News
Loading...

"ஜெயலலிதாவிடம் பயம் தெரிகிறது!”


```89 எம்.எல்.ஏ-க்களைப் பெற்றுவிட்டோம். எதிர்க்கட்சி வரிசையில் 98 பேர் இருக்கப்போகிறோம்' என்ற இறுமாப்புடன் நாங்கள் இந்தச் சட்டமன்றத்துக்குள் போகவில்லை. ‘நாங்கள் ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்’ என்று முதல் நாளிலேயே தி.மு.க சார்பில் உறுதி அளித்தேன். மக்கள் எதிர்பார்க்கும் விஷயங்களைச் சொல்லலாம் என நினைத்தோம். ஜெயலலிதாவும் பக்குவம் பெற்றிருப்பார் என நம்பினோம். ஆனால், அ.தி.மு.க உறுப்பினர்களும் அமைச்சர்களும் எங்களைச் செயல்பட அனுமதிக்கவில்லை. ஏன்... ஜெயலலிதாவே அனுமதிக்கவில்லை. இந்த அம்மா சபையில்... சும்மா சபையில் எங்களால் மட்டும் அல்ல, எந்த எதிர்க்கட்சியினாலும் திருப்திகரமாகச் செயல்பட முடியாது!” - `சட்டசபையில் தி.மு.க-வின் செயல்பாடு!' எனக் கேட்டதுமே வெடிக்க ஆரம்பித்துவிட்டார் மு.க.ஸ்டாலின். வெளிநடப்பு, சஸ்பெண்ட், போட்டி சட்டசபை... என, கடந்த ஒரு மாத காலமாக சட்டமன்றத்தைப் பரபரப்பாக்கிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை, ஆழ்வார்பேட்டை இல்லத்தில் சந்தித்தேன்.

‘‘சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக தி.மு.க-வால் திருப்திகரமாகச் செயல்பட முடிந்ததா?”

‘‘எப்படிச் செயல்பட முடியும்... எங்கே செயல்படவிட்டார்கள்? அ.தி.மு.க-வுக்கு, குறிப்பாக ஜெயலலிதாவுக்கு அந்தச் சகிப்புத்தன்மை கொஞ்சமாவது இருக்கிறதா? அல்லது ஜெயலலிதாதான் திருந்திவிடுவார் என எதிர்பார்க்க முடியுமா? கருத்துச் சுதந்திரத்துக்கும் சகிப்புத்தன்மைக்கும் கதவு அடைக்கப்பட்ட அவையில், எதிர்க்கட்சித் தலைவரின் குரல்வளையே நெரிக்கப்படுகிறது. எதையும் சொல்லவிடுவது இல்லை. அப்படியே சொன்னாலும் அதை நீக்குகிறார்கள். அ.தி.மு.க தரப்பு சொல்லும் குற்றச்சாட்டு, அவைக்குறிப்பில் இருக்கிறது. அதற்கு நான் சொல்லும் பதில் அவைக்குறிப்பில் இருக்காது. சபாநாயகர், ஒருதலைப்பட்சமாக நடந்துகொண்டார். இப்படிப்பட்ட அவையில், எங்கள் கருத்தை எப்படி முழுமையாகப் பதிவுசெய்ய முடியும்? எங்களுக்கு போதுமான நேரம் கொடுக்கப்படவே இல்லை.”

‘‘ஆனால், `சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதிக நேரம் பேசியிருக்கிறார்கள்' என சபாநாயகர் சொல்லி இருக்கிறாரே?''

 ``இப்போது, தி.மு.க உறுப்பினர் ஒருவருக்கு ஏழு நிமிடங்கள் வாய்ப்பு தரப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். அவரைப் பேசவிடாமல் அமைச்சர்கள் குறுக்கீடு செய்கிறார்கள். அவர்கள் ஏதோ பதில் சொல்கிறார்கள். அதிலேயே அரை மணி நேரம் ஆகிவிடுகிறது. இந்த அரை மணி நேரத்தையும் தி.மு.க உறுப்பினர் பேசியதாகப் பதிவுசெய்துவிடுவார்கள். உண்மையில், தி.மு.க உறுப்பினர் பேசியது நான்கு நிமிடங்களாக மட்டுமே இருக்கும்.

எதிர்க்கட்சிகள் பேசுவதற்கு, சபாநாயகர் போதிய வாய்ப்பு தருவது இல்லை. பெயர் அளவுக்கே வாய்ப்பு தருகிறார்... தந்தார். அதிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதில் பெரும்பகுதி அவைக்குறிப்பில் இடம்பெற முடியாத அளவுக்கு, இருட்டடிப்பு வேலை தொடர்ந்து நடைபெறுகிறது. ஆளும் கட்சியினர் எதைப் பேசினாலும், எப்படிப் பேசினாலும் அவைக்குறிப்பில் ஏறும். எதிர்க்கட்சியினர் எவ்வளவு அளந்து வரையறையோடு  பேசினாலும், அனைத்தும் அவைக்குறிப்பில் ஏறிவிடும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. பேசுவது அவைக்குறிப்பில் இடம்பெறுவதும், இடம்பெறாததும் சபாநாயகரின் மனநிலையைப் பொறுத்ததோ, பேரவை விதிகளைப் பொறுத்ததோ அல்ல. சபாநாயகர் பின்பற்றும் ஜனநாயகம், தனி  ரகத்தைச் சார்ந்தது. தமிழ்நாடு சட்டமன்றமே ‘டெங்கு’ காய்ச்சலால் அவதிப்படுவதைப் போன்றதொரு நெருக்கடி நிலையைக் கொண்டுவந்துவிட்டார்கள்”

‘‘சட்டமன்றத்தில் அமைச்சர்களின் செயல்பாடு எப்படி இருந்தது?”

‘‘பிரச்னைகளுக்கு ஏற்ப பதில் தந்தால் அல்லவா, திருப்தி அல்லது திருப்தி இல்லை எனக் கூற முடியும்? எந்தக் கேள்வி கேட்டாலும், அம்மாவைப் புகழ்கிறார்கள்; தி.மு.க-வை இகழ்கிறார்கள். இந்த இரண்டுதான் அவர்களுக்குத் தெரிகிறது. இந்த இரண்டு காரியங்களை ஒழுங்காகப் பார்ப்பவர்களை மட்டும்தான் அமைச்சர்களாக வைத்துள்ளார்கள்.

முதுகு வளையக் குனிபவர்கள், நெடுஞ்சாண்கிடையாக விழுபவர்கள், பொம்மைகளைப்போல புரள்பவர்கள், மண்சோறு சாப்பிடுபவர்கள்... இவர்களைத்தான் அமைச்சர்களாக வைத்திருக்கிறார்கள். இவர்களிடம் இருந்து எதை எதிர்பார்க்க முடியும்? இந்தத் திறமையில் யார் உசத்தி என்பதில் வேண்டுமானால் போட்டிகள் வைக்கலாம். எல்லா அமைச்சர்களுக்கும் ‘பல்’ இருக்கிறது; உருப்படியான ‘சொல்’தான் இல்லை!”

‘‘ `சட்டமன்றத்துக்கு வரும்போது சண்டைக்கு வருவதுபோல, போர்க்களத்துக்கு வருவதுபோல தி.மு.க உறுப்பினர்கள் வருகிறார்கள்' என்று அ.தி.மு.க குற்றம் சாட்டுகிறதே?”

‘‘ `அம்மா பஜனை' பாடிக்கொண்டே இருப்பவர்களுக்கு, எங்களைப் பார்த்தால் அப்படித்தான் தெரியும்.

போர்க்களத்துக்கு, வீரர்கள்தான் போவார்கள்; கோழைகள் ஒதுங்கிவிடுவார்கள். எங்கள் உறுப்பினர்கள் விவாதப்போருக்கு - சொற்போருக்குத் தயாராகத்தான் வருகிறார்கள். யாருடனும் சண்டையிடுவது எங்கள் நோக்கம் அல்ல; தொகுதி மக்களின் பிரச்னைகளுக்காகவும், நாட்டு மக்களின் நலிவு தீரவும் போராடுவ தற்குத்தான் செல்கிறோம். அந்தப் போரை எதிர்கொள்ளும் சக்தி ஆளும் கட்சிக்கு இல்லை!”

‘‘ `நமக்கு நாமே’ பயணம் பொய்த்துவிட்டது என்றுகூட சட்டமன்றத்தில் சொல்லக் கூடாதா? அதற்காக தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் அமளியில் ஈடுபட்டது சரியா?”

‘‘ ‘நமக்கு நாமே' பயணத்தைப் பற்றி பேசியது எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அ.தி.மு.க உறுப்பினர், ஒருமையில் பேசினார்; ‘நமக்கு நாமே' பயணத்தைக் கேவலப்படுத்தும் வகையில் பேசினார். அதைத்தான் எங்கள் உறுப்பினர்கள் ஆட்சேபித்தார்கள். அதற்கு நான் சொன்ன பதிலை, அவைக்குறிப்பில் இருந்து நீக்கிவிட்டார்கள். `அ.தி.மு.க-வின் பொதுக்குழு' என நான் சொன்னதை, அது ஏதோ சொல்லத் தகாத ஒன்றைப்போல, அ.தி.மு.க-வினர் நடந்துகொண்டார்கள். அ.தி.மு.க-வின் பொதுக்குழுவில் ஜெயலலிதா பேசியதை, அவர்களுடைய தலைமைக்கழகத்தின் மூலம், செய்தி வெளியீடாகப் பத்திரிகைகளுக்கு அனுப்பிய உண்மையையே மறைத்துவிட்டார்கள்.

` `நமக்கு நாமே' திட்டத்தைப் பற்றி அ.தி.மு.க பொதுக்குழுவில் ஜெயலலிதா பேசினார். அந்த அளவுக்கு அது முக்கியமான பயணம்' என்றுதான் நான் சொன்னேன். அதைக் குறை சொல்லக் கூடாது என்பது என்னுடைய எண்ணம் அல்ல. எப்படிப் பேச வேண்டும் என்று அளவு இல்லையா?”

‘‘எவ்வளவு நெருக்கடிகள் இருந்தாலும் தொடர்ந்து சபைக்குள்ளேயே உங்கள் எதிர்ப்பை தெரிவிக்கலாமே...வெளிநடப்பு ஏன்?”

‘‘கண்டனம் செய்வது மற்றும் எதிர்ப்பைக் காட்டுவதின் அடையாளமாகவே, அவை நிகழ்ச்சியைச் சிறிது நேரம் புறக்கணிப்பு செய்கிறோம். வெளியே வந்து பத்திரிகையாளர் களிடம் காரணத்தை விளக்கிவிட்டு, மீண்டும் திரும்பிச் சென்று   அவை  நிகழ்ச்சிகளில்  கலந்து கொண்டிருக்கிறோம். வெளிநடப்பும் புறக் கணிப்பும் வெவ்வேறு.

வெளிநடப்பு செய்யாமல் இருந்தால், அவர்கள் செய்வது அனைத்துக்கும் நாம் சம்மதித்துவிட்டோம் என அர்த்தமாகிவிடும். தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் இடம்பெறும் அளவுக்கு, அவை நடவடிக்கைகள் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அந்த அளவுக்குக் கடுமையான விவாதங்களை தி.மு.க முன்வைத்துள்ளது!”

‘‘அதற்காக போட்டி சட்டமன்றம் நடத்தியது சரியா?”

‘‘நாங்கள் நடத்தியது, போட்டி சட்டமன்றக் கூட்டம் அல்ல; மாதிரி சட்டமன்றக் கூட்டம். இது, நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது; ஊடகத்தாரின் நேரடிப் பார்வையில் நடத்தப்பட்டது. மாதிரி சட்டமன்றத்தில் நகைச்சுவை இருந்திருக்கலாம்; யாரையும் புண்டுத்தக்கூடிய கேலியோ, கிண்டலோ அனுமதிக்கப்படவில்லை. சட்டமன்ற மாண்பைக் குறைத்திடும் வகையில் மாதிரி சட்டமன்றம் நடக்கவில்லை என்பது நேரடியாகப் பார்த்த அனைவருக்கும் தெரியும்.

சட்டமன்றத்தை எப்படி நடத்த வேண்டும் எனத் தெரியாதவர்களுக்கு, இப்படித்தானே சொல்ல முடியும்?”

‘‘சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அணுகுமுறை எப்படி இருந்தது?”

‘‘பதினைந்து ஆண்டுகாலம் முதலமைச்சராக இருந்தவர் என்பதற்கான அடையாளமே அவரது நடவடிக்கைகளில் இப்போது இல்லை!”

‘‘டெல்லி விமான நிலைய சர்ச்சையில் சசிகலா புஷ்பா மீது, அவர் சார்ந்து இருக்கும் கட்சித் தலைமை நடவடிக்கை எடுத்தது. உங்கள் கட்சியில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?”

‘‘நண்பர் திருச்சி சிவா, தலைவர் கலைஞர் அவர்களை நேரில் பார்த்து அளித்த தன்னிலை விளக்கம் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது.”

‘‘ ‘ஸ்டாலின், இன்னொரு ஜெயலலிதா’ என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் விமர்சித்துள்ளாரே?” 

‘‘என்ன விமர்சனம் செய்தாலும், சகித்துக்கொள்ளும் மனப்பக்குவத்தை அறிஞர் அண்ணா - தலைவர் கலைஞர் ஆகியோரிடம் இருந்து கற்றுக்கொண்டிருப்பவர்கள் நாங்கள். விமர்சனம், விமர்சகரின் தரத்தை உணர்த்தும் என்பதை அறியாதவரா என்ன சகோதரர் தொல்.திருமா?”

‘‘சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கு என்ன காரணம் என்பதை, தி.மு.க தலைமை கண்டுபிடித்துவிட்டதா?”

‘‘ தி.மு.க ஆட்சிக்கு வர முடியவில்லையே தவிர, எங்களுக்கு இது பெரும் தோல்வி அல்ல. கடந்த சட்டமன்றத்தில் 23 உறுப்பினர்களை வைத்திருந்த தி.மு.க., இந்தச் சட்டமன்றத்தில் மூன்று மடங்குக்கும் மேல் தனது செல்வாக்கை அதிகப்படுத்தியிருக்கிறது.

சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் நேரடியாக மோதிய தொகுதிகளைப் பார்த்தால், அவர்களைவிட நான்கு தொகுதிகளில் நாங்கள் கூடுதலாக வெற்றிபெற்றுள்ளோம். நாங்கள் வாங்கிய வாக்குகளைவிட அ.தி.மு.க 1.1 சதவிகிதம்தான் அதிகம். கன்னியாகுமரி மாவட்டத்தில் அ.தி.மு.க-வுக்கு ஒரு தொகுதியில் டெபாசிட் போயிருக்கிறது. சில தொகுதிகளில் மூன்றாவது நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டது. 

 தி.மு.க வெற்றி வாய்ப்பை இழந்ததற்கு ஒருதலைப்பட்சமாகவே செயல்பட்ட தேர்தல் ஆணையம், அ.தி.மு.க-வுக்குத் துணைபோன மாநில காவல் துறை, அ.தி.மு.க சார்பில் தாராளமாகப் புழங்கிய கறுப்புப் பணம் ஆகியவையே காரணம். இவை அனைத்தும் மக்களுக்குத் தெரிந்த விஷயங்கள்தான்!”

‘‘கொங்கு மண்டலத்தில் மிகப்பெரிய தோல்வியை தி.மு.க சந்திக்க என்ன காரணம்?”

‘‘ `கொங்கு மண்டலம், தி.மு.க-வை முற்றிலும் கைவிட்டுவிட்டது' என எதன் அடிப்படையில் சொல்கிறீர்கள்? தி.மு.க., எந்தத் தொகுதியிலாவது டெபாசிட்டை இழந்திருக்கிறதா? கொங்கு மண்டலத் தொகுதிகளில் தி.மு.க பெற்ற வாக்குகளை ஒப்பிட்டுப்பாருங்கள், உண்மை புரியும். கொங்கு மண்டலத்தில் தி.மு.க-வுக்கு நேர்ந்திருப்பது சரிவு. அதற்கான காரணங்களை ஆய்ந்து சரிசெய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறோம்.”

‘‘ ‘தே.மு.தி.க-வில் இருந்து யாராவது வருவார்களா என, ஸ்டாலின் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்' என, பிரேமலதா குற்றம்சாட்டி இருக்கிறாரே?”

‘‘தி.மு.கழகம், யாரையும் எதிர்பார்த்து என்றைக்கும் காத்திருக்காது. பலர் வருவர்; சிலர் போவர்; கழகத்தின் பயணம், பாதை மாறாமல் என்றைக்கும் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கும். கூடாரம் காலியாகிக்கொண்டிருக்கும் விரக்தியில் அம்மையார் அப்படிப் பேசியிருப்பார். அதைப் பொருட்படுத்த வேண்டியது இல்லை.”

‘மேயர் மற்றும் நகராட்சித் தலைவர்களை மக்களால் நேடியாகத் தேர்ந்தெடுக்காமல், கவுன்சிலர்கள் மூலமாகத் தேர்வுசெய்வது என முடிவெடுக்கப்பட்டிருக்கிறதே?”

‘‘தோல்வி பயம்தான் இதற்குக் காரணம்.கோவை மாநகராட்சி நீங்கலாக மற்ற மாநகராட்சிப் பகுதிகளில் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-தான் அதிக அளவில் வென்றுள்ளது. எனவே, இந்த மாநகராட்சிகளை தி.மு.க-தான் கைப்பற்றும். அதைத் தடுக்கவே ஜெயலலிதா இந்தத் தந்திரத்தைச் செய்துள்ளார். அதையும் முறியடிப்போம்.

தி.மு.க மீதான ஜெயலலிதாவின் பயம், இந்தச் சட்டத்திலும் தெரிகிறது; சட்டமன்றத்திலும் தெரிகிறது!”

‘‘ உள்ளாட்சித் தேர்தலில் உங்கள் கூட்டணியில் புதிய கட்சிகளைச் சேர்ப்பீர்களா?”

‘‘அது சஸ்பென்ஸ்!”

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...