News
Loading...

தென்னிந்தியாவில் பெண்கள் நடத்தும் முதல் IAS, IPS பயிற்சி மையம்: இலவச விழிப்புணர்வு

சத்யபிரியா
இன்றைக்கு கூலி தொழிலாளியும் தனது பிள்ளைகளை ஓரளவிற்கு படிக்க வைக்கின்றனர். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தமிழகத்தில் மட்டும் ஆயிரக்கணக்கானோர் பதிவு செய்து காத்திருக்கின்றனர். இனிமேல் அரசு பணி எனில் போட்டித்தேர்வு கட்டாயம். மருத்துவர், பொறியாளர், தொழில் கல்வி பயின்றவர்களும் ஆர்வம் காட்டுகின்றனர். 70 சதவீதத்தினர் போட்டித் தேர்வை விழிப்புணர்வின்றி எழுதுவதால் தேர்ச்சி பெற முடியவில்லை.

இந்திய ஆட்சிப் பணி (யூபிஎஸ்சி) தேர்வை பலமுறை எழுதி வெற்றியை தவறவிட்ட விரக்தியில் மதுரையைச் சேர்ந்த 5 பெண்கள் இணைந்து வேந்தன் (அரசன்) என்ற ஐஏஎஸ் அகாதெமியை மதுரை கேகே. நகரில் தொடங்கியுள்ளனர்.

இது குறித்து பயிற்சி மைய இயக்குநர் சத்யபிரியா தவ முருகன் கூறியதாவது: 4 ஆண்டுக்கு முன், நானும், 4 தோழிகளும் ஆட்சிபணி தேர்வெழுத திட்டமிட்டு மதுரையிலுள்ள ஒரு பயிற்சி மையத்தில் சேர்ந்தோம். தொடர்ந்து பயிற்சி பெற்றும் தேர்ச்சி பெற முடியவில்லை. சரியான வழிக்காட்டுதல் இன்றி தேர்ச்சி பெறவில்லை என்பதை உணர்ந்தோம். வணிக நோக்கில் சில பயிற்சி மையங்கள் செயல்படுவது புரிந்தது. சொந்த முயற்சியால் பெறும் சிலரது வெற்றியை விளம்பரப்படுத்தி தொழில் புரிகின்றனர். இதுபோன்ற நிலையால் தேர்வு அடிப்படை கற்றுத்தர பயிற்சி மையம் தொடங்கினோம். பள்ளிப் பருவத்திலேயே ஆர்வமூட்டினால் 25 வயதுக்குள் ஒருவரால் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெறலாம். தேர்வர் எண்ணிக்கையை பொறுத்து கேள்விகள் கடுமையாக்குகின்றனர்.

யூபிஎஸ்சி, குரூப்-1 தேர்வுக்கு 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 பாடங்கள் அடங்கிய என்சிஆர்டி புத்தகங்களை படிக்க வேண்டும். இதில் அதிக வினாக்கள் இடம் பெறுகின்றன. வினா, விடைகளை மட்டுமின்றி பாட வாரியாக வாசிக்கவேண்டும். அதிலிருந்து குறிப்பெடுத்து எழுதி பார்க்கவேண்டும். ஒரு வினாவுக்கு எப்படியும் பதிலளிக்க தெரிய வேண்டும். குறிப்பிட்ட பாடமின்றி அனைத்துப் பாடத்திலும் தெளிவு தேவை. குழு, குறியீடு பயிற்சி மனதில் பதியும். நடப்பு வினாக்களுக்கு தி இந்து ஆங்கிலம், தமிழ், நாளிதழ்களை படிப்பது நன்று.

புரிந்து படிப்பது அவசியம். ஒரு வினாவுக்கு நேரடி, மறைமுக பதிலளிக்கும் ஆற்றல் வேண்டும். பெற்றோர், உறவினர் ,நண்பர்கள் கூறுவதால் பலர் இத்தேர்வை எழுதுகின்றனர். குறுகிய காலத்தில் தேர்ச்சி பெற விரும்புகின்றனர். ஓராண்டாவது பயிற்சி தேவை. வென்றவர்களின் அனுபவம், பயிற்சி முகாம், மாதிரி தேர்வுகளில் ஈடுபடவேண்டும். வட மாநிலங்களில் ஆட்சிப்பணி தேர்வு விழிப்புணர்வு பள்ளியளவில் ஏற்படுத்துவதால் அதிகம் வெற்றி பெறுகின்றனர். நாங்களும் பள்ளி அளவில் இப்பணி தேர்வுக்கான இலவச விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஆதங்கத்தில் தென்னிந்தியாவிலேயே முதல் பயிற்சி மையம் ஆரம்பித்துள்ளோம். கிராம புற மாணவர்களுக்கு உதவுவோம். போட்டித் தேர்வை பெருமையாக கருதாமல், பொறுப்புடன் எழுதுவோ ஊக்கப்படுத்துவோம் என்றார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.