News
Loading...

குட்டிச்சுவர் சிந்தனைகள்

குட்டிச்சுவர் சிந்தனைகள்

தமிழ்நாட்டுல குரூப்புகளுக்கு என்றும் பஞ்சமில்லை. ப்ளட் குரூப்ல ஆரம்பிச்சு பள்ளிக்கூடத்துல படிக்கிற குரூப்பு, காலேஜ்ல கடைசி பெஞ்ச் குரூப்பு, ஆபீஸ்ல புரளி குரூப்பு, வதந்தி குரூப்பு, ஊருக்கு ஊரு ஜாதி குரூப்பு, ஜால்ரா குரூப்பு, காலையிலயே கட்டிங் அடிக்கிற குரூப்பு, மல்ட்டிலெவல் மார்க்கெட்டிங் குரூப்பு, தல - தளபதி குரூப்பு, தங்கபாலு - இளங்கோவன் குரூப்பு,  விதவிதமா வாட்ஸப் குரூப்புன்னு வாழ்க்கையில பல குரூப்புகளை சந்திக்கிறோம். 

ஆனா இது எல்லாத்தையும் விட ஆபத்தான ஒரு குரூப் இருக்கு, அதுதான், ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப்னு ஒண்ணு விடாம உள்ள வந்து, ‘வித்தியாசமான சேதி சொல்றேன்’னு பீதியை உண்டாக்கி பேதி போக வைக்கும் ‘நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்’ குரூப்பு. ஈரை பேனாக்கி, பேனை பெருமாளாக்குற ஆளுங்கள பாத்திருப்பீங்க! இந்த குரூப்பை சேர்ந்தவங்க, பெருமாளை பின்லேடனா கூட ஆக்கிடுவாங்க. 

வெண்ணெயையும் எண்ணெயையும் ஒண்ணா கலக்கி கிரானைட் கல்லுல கட்டுன திண்ணையில தேய்ச்சு வச்சு மாதிரி, ‘எது உண்மை, எது பொய்’னு கண்டுபிடிக்கவே முடியாத மாதிரி இவங்க கிளப்பறது வித்தியாசமா இருக்கும். இதுல, நல்லா சுடுதண்ணிய கொதிக்க வச்சு சட்டைக்குள்ள ஊத்தி விடுற அளவுக்கு கடுப்பைக் கிளப்பறது என்னன்னா, அதை வேற ‘அதிகம் பகிருங்கள், யாருக்காவது உதவும்’னு சப் டைட்டில் போட்டு அனுப்புவாங்க.

இந்த ‘நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்’ குரூப்களின் சில சாம்பிள்கள் இங்கே... 

* நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும், இயேசுநாதர் சுமந்த சிலுவை பர்மா தேக்கு மரத்தில் செய்தது என்று.

* ‘சீனப் பெருஞ்சுவர்’ கட்டும்போது செங்கல் பற்றாக்குறை ஏற்பட்டதால், செங்கல்லுக்கு பதிலாக  சில இடங்களில் பழைய லைஃப்பாய் சோப்பைக் கொண்டு கட்டினார்கள் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

* தூக்க மாத்திரை தூக்கத்தை வர வைக்கும். ஆனால் இருமல் மாத்திரை இருமலையோ, காய்ச்சல் மாத்திரை காய்ச்சலையோ வர வைக்காது என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் ப்ரெண்ட்ஸ்?

* இந்திய வங்கிகளில் கோடிக்கணக்கான பணத்தை கடனாக வைத்திருந்தாலும், வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லும் முன் விஜய் மல்லைய்யா, அவர் தெரு முக்கு முனியாண்டி விலாஸில் வாங்கிய மூணு பரோட்டோவுக்கு கடன் வைக்காமல் பணம் கொடுத்துவிட்டுச் சென்றார் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? 

* இன்று உலகின் வேகமான மனிதர் என பெயர் பெற்றிருக்கும் ஓட்டப்பந்தய வீரர் ‘உசேன் போல்ட்’ சிறு வயதில் போலியோவால் பாதிக்கப்பட்டவர் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? தன்னம்பிக்கையின் அடையாளம் உசேன் போல்ட், இதை அதிகம் ஷேர் செய்யவும் நண்பர்களே.

* தாஜ்மகால் முதலில் மும்தாஜுக்கு பிடித்த சிவப்பு கலரில்தான் இருந்தது என்றும்,  15ம் நூற்றாண்டில் பெய்த பெருமழையில் நனைந்து சாயம் போய் வெள்ளையானது என்றும் நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

* கம்ப்யூட்டரை முதலில் கண்டுபிடித்தது திப்பு சுல்தான் என்பதும், கரன்ட் இல்லாத காரணத்தால் அதைப் பயன்படுத்த முடியாமல் போனது என்பதும் உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? 

* திருக்குறளைத் தந்த திருவள்ளுவருக்கு 15 வயது வரை தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது என்பதும், கொடூர வறுமையால் அவர் அம்மா அவரை சிறுவயதில் ஸ்கூலுக்கு அனுப்ப முடியாமல் போனது என்பதும், நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

* ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ படத்தில் ராமராஜன் மாட்டிடம் பால் கறக்கும் சீனில் பசு மாடு வெட்கப்பட்டு நடிக்க மறுத்ததால், அவசரத்துக்கு காளை மாட்டை வைத்து ‘செண்பகமே செண்பகமே’ பாடலை எடுத்தார்கள் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

* காந்தி தாத்தா குடித்த ஆட்டுப்பாலைத் தந்த அந்த ஆட்டுக்கு பேரு அலமேலு என்றும், அதை பெருமைப்படுத்தவே தமிழில் ஆட்டை மையப்படுத்தி எடுத்த படத்துக்கு ஹீரோயின் பெயரை ‘அலமேலு’ என்று வைத்தார்கள் என்பதும்  நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

* ‘ஐ’ படம் எடுக்கும்போது எமி ஜாக்சன் ரெண்டு நாள் கால்ஷீட் சொதப்பியதால், உடல் இளைத்த விக்ரமே ரெண்டு நாட்கள் எமி ஜாக்சன் வேஷத்தில் நடித்தார் என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்?

* நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும், ‘தீருபாய் அம்பானி’ லெபனானில் வேலை செய்யும்போது ஸ்கூட்டரில் பெட்ரோல் தீர்ந்து முப்பது கிலோமீட்டர் வண்டியைத் தள்ளிக்கிட்டு போய் பெட்ரோல் அடித்த அனுபவம்தான் அவரை இந்தியா முழுக்க பெட்ரோல் பங்க் திறக்க தூண்டுகோலாய் இருந்தது என்று.

* சைடு எஃபெக்ட் இல்லாத மயக்க மருந்து என ‘ப்ரூக்ளின்’ மருத்துவமனையில் நமது தமிழ்நாட்டு பொங்கலைத்தான் ஆப்ரேஷன் செய்யும்போது நோயாளிகள் மயக்கம் அடையத் தருகிறார்கள் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

* காரிலோ பைக்கிலோ இரவு நேரம் பயணிக்கும்போது, ஹெட்லைட் எரியாவிட்டால், உள்ளங்கைகள் இரண்டையும் நன்றாகத் தேய்த்து சூடாக்கி, பல்பின் மீது மூன்று முறை வைத்தால் லைட் எரியும் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

* கடைசியா நான் ஒண்ணு சொல்லிக்கிறேன், நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்... இப்படி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியுமென வருவதில் முக்கால்வாசி டுமீல் என்று.

மழைக் காலங்களில் எங்காவது வழுக்கி விழுந்து கை கால் உடைந்தால், அரை லிட்டர் தண்ணீரில் ரெண்டு சொட்டு ஃபெவிகால் விட்டு குடித்தால் உடைந்த எலும்புகள் ஒட்டிக்கொள்ளும் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? இதை அதிகம் பகிரவும் ப்ரெண்ட்ஸ்.

உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும், பிரதமர் மோடி வெளிநாடு டூர்கள் எல்லாம் போவதில்லை... அவர் வெளிநாட்டில்தான் வசிக்கிறார், அவ்வப்பொழுது இந்தியாவுக்கு டூர் வந்துவிட்டுப் போகிறார் என்று.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.