News
Loading...

மீண்டும் மழை... தமிழகம் தயாரா?

மீண்டும் மழை... தமிழகம் தயாரா?

இன்னும் சில வாரங்களில் `ஓர் ஆண்டுக்கு முன்னர் உங்கள் நினைவுகள்' என ஃபேஸ்புக் பக்கம் உங்களுக்கு நினைவுப் படுத்தப்போகிறது. ஆம்... 2015-ம் ஆண்டின் நவம்பர், டிசம்பர் மாத மழை நம் நினைவுகளில் ஏற்படுத்திப் போன தாக்கத்துக்கு விரைவில் வயது ஒன்று! 

பெரு மழைக்குப் பிறகு, அடுத்த பருவமழைக்கு இடையே தமிழ்நாடு அரசிடம் இருந்த அவகாசம் எட்டு மாதங்கள். இந்த எட்டு மாதங்களில் மீண்டும் ஒரு மழையைத் தாங்கும் வகையில் சென்னையை எப்படி எல்லாம் தயார்படுத்தியிருக்கிறது அரசு? 

சென்னை வெள்ளத்தின்போது கடுமையாகப் பாதிக்கப்பட்டவர் மாற்றுத்திறனாளி சுனிதா. கோட்டூர்புரத்தில் சர்க்கர நாற்காலியில் இருந்தபடி, வெள்ளத்தில் தத்தளித்த அவரை, பெரும் சிரமப்பட்டு இளைஞர்கள் சிலர் காப்பாற்றினர். அவர் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளருக்கு, `மழை போன்ற இயற்கைப் பேரழிவு காலங்களில் எங்களைப் போன்ற மாற்றுத்திறனாளிகளை மீட்பதற்கு அரசிடம் என்ன திட்டம் இருக்கிறது? பேரிடர் மேலாண்மை கமிட்டியில் மாற்றுத்திறனாளிகளின் பிரதிநிதியாக யாராவது ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறாரா?' எனக் கேட்டு, மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார். 

ஆனால், எட்டு மாதங்களுக்குப் பின்னரும் தலைமைச் செயலாளரிடம் இருந்து அவருக்கு பதில் எதுவும் வரவில்லை. தமிழ்நாடு அரசு கடந்த எட்டு மாதங்களாக என்ன செய்துகொண்டிருந்தது என்பதற்கு இந்தச் சம்பவம் ஓர் உதாரணம் மட்டுமே. 

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியர் தலைமையில், மாவட்டப் பேரிடர் மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு, மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித் துறை, உள்ளாட்சித் துறை உள்ளிட்ட துறை அதிகாரிகளுடன் இணைந்து, மாவட்ட அளவிலான பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பெருமழையின் துயரில் சிக்கிய சென்னை மாவட்டத்தில், அப்படி ஒரு கூட்டமே இதுவரை நடத்தப்படவில்லை. சென்னை மாவட்டத்தில் `சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மைக் குழு, கலெக்டர் தலைமையில் செயல்படுகிறது’ என தேசியப் பேரிடர் மேலாண்மை இணையதளத்தில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், இப்போது சென்னையில் மாவட்ட ஆட்சியரே இல்லை. மாவட்ட ஆட்சியர் பதவி காலியாக இருக்கிறது. பேரிடர் மேலாண்மைக் குழு பற்றி கேட்டதற்கு, அப்படி ஒரு குழு இருப்பதாக அங்கு இருப்பவர்களுக்குத் தெரியவில்லை. மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலகத்தில் கேட்டபோது, அவசரகால உதவி எண் மட்டும் கொடுத்தார்கள். அந்த எண் தற்போது அவுட் ஆஃப் ஆர்டர். இது, சென்னை மாவட்ட நிலவரம்.

 காஞ்சிபுரம் மாவட்டத்தில்...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சென்னை புறநகர் பகுதிகள்தான், மழை வெள்ளத்தில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டன. பேரிடர் மேலாண்மை குறித்த ஆலோசனைக் கூட்டம், கடந்த ஏழு மாதங்களில் ஒரு முறைகூட நடக்கவில்லை. இது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தை நாம் தொடர்புகொண்டு கேட்டதும், கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி எந்தவித முன்னேற்பாடும் இன்றி துணை ஆட்சியர் பர்கத் பேகம் தலைமையில் கூட்டத்தை அவசர அவசரமாக நடத்தியிருக்கிறார்கள். 

பாதிக்கப்பட்ட பகுதிகளில் என்ன நடவடிக்கைகள்?

தாம்பரம் முடிச்சூரைச் சுற்றி ஓடும் கால்வாய், அடையாறு ஆற்றில் சேருகிறது. இந்தக் கால்வாய் தூர்வாரப்படாதது, ஆக்கிரமிக்கப்பட்டது ஆகியவற்றின் காரணமாக முடிச்சூர் தத்தளித்தது. கால்வாய் அருகே குடிசைகள் போட்டுத் தங்கி இருந்த அப்பாவி மக்களை மட்டும், அங்கு இருந்து துரத்திவிட்டார்கள். ஆனால், எட்டு மாதங்களுக்குப் பின்னரும் கால்வாய் தூர்வாரப்படவே இல்லை. 

செங்கல்பட்டு நகராட்சிக்கு உள்பட்ட கால்வாய்கள் இன்னும் தூர்வாரப்படவே இல்லை. அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் நிரந்தரமான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. ``போரூர் ஏரி நிரம்பியதால் போரூர் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இன்னும்கூட போரூர் ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறும் வழி எதுவும் முறையாக இல்லை. இந்த ஆண்டும் மழை பெய்தால், போரூர் நிச்சயமாகப் பாதிக்கப்படும்'' என்கிறார்கள் அந்தப் பகுதிவாசிகள். 

சூளைமேடு பகுதியில் விருகம்பாக்கம் கால்வாய் உள்ளது. இது, ஒரு மழைநீர் வடிகால் கால்வாய்; கூவம் ஆற்றில் சென்று சேரும் வகையில் கட்டப்பட்டுள்ளது. ஆனால், இந்தக் கால்வாயில் கோயம்பேடு அருகே உள்ள பெரிய ஹோட்டல்கள், கழிவுநீரைக் கலக்கவிடுகின்றன. அதனால் இப்போது இந்தக் கால்வாய், கழிவுநீர் கால்வாயாக மாறிவிட்டது. கால்வாயில் உள்ள கழிவுகளை அப்புறப்படுத்தி, தூர்வார வேண்டும் என்று மக்கள் கோரிக்கைகள் விடுத்தபோதிலும் மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவே இல்லை. 

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் 

தென் சென்னை புறநகரில் உள்ள சுமார் 20 ஏரிகளின் தண்ணீர், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் சென்று சேருகிறது. இந்தச் சதுப்பு நிலத்தின் பெரும்பாலான பகுதி, இப்போது வனத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. இன்னும் குறிப்பிட்ட சில பகுதிகள், மாநகராட்சி குப்பை கொட்டும் இடமாக உள்ளது. அதையும் வனத்துறையிடம் ஒப்படைத்து முறையாகப் பராமரித்தால் மட்டுமே, இங்கு வெள்ள பாதிப்பைத் தடுக்க முடியும். 

எட்டு ஆண்டுகளாகத் தொடரும் பணி

வேளச்சேரி-தரமணி 100 அடி சாலையின் பணிகள், எட்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, இந்தப் பகுதிகளில் முறையான வடிகால் வசதிகள் மேற்கொள்ளப்படவில்லை. வேளச்சேரி வெள்ளத்தில் மிதக்க இந்தச் சாலைப் பணிகள்தான் காரணம். இன்னும் இந்தச் சாலைப் பணிகள் முடிக்கப்படவில்லை.

மீண்டும் மழை... தமிழகம் தயாரா?

``சென்னை புறநகர் பகுதியை `ecological hotspot' எனச் சொல்வார்கள். அதாவது சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி என்று அர்த்தம். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மூன்று மாவட்டங்களிலும் மொத்தமாக 3,600 ஏரிகள் இருந்ததாக வரலாற்று ஆய்வுகள் கூறுகின்றன.

இப்போது 3,000 ஏரிகள் இருக்கின்றன. ஏரி என்றால், ஏரி மட்டும் அல்ல; ஏரி, நீர்பிடிப்பு, வரத்துக்கால்வாய், உபரிநீர் கால்வாய், நீர்பரப்புப் பகுதி, எதுவாய், மதகு, கலங்கல், ஏரிக்கரை இவ்வளவும் சேர்ந்ததுதான் ஏரி. இப்போது ஏரியைத் தவிர ஏரியின் துணைப் பகுதிகளான நீர்பிடிப்பு, கால்வாய் எல்லாமே ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றன. ஏரியையாவது பாதுகாக்க வேண்டும். ஏரிகளைக் காப்பது நமக்கு இரட்டை நன்மை. தண்ணீர் தேவை என்பது ஒரு நன்மை; வெள்ளம் வருவதைத் தடுப்பது இன்னொரு நன்மை. நாம் இரட்டை நன்மை பெறப்போகிறோமோ, இரட்டை நஷ்டம் அடையப்போகிறோமோ என்பதுதான் நமது கேள்வி'' என்கிறார் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் ஜனகராஜன். இவர் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஏரிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டுவருபவர். 

``சென்னை புறநகரில் உள்ள ஏரிகளின் மூலம் 75 டி.எம்.சி தண்ணீர் சேகரிக்க முடியும். ஏரிகளில் தண்ணீர் இருந்தால், நிலத்தடி நீர் அதிகரிக்கும். ஆனால், அதை விட்டுவிட்டு நெமிலியில் கடல்நீரைக் குடிநீராக மாற்றும் திட்டத்தைச் செயல்படுத்துகின்றனர். நினைத்த இடத்தில் ஒரு கட்டடம் வேண்டுமானால் கட்ட முடியுமே தவிர, நம்மால் ஏரியை அப்படி உருவாக்க முடியாது. 

வட சென்னையில் கொசஸ்தலை ஆறு, தென் சென்னைக்கு அடையாறு, மத்திய சென்னைக்குக் கூவம் என எந்த ஒரு நகருக்கும் இல்லாத வகையில் சென்னை நகருக்குள் மூன்று ஆறுகள் ஓடுகின்றன. ஆறு என்பது வெறும் ஆறு மட்டும் அல்ல. ஆற்றின் கரைகள் காப்பாற்றப்பட வேண்டும். இப்போது என்ன செய்திருக்கிறார்கள் என்றால், ஆற்றின் கரைகளில் உள்ள குடியிருப்புகளை அகற்றிவிட்டு காம்பவுண்ட் சுவர் கட்டியிருக்கிறார்கள். ஆற்றில் சரிவான பகுதி இருந்தால்தான், தண்ணீர் ஆற்றில் சரிந்து ஓட முடியும். திருநீர்மலை - திருமுடிவாக்கம் இணைக்கும் பாலம் மிகச் சிறியதாக அமைத்திருக்கிறார்கள். ஆனால், ஆற்றின் அகலத்துக்கு ஏற்ப இந்தப் பாலம் அமைக்கப்படவில்லை. இதனால்தான் இந்தப் பகுதி பாதிக்கப்பட்டது. அதை இன்னும் சரிசெய்யவில்லை'' என்கிறார் ஜனகராஜன்.

மீண்டும் மழை... தமிழகம் தயாரா?

பொதுப்பணித் துறை, முன்னாள் உதவி செயற்பொறியாளர் திருநாவுக்கரசுவிடம் பேசினேன்... 

``பொதுப்பணித் துறையின் கீழ் ஏரிகளைப் புதுப்பிக்கும் பணிகளை உலக வங்கி நிதி உதவித் திட்டங்களின் மூலம் செய்துவருகின்றனர். சென்ற மழையில் பாதிக்கப்பட்ட ஏரிகளில் தற்காலிகமாக மணல் மூட்டைகள் வைத்து அடைத்திருக்கின்றனர். வெறும் மண்ணைக் கொட்டியிருக்கின்றனர். எல்லாமே தற்காலிக வேலைதான். 

உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும் தமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டத்தின் கீழ் (TN-IAMWARM) நீர்நிலைகளைத் தூர்வார முடிவு செய்திருக்கிறார்கள். ஆனால், இதற்கு இன்னும் நிதி வரவில்லையாம்'' என்கிறார் திருநாவுக்கரசு. 

 “பல்லாவரத்தில்... திருப்பனந்தாள் ஏரியில் இருந்து பல்லாவரம் பெரிய ஏரிக்குச் செல்ல ஒரு கால்வாய் 1972-ம் ஆண்டில் இருந்திருக்கிறது. இந்தக் கால்வாய் படிப்படியாக ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. பெரிய ஏரிக்கு நீர் வரும் வழி 60 அடி அகலம் இருக்க வேண்டும். ஆனால், 3 முதல் 10 அடி அகலம்தான் இருக்கிறது. அதேபோல பம்மல்-பல்லாவரம் எல்லைப் பகுதியில் மூங்கிலேரி என்கிற ஏரி இருந்தது. இந்த ஏரி இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டுவிட்டது. பல்லாவரம், குரோம்பேட்டை பகுதிகளில் பெய்யும் மழைநீர் பல்லாவரம், கீழ்கட்டளை, நாராயணபுரம் ஏரிகளில் நிரம்பி சரிவாக பள்ளிக்கரணைக்கு வந்து, பக்கிங்ஹாம் கால்வாய் வழியே கடலில் சென்று கலக்கும் வகையில் இயற்கையான சூழல் இருக்கிறது. ஆனால், பள்ளிக்கரணை பெரும் அளவுக்கு ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டதால், புறநகர் பகுதிகள் வெள்ளக்காடாகின்றன. முகலிவாக்கத்தில் விமான நிலையத்துக்குச் சொந்தமான பகுதியில் இருந்து அடையாறு ஆறு வரை ஒரு கால்வாய் செல்கிறது. இந்தக் கால்வாயில் இப்போது கட்டட இடிபாடுகள், குப்பைகளைக் கொட்டித் தூர்ந்து போகச் செய்திருக்கிறார்கள்.

மீண்டும் மழை... தமிழகம் தயாரா?

15 ஆண்டுகளாக இந்தக் கால்வாய் தூர்வாரப்படவே இல்லை. நீர்வழிகளைத் தூர்வார மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசிடம் என்ன திட்டம் இருக்கிறது என்பதுதான் எங்கள் கேள்வி” என்கிறார் சென்னையில் ஏரிகள் நிலவரம் குறித்து தணிக்கையில் ஈடுபட்ட அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன்.

`சென்னை மாநகராட்சி எல்லைக்குள் 85 சதவிகிதம் அளவுக்கு அதாவது 1,000 கி.மீ அளவுக்கு மழைநீர் வடிகால்களைத் தூர்வாரிவிட்டோம். செப்டம்பர் மாதத்துக்குள் மீதி உள்ள பணிகளையும் முடித்துவிடுவோம்’ என்கிறது சென்னை மாநகராட்சி. ஆனால், கடந்த வாரம் மூன்று மணி நேரம் பெய்த மழைக்கே திண்டாடிப்போனது சென்னை. மையப்பகுதிகளான ராயப்பேட்டை, ஆழ்வார்பேட்டை பகுதிகளே குளங்களாகக் காட்சியளித்தன.

அதுதான் 5,000 ரூபாய் வெள்ள நிவாரணம் நிதி கொடுத்துவிட்டோமே. இந்தப் பணிகளை எல்லாம் ஏன் செய்யவேண்டும் என்று தமிழ்நாடு அரசு சொல்லாமல் சொல்கிறதோ?!

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...