலை செய்வது என்பது இஸ்லாமிய பயங்கரவாதிகள் செய்யும் வேலை. அப்படி ஒரு காரியத்தை எங்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. சுவாதி கொலை வழக்கில் என்னைத் தொடர்புபடுத்தி, இணையதளத்தில் செய்திகள் வெளியானதைச் சாதாரணமாகத்தான் எடுத்துக்கொண்டேன். ஆனால், பி.ஜே.பி மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் பற்றி தவறான தகவல்களை  விதைத்து, கெட்ட இமேஜை உருவாக்கும் காரியத்தில் தமிழச்சி போன்றவர்கள் ஈடுபடுகிறார்கள். தலித் மக்களுக்கு நாங்கள் விரோதி என்பதுபோல செய்தி பரப்புகிறார்கள்.”

“ ‘சுவாதியின் தந்தையை உங்களுக்குத் தெரியும் என்றும், அவர் மூலமாகத்தான் படுகொலை நடந்தது’ என்றும் இணையத்தளத்தில் பதிவுகள் வெளியானதே?”

சுவாதி

இதைப் பற்றி முதலில் திலீபன் என்பவர்தான் ஃபேஸ்புக்கில் பதிவுபோட்டார். ‘சுவாதியின் அப்பா இந்து இயக்கத்தில் இருக்கிறார். மதம் மாறுவதற்கு சுவாதி திட்டமிட்டதால், கருப்பு முருகானந்தம் தலைமையில் கூலிப்படையை அமைத்தார்’ என திலீபன் எழுதியிருந்தார். அதைக் கேள்விப்பட்டபோது, எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. சுவாதியின் அப்பாவை நான் பார்த்ததே இல்லை. அவர் இந்து அமைப்பில் இருக்கிறாரா என்பதையே இப்போதுதான் தெரிந்துகொண்டேன். தவறான குற்றச்சாட்டை முன்வைப்பது மட்டுமல்லாமல், தொலைக்காட்சி விவாதத்தில் திலீபன் என்பவர் என்னை ஒருமையில் பேசுகிறார். தேசியக் கொடியை எரித்தவர்களை எல்லாம் விவாதத்தில் அமரவைக்கிறார்கள். இவர்களோடு மார்க்ஸ் என்ற பெரியவரும் இருந்தார். அவர் உண்மை கண்டறியும் குழுவில் இருக்கிறாராம்.  ஒருநாள்கூட அவர் உண்மையைச் சொல்லி நான் பார்த்ததில்லை”.

‘‘சுவாதியின் அப்பாவை உங்களுக்குத் தெரியுமா?”

‘‘தெரியாது!”

“ இந்த வழக்கில் சி.சி.டி.வி காட்சியில் தென்படுபவர் மணி என்றும், அவர் உங்கள் அணியைச் சேர்ந்தவர் என்றும் சொல்கிறார்களே?”

“தமிழ்நாட்டில் மணி என்ற பெயரில் ஆயிரம் பேர் இருப்பார்கள். தமிழச்சி என்பவர் சொல்லும் மணி யார் என்று தெரியவில்லை. ‘ராம்குமார் கழுத்து அறுக்கப்பட்டபோது, கருப்பு முருகானந்தம் ஆட்களும் அங்கு இருந்தனர். சிறை அதிகாரிகள் துணையோடு ராம்குமாரை கருப்பு முருகானந்தம்தான் கொன்றார்’ என்றெல்லாம் கற்பனையாக எழுதுகிறார்கள். ஆதாரம் இருந்தால், இவர்கள் காவல் துறையிடம் புகார் கொடுக்கட்டும். நீதிமன்றத்தில் ஆதாரங்களைச் சமர்ப்பிக்கட்டும். மாறாக, இணையத்தைப் பயன்படுத்தி, பொய்யான தகவல்களைப் பரப்பும் தமிழச்சி, திலீபன் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்”.

“உங்கள் மீது 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாகச் சொல்கிறார்களே?”

“என் மீது கொலை வழக்கு உள்ளதாக எழுதுகிறார்கள். அந்த ஒரு கொலை வழக்கிலும், ‘நான் நிரபராதி’ என 10 ஆண்டுகளுக்கு முன்பே நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது. ‘என் மீது 38 வழக்குகள் உள்ளன. அதில் 20 வழக்குகள் நிலுவையில் உள்ளன’ என்று பத்திரிகைகளில் எழுதுகிறார்கள். விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் உள்பட சமுதாயப் போராட்டங்களை முன்னெடுக்கும்போது கொலை மிரட்டல், கொலை முயற்சி என சில பிரிவுகளில் காவல் துறையினர் வழக்குப்போடுவார்கள். அதையே காரணமாக வைத்துக்கொண்டு, ‘என் மீதுள்ள வழக்குகளைப் பார்த்தாலே, சம்பவத்தில் அவருக்குத் தொடர்பு இருக்கிறது. இதைப் பற்றி காவல் துறை விசாரித்ததா?’ எனப் பேசுகிறார் மார்க்ஸ். ஒருவர் மீது எதற்காக வழக்குப் போட்டார்கள் என்ற அடிப்படையைக்கூட அறிந்து கொள்ளாமல் பேசுவதை நினைத்தால் வேதனையாக இருக்கிறது”.

ராம்குமார்

“உங்களைக் குறிவைத்துப் பேசப்படும் விவகாரங்கள் குறித்து, பி.ஜே.பி தலைமை எந்தக் கருத்தையும் சொல்லவில்லையே?”

“மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், டி.ஜி.பி-யிடம் பேசியிருக்கிறார். இதுகுறித்து டி.ஜி.பி-யை நேரில் சந்தித்துப் பேசுமாறும் அறிவுறுத்தி உள்ளார். ‘சாதாரணமாக அவதூறு பரப்புகிறார்கள்’ என்றுதான் இவ்வளவு நாள் அமைதியாக இருந்தேன். இனி நாங்கள் அமைதியாக இருக்க முடியாது.”

கருப்பு வளர்ந்த வரலாறு!

கருப்பு முருகானந்தத்தின் பின்னணி குறித்து அவரது சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் ஜாம்பவான் ஓடையில் விசாரித்தோம். 

“முத்துப்பேட்டை ஒன்றிய சேர்மனாக இருந்த கல்யாணம் என்பவருடன் ஆரம்பக் காலத்தில் முருகானந்தம் இருந்தார்.  ஒருகாலத்தில் முருகானந்தம் சாராயம் காய்ச்சினார். சாராய வழக்கில் கைதுசெய்ய எங்கள் ஊருக்கு போலீஸார் வந்தார்கள். ஆள் தெரியாமல், இன்னொரு முருகானந்தத்தை கைது செய்தனர். எல்லோரும்போய் இது வேறு முருகானந்தம் என்று அவரை மீட்டுவந்தோம். அப்புறம்தான், இந்த முருகானந்தத்தை கைதுசெய்தனர். இவர் கருப்பாக இருப்பதால், கருப்பு முருகானந்தம் என்று போலீஸாரே பெயர் சூட்டினர். முத்துப்பேட்டையில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்பினருடன் இவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. பிறகு, பி.ஜே.பி-யின் தற்போதைய தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா வுடன் நெருக்கமாகி, பி.ஜே.பி-யில் இணைந்தார். பி.ஜே.பி-யின் ஒன்றியச் செயலாளர், மாவட்டச் செயலாளர் என படிப்படியாக உயர்ந்தார்.

டெல்டா பகுதியில் தனி சாம்ராஜ்ஜியம் நடத்திவரும் இவர்தான், முத்துப்பேட்டையில் அடிக்கடி ஏற்படும் மத ரீதியான பதற்றத்துக்குக் காரணம்.  ஹெச்.ராஜாவுடன் கருத்து மோதல் ஏற்பட்டு, பொன்.ராதாகிருஷ்ணனிடம் நெருக்கமானார். இப்போது, பி.ஜே.பி-யின் மாநிலப்  பொதுச்செயலாளர் அளவுக்கு உயர்ந்துள்ளார். தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகச் சொல்லி போலீஸ் பாதுகாப்பைப் பெற்றுள்ளார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி. சார்பில் தஞ்சை தொகுதியில் போட்டியிட்ட இவருக்கு ஆதரவாக தற்போதைய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கே பிரசாரம் செய்தார்.  இவர் மீது மத உணர்வைத் தூண்டுதல், வழிப்பறி, திருட்டு உட்பட ஏராளமான வழக்குகள் உள்ளன. குண்டர் சட்டம், தேசியப் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றில் இவர் முன்பு கைது செய்யப்பட்டு இருக்கிறார்” என்றார்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.