News
Loading...

ஒலிம்பிக் கனவும்... ஒன்பது ரூபாயும்!

ஒலிம்பிக் கனவும்... ஒன்பது ரூபாயும்!

ஒலிம்பிக் போட்டியில் ஒரு வெண்கல பதக்கம் வெல்வதற்குக்கூட தமிழனுக்குத் தகுதி இல்லையே என்ற அவமானத்தைத் துடைத்திருக்கிறார், ரியோ பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன். இந்த ஒரு வெற்றியால் மட்டுமே விளையாட்டுத் துறையில் தமிழகம் சாதித்துவிட்டது என திருப்திப்பட்டுக்கொள்ள முடியாது.

ஆந்திராவைச் சேர்ந்த பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கமும், அரியானாவைச் சேர்ந்த சாக்சி மாலிக் வெண்கலப் பதக்கமும் ஒலிம்பிக்கில் வென்றனர். இந்தியாவிலே மிகச்சிறிய, பின்தங்கிய மாநிலங்களில் ஒன்றான வெறும் 36 லட்சம் மக்கள்தொகை கொண்ட திரிபுராவைச் சேர்ந்த தீபா கர்மாகர், ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் போட்டியில் இறுதிச்சுற்று வரை சென்று, அந்த மாநிலத்துக்குப் பெருமை சேர்த்திருக்கிறார். 

ஆனால், ஒலிம்பிக்கில் பங்கேற்ற தமிழக வீரர்கள் யாரும்  இறுதிச்சுற்றுக்குக்கூட போகவில்லை.  விளையாட்டுத் துறைக்கு தமிழக அரசு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது? தமிழக விளையாட்டுத் துறையின் செயல்பாடுகள் எப்படி உள்ளன? என்ற கேள்விகளை விளையாட்டு நிபுணர்களிடம் கேட்டால், உடனடியாக நம் நினைவுக்கு வருவது, ‘இறுதிச்சுற்று’ திரைப்படம்தான்.

பல்வேறு விளையாட்டுக்களில் ஆர்வமும் திறமையும் கொண்ட மாணவர்களைக் கண்டெடுத்து, அவர்களுக்கு ஊக்கமும் தேவையான பயிற்சியும் வசதிகளும் செய்துகொடுத்து மிகச் சிறந்த விளையாட்டு வீரர்களை வளர்த்தெடுப்பதற்கான மிகச் சிறந்த களம், பள்ளிக்கூடங்கள்தான். குறிப்பாக, அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குத்தான் அதற்கான சூழலும் வாய்ப்புகளும் அதிகம். அதைப் பயன்படுத்திக் கொள்ளும் நிலைமை தமிழ்நாட்டில் இருக்கிறதா?

“விளையாட்டுகளில் ஆர்வமும், திறமையும் கொண்ட மாணவர்கள் ஏராளமானோர் அரசுப் பள்ளிகளில் உள்ளனர். ஆனால், அவர்களைச் சாதனையாளர்களாக உருவாக்குவதற்கான முயற்சிகள் இல்லை. ‘ஆரம்பத்தில் கிடைக்கும் பயிற்சிதான் ஆயுள்வரை’ என்பார்கள். அந்தப் பயிற்சி இந்த மாணவர்களுக்குக் கொடுக்கப்படுவது இல்லை. 

இதற்கு அடிப்படையான காரணங்களில் ஒன்று நிதிப் பிரச்னை. பள்ளிக்கூடங்களில் விளையாட்டுக்கான நிதியை போதுமான அளவில் அரசு ஒதுக்குவது இல்லை. தேவையான உடற்பயிற்சி கருவிகள் தேவையான உடற்கல்வி பயிற்சியாளர்கள் கூட பல பள்ளிகளில் இல்லை” என்கிறார், உடற்கல்வியல் வல்லுநர் அ.அருள் செல்வன் 

புதுக்கோட்டையைச் சேர்ந்த லக்‌ஷ்மணனும், சூர்யாவும் தடகள வீரர்கள். அவர்கள், ஆசிய போட்டிகளில் கலந்துக்கொண்டு தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்றார்கள். அவர்களுக்கு தலா  ஐந்து லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என கடந்த அ.தி.மு.க ஆட்சியில் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த சுந்தர்ராஜன் சட்டமன்றத்தில் அறிவித்தார். 

ஆனால், அந்தப் பரிசுத்தொகை வழங்கப்படவில்லை. மீண்டும் அ.தி.மு.க.தான் ஆட்சிக்கு வந்தது. ஆனால், அந்தப் பரிசு மட்டும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்த்த விளையாட்டு வீரர்கள், பயிற்சிக்குப் பணமின்றி தவித்து வருகிறார்கள்.

ரியோ ஒலிம்பிக் போட்டியில், தமிழகத்தில் இருந்து பளு தூக்குதல் வீரர் சதீஷ் சிவலிங்கம், தடகள வீரர்கள் ஆரோக்கியராஜ், தரூண், ராஜா மற்றும் டெபிள் டென்னிஸ் வீரர் சரத்கமல் ஆகியோர் கலந்துகொண்டனர். இவர்கள் அனைவரும் தங்களது சொந்த முயற்சியில், சொந்தப் பணத்தை செலவு செய்தே பயிற்சி எடுத்து ஒலிம்பிக் சென்றுள்ளனர்.

“நான் நடுத்தரக் குடும்பத்தில் இருந்து வந்தவன். ஒலிம்பிக்  போட்டிகளில். பங்கேற்கும் வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுவது இல்லை. என் சொந்த செலவில்தான் சென்று வந்தேன். வெற்றி பெற்றால்தான் வீரனைக் கொண்டாட வேண்டும் என்று இருக்கக் கூடாது. தோல்வி அடைந்து நாடு திரும்பும் வீரர்கள் மீதும் இந்த அரசு கவனம் செலுத்த வேண்டும். எதனால் தோல்வி அடைந்தார்கள் என்பது குறித்து கூட கேட்டு அறிவதில்லை. 

அந்த அணுகுமுறை இருந்தால்தானே, அவர்களின் பிரச்னைகளைப் புரிந்துகொண்டு, குறைகளைக் களைய முடியும்? ஒலிம்பிக் செல்லும் வீரர்களுக்கு நிதி ஒதுக்கும் பணியை ‘எலைட் ஸ்போர்டஸ் டீம்’தான் செய்து வருகிறது. அந்த டீமில் உள்ளவர்களிடம் சரியான அணுகுமுறை இல்லை. என்ன  நடக்கிறது? அதற்கான விதிமுறைகள்  என்ன? என்பதுகூட அவர்களுக்குத் தெரியவில்லை” என்கிறார், ஒலிம்பிக்கில் பங்கேற்று பதக்கத்தை தவறவிட்ட பளுதூக்கும் வீரர் சதீஷ் சிவலிங்கம். 

‘’தமிழகத்தை சேர்ந்த தடகள வீரர் ஒருவர் ராணுவத்தில் பணியாற்றுகிறார். அவர் ஆசிய போட்டிகளில் கலந்துக்கொண்டு பதக்கம் வென்றுள்ளார். அவருக்கு தமிழக அரசில் உதவித்தொகையான ஒரு லட்சம் ரூபாய் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், அவர் ராணுவத்தில் பணியாற்றுகிறார் என்று கூறி உதவித்தொகையை தர தமிழக அரசு மறுக்கிறது. 

போட்டிகளில் கலந்துக்கொள்ளும் வீரர்கள், தமிழகத்தில் வசிக்க வேண்டும், எங்கும் வேலை பார்க்க கூடாது’ என ஆயிரத்து எட்டு விதிமுறைகளை தமிழக விளையாட்டுத் துறை விதித்துள்ளது” என்கிறார் விளையாட்டு பயிற்சியாளர் ஒருவர்.

“நான், உடல் ஊனமுற்றவன். வில்வித்தை மீது இருந்த ஆர்வத்தால் 2010-ல் எனது சொந்தப் பணம் இரண்டரை லட்சம் செலவு செய்து உபகரணங்கள் வாங்கினேன். 2011-ல் மாநில வில்வித்தைப் போட்டியில் முதல் பரிசையும், 2012-ல் தேசிய போட்டியில் முதல் பரிசையும் வென்றேன். 

அதே ஆண்டு, தேசிய வில்வித்தைப் போட்டிகளை தமிழகத்தில் தமிழக வில்வித்தை சங்கம் நடத்தியது. நான் வேறு ஒரு சங்கத்தில் உறுப்பினராக இருப்பதால், என்னை அந்தப் போட்டியில் கலந்துக்கொள்ளக்கூட அனுமதிக்கவில்லை. என்னைப் போல, திறமையுள்ள வீரர்கள் 20 பேர் அப்போது புறக்கணிக்கப்பட்டார்கள். 

வில்வித்தை சங்கத் தலைவர் மற்றும் செயலாளர்களுக்குத் தெரிந்தவர்கள் மட்டுமே போட்டியில் கலந்துகொள்ள முடியும் என்ற அவல நிலை உள்ளது. சங்கத்தில் இருப்பவர்களுக்கு மெடல் வாங்க வேண்டும் என்ற எண்ணமே இல்லை. பணம் பண்ணுவதிலேயே குறியாக இருக்கிறார்கள். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நேரடியாக இந்தப் போட்டிகளை நடத்தினால் மட்டுமே திறமையானவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

2012-ல் நான் வைத்திருந்த உபகரணங்கள் செயலிழந்துவிட்டன. தேசிய அளவில் பதக்கம் வாங்கிய எனக்கு தமிழக அரசு உதவும் என்ற நம்பிக்கையில், புதிய உபகரணங்கள் வாங்கித்தருமாறு விளையாட்டு ஆணையத்துக்கு கோரிக்கை வைத்தேன். நான்கு வருடங்கள் ஓடிவிட்டன. நான் கேட்டது கிடைக்கவில்லை” என்று குமுறினார் ராசிபுரம் ரஞ்சித்.

விளையாட்டு அமைப்புகளுக்கான நிர்வாகப் பொறுப்புகளில் விளையாட்டுக்கு சம்பந்தமே இல்லாதவர்கள்தான் இருக்கிறார்கள். விளையாட்டு அமைப்புகளில் ஒட்டுண்ணி போல இருந்துகொண்டிருக்கும் சுயநலப் பேர்வழிகள், அங்கிருந்து துரத்தி அடிக்கப்பட வேண்டும். பெண்களுக்கான அதிகாரப்  பதவிகள் என்பதுமே பூஜ்யம்தான். 

விளையாட்டுத் துறையில் சாதனைபடைக்க வேண்டும் என்று ஆர்வத்துடன் வரும் பெண்கள் பாலியல் ரீதியான அதிர்ச்சிகளை எதிர்கொள்கிறார்கள். அதிகாரத்தில் இருப்பவர்கள், வீராங்கனைகளுக்கு பல செக்ஸ் டார்ச்சர்களைக் கொடுக்கிறார்கள். இதனால் பல பெண்கள் விளையாட்டுத் துறைக்கு வரத் தயக்கம் காட்டுகின்றனர் .

தமிழ்நாட்டில் விளையாட்டுத் துறை உருப்படுவதற்கு முதலில் செய்ய வேண்டியது என்ன தெரியுமா? தமிழகத்தில் விளையாட்டு அமைப்புகளில் புரையோடிப் போயிருக்கிற ஊழல், ‘அரசியல்’, நிர்வாகச் சீர்கேடுகள் ஆகியவற்றை சரிசெய்வதற்கான பெரிய அறுவை சிகிச்சை.

கோ கோ… கோலிக்குண்டு!

போதிய நிதி ஒதுக்கப்படாததால் பல பள்ளிக்கூடங்களில், கோ கோ, பாண்டி போன்ற செலவினம் இல்லாத விளையாட்டுக்களைத்தான் விளையாடு கிறார்கள். போற போக்கைப் பார்த்தால் கில்லி, கோலிக்குண்டு எல்லாம் விளையாட வேண்டியிருக்கும்போல.

வழங்கப்படாத பரிசுத்தொகை!

2012-ல் கேரம் உலக சாம்பியன் போட்டிகளில் பங்கேற்று முதலிடத்தில் வந்தவர் இளவழகி. அதற்காக அவருக்கு அளிக்கப்பட வேண்டிய 80 லட்ச ரூபாய் இன்னும் அளிக்கப்படவில்லையாம். அரசிடம் பல தடவை அவர் முறையிட்டும் பரிசுப்பணம் வந்தபாடில்லை. இளவழகியைப் போல, பலருக்கும் இதுதான் கதி.

சர்ச்சையில் அமைச்சர்!

முந்தைய ஜெ. அமைச்சரவையில் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்தவர் டாக்டர் சுந்தரராஜ். புதுக்கோட்டையில் உண்டு உறைவிடப் பள்ளியில் இரவு நேரத்தில் ஆய்வுக்குச் சென்ற அமைச்சர், மாணவிகளிடம் தகாத முறையில் நடந்துகொண்ட விதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

என்ன ஆச்சு முதல்வர் கோப்பை?

‘முதல்வர் கோப்பை’ விளையாட்டுப் போட்டிகளை, மாவட்டம் தோறும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்துகிறது. மாவட்ட அளவில் போட்டிகள் முடிந்தவுடன் மாநில அளவிலான போட்டிகளை நடத்துவது இல்லை. போட்டிகளை  நடத்தினாலும் பரிசுகள் வழங்குவதில் ஏகப்பட்ட முறைகேடுகள் என்ற புகார்கள் வருகின்றன.

எழுச்சி இல்லாத திட்டம்!

தேசிய, சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவதற்கு ஏற்ற வகையில், வீரர் ஒருவருக்கு, ஓராண்டிற்கு அதிகபட்சம் 2 இலட்சம் ரூபாய் வழங்கிட வாகையர் உருவாக்கும் திட்டம் எனும் புதிய எழுச்சியூட்டும் திட்டம் தோற்றுவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட பணம் எந்த வீரருக்கும் முழுமையாக சேரவில்லை என்று புகார் பரவலாக உள்ளது.

ஒன்பது ரூபாய் போதுமா?

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விளையாட்டுக்காக ஒர் ஆண்டுக்கு அரசு ஒதுக்கும் தொகையைக் கணக்கிட்டால் அதிர்ச்சியாக இருக்கிறது. அரசுப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டால் ஓர் ஆண்டுக்கு ஒரு மாணவனுக்கான தொகை வெறும் 9 ரூபாய்தான். கடந்த 40 ஆண்டுகாலமாக  இதே அளவில்தான் நிதி ஒதுக்கப்படுகிறது. ஒரு மாணவனுக்கு ஓர் ஆண்டுக்கு வெறும் ஒன்பது ரூபாயை அரசு ஒதுக்குகிறது. ஆனால், நாமெல்லாம் ஒலிம்பிக் கனவுகளை சுமந்துகொண்டிருக்கிறோம். வெட்கக்கேடு.

துரத்தி அடிக்க வேண்டியவர்கள்...

என்ன செய்தால், தமிழகத்தில் இருந்து விளையாட்டுத் துறை சாதனையாளர்களை உருவாக்கலாம் என்பதற்கான ஆலோசனைகளைத் தருகிறார், தமிழ்நாடு பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர் விளையாட்டுச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சரவணன். 

 விளையாட்டுச் சங்கங்களின் அதிகாரப் பதவிகளில் இருக்கும் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் உட்பட விளையாட்டுக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் உடனடியாக நீக்கப்பட வேண்டும்.

 விளையாட்டு அமைப்புகளின் அதிகாரப் பதவிகளில் பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர், பெண்கள் ஆகியோருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.

 பள்ளிக்கல்வித் துறை நடத்தும் மண்டல, மாநில அளவிலான போட்டிகள், விளையாட்டுச் சங்கங்கள் நடத்தும் போட்டிகள், பல்கலைக்கழங்களுக்கு இடையிலான போட்டிகள் ஆகியவற்றில் வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசுத் தொகை உயர்த்தி வழங்கப்பட வேண்டும்.

 விளையாட்டுச் சங்கப் போட்டிகளில் பங்கேற்கச் செல்லும் மாணவர்களுக்கும் 21 நாட்கள் முழுநேரப் பயிற்சி வழங்க வேண்டும். இதற்கான செலவை அரசு வழங்க வேண்டும்.

 அனைத்துப் பள்ளிகளிலும் காலியாக உள்ள விளையாட்டு ஆசிரியர்கள் நிரப்பப்பபட வேண்டும்.

 பெண்களுக்குத் துணைக்கு வருவோருக்கும் சேர்த்துக் கட்டணச் சலுகை வழங்கப்பட வேண்டும்.

 விளையாட்டுச் சங்கப் போட்டிகளின் போதும் பயிற்சிகளின் போதும் பெண்களுக்கான தங்குமிட வசதி 100 சதவிகிதம் பாதுகாப்புடன் இலவசமாக வழங்கப்பட வேண்டும்.

 விளையாட்டுச் சங்கப் போட்டிகளில் தரமான இலவச உணவு வழங்குவதற்கு அரசாங்கம் நிதியுதவி வழங்க வேண்டும்.

 விளையாட்டு வீரர்களுக்கு மாநிலப் பேருந்துப் போக்குவரத்துத் துறையில் கட்டணச் சலுகைகள் வழங்கப்பட வேண்டும்.

 விளையாட்டு வீரர்களைத் தேர்வு செய்தல் பணிகள் 100 சதவிகிதம் வெளிப்படையாக நடத்தப்பட வேண்டும்.

 விளையாட்டுத் துறையில் ஈடுபடும் பெண்களுக்கு பாலியல் தொல்லை தருபவர்களுக்குக் கடும் தண்டனைகள் விதிக்கப்பட வேண்டும்.

 வென்றெடுத்த பின்னர் பாராட்டுவதற்கு மாறாக பயிற்சி எடுக்கும்போதே கைகொடுத்து உதவிடும் வகையில் அரசாங்கத்தின் கொள்கைக் திட்டங்களை மாற்ற வேண்டும்.

 பள்ளிக்கல்வித் துறை விளையாட்டுப் போட்டிகளில் மாநில அளவில் பதக்கங்கள் வெல்ல வைக்கிற உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டும்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.