News
Loading...

ஜியோ லேட்டஸ்ட் அப்டேட்ஸ்

ஜியோ லேட்டஸ்ட் அப்டேட்ஸ்

ஒரு நிறுவனத்தின் தலைவர் தங்கள் நிறுவன பொதுக்குழுவில் முக்கால் மணி நேரம் பேசினால், போட்டி நிறுவனங்கள் அந்த இடைவெளியில் பங்கு மார்க்கெட்டில் 13 ஆயிரம் கோடி ரூபாயை இழக்க நேர்வது முகேஷ் அம்பானிக்கு மட்டுமே சாத்தியம். இன்று இந்தியாவே பரபரப்பாகப் பேசுகிற ‘ரிலையன்ஸ் ஜியோ’ செல்போன் சேவை அறிமுக நிமிடங்களில் ஏர்டெல், ஐடியா போன்ற எல்லா நிறுவனங்களும் இணைந்து இப்படி இழந்தன.

அதேநேரம் ரிலையன்ஸ் நிறுவன பங்குகளும் கணிசமான இழப்பை சந்தித்தன. ‘சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் செய்யப்படும் சேவை. ஆனால் 4 மாதங்களுக்கு எல்லாவற்றையும் இலவசமாகக் கொடுக்கிறார்களே, இவர்கள் எப்போது லாபம் சம்பாதிப்பது?’ என கவலைப்பட்ட பங்குதாரர்கள் பலர் அவசரமாக தங்கள் பங்குகளை விற்றதன் விளைவு இது. ஜியோவின் கட்டண விகிதங்களைப் பார்ப்பவர்கள், முகேஷின் புத்திசாலித்தனத்துக்கு ஒரு சபாஷ் நிச்சயம் போடுவார்கள்!

‘இந்தியாவில் ஆட்டா(கோதுமை)வை விட டேட்டாவின் விலை குறைவாக இருக்கிறது. மக்கள் ஆட்டாவுக்கு பதிலாக டேட்டாவை சாப்பிட முடியுமா?’ என மோடியைப் பார்த்து லாலு பிரசாத் யாதவ் கேட்கிறார். ரிலையன்ஸ் ஜியோ சாமர்த்தியமாக மோடியை பிராண்ட் அம்பாசிடராக பயன்படுத்திக் கொண்டுவிட்டது. உண்மையில் லாலு நம்புகிற அளவுக்குக்கூட ஜியோ திட்டத்தில் டேட்டாவின் விலை குறைவு அல்ல என்பதுதான் உண்மை!

இதோ சில புள்ளிவிவரங்கள்...
செல்போனுக்கு சிக்கனமாக செலவழித்தால் போதும் என நினைக்கிற ஆசாமிகள் ப்ரீபெய்டு திட்டங்களைத் தேர்வு செய்வார்கள். ஜியோவின் ப்ரீபெய்டு பிளான் 19 ரூபாயில் ஆரம்பிக்கிறது. ஆனால் இது ஒரு நாளில் காலாவதி ஆகிவிடும். அடுத்த 129 ரூபாய் பிளான் 7 நாட்களில் காலாவதி ஆகிவிடும். 149 ரூபாய் பிளான்தான் 28 நாட்களுக்கு வரும். 28 நாட்களுக்கு அதிகமாக பிளானே இல்லை. 4999 ரூபாய் பிளான்கூட 28 நாட்களுக்கு மட்டுமே!

பாதுகாப்பாக போஸ்ட்பெய்டு பிளானுக்குப் போகிறவர்களுக்கும் கட்டணம் குறைவில்லை. போஸ்ட்பெய்டில் குறைந்தபட்சக் கட்டணமே 149 ரூபாய். இதில் 0.3 GB டேட்டா மட்டுமே பயன்படுத்த முடியும். இதைவிட சற்றே அதிகமான பிளானுக்குப் போகலாம் என்றால், இதற்கு அடுத்த பிளானே 499 ரூபாயில்தான் இருக்கிறது. (வரிகள் தனி!) 999, 1499, 2499 என அடுத்தடுத்த பிளான்கள் கண்ணைக் கட்டுகின்றன.
 
‘சரி, இது ஒரு மாதத்துக்கான கட்டணமா?’ என்றால், ‘பில்லிங் சைக்கிள்’ என கவர்ச்சிகரமான ஒரு வாசகம் போட்டு திட்டங்களை அறிவித்திருக்கிறார்கள். ‘ஒரு பில்லிங் சைக்கிள் என்பது 28 நாட்கள்; எனவே வழக்கமாக ஒரு வருஷத்துக்கு 12 பில் கட்டுவதற்கு பதிலாக இங்கு 13 முறை பில் கட்ட வேண்டியிருக்கும்’ என்கிறார்கள். ரிலையன்ஸ் இந்த விஷயத்தை இன்னும்
தெளிவுபடுத்தவில்லை.

* குறைந்த கட்டண திட்டங்களில் அதிக டேட்டா கிடைக்காது. ‘அப்படிச் செய்தால் 4999 ரூபாய் திட்டங்களில் யாரும் சேர மாட்டார்கள், லாபம் குறையும்’ என்பதால் இந்த டெக்னிக். இந்தியாவில் ஒரு செல்போன் பயனாளி சராசரியாகக் கட்டும் கட்டணம் என்பது, மாதம் ஒன்றுக்கு 150 ரூபாய் என்ற அளவில்தான் இருக்கிறது. 200 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து, பார்த்துப் பார்த்து மூன்று மாதங்களுக்குப் பேசுகிறவர்கள் நிறைய இங்கு உண்டு. எனவே 250 ரூபாய் கட்டுபவர் கூட ‘அதிக மதிப்புள்ள கஸ்டமர்’ என அணுகப்படுகிறார். ஜியோ இந்த விஷயத்தில் ப்ரீ பெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு என இரண்டு வகையிலும் குறைந்தபட்ச சராசரியைத் தாண்டி வசூல் செய்துவிடும்.
 
‘இரவு நேரங்களில் எல்லையற்ற டேட்டா இலவசம்’ என ஒரு சலுகை இருக்கிறது. நமக்கெல்லாம் இரவு என்பது சூரியன் மறையும் ஆறே முக்கால் மணிக்கு வந்துவிடுகிறது. ஆனால் இந்த இலவச சலுகைக்கான இரவு நேரம், ‘அதிகாலை 2 மணி முதல் 5 மணி வரை மட்டுமே’. மற்ற நேரத்தை சலுகை நேரமாக நீங்கள் நினைத்துக்கொண்டால், உங்கள் டேட்டா கணக்கிலிருந்து மைனஸ் ஆகிவிடும்.

ஒரு பிளானில் கிடைக்கும் டேட்டா அளவைவிட இரண்டு மடங்கு அளவு டேட்டாவை வைஃபியாக வழங்குகின்றன ஜியோ திட்டங்கள். ஆனால் இவற்றைப் பெற ஜியோ இந்தியா முழுக்க உருவாக்கும் வைஃபி ஹாட்ஸ்பாட்களுக்குச் செல்ல வேண்டும். ஒரு ஹாட்ஸ்பாட்டில் குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே இதைப் பயன்படுத்தலாம்; அதன்பின் நமது டேட்டாவின் பயன்பாடு தொடங்கிவிடும்.
 
ஒவ்வொரு சிம் கார்டுடனும் 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஜியோ ஆப்ஸ் சந்தாவை இலவசமாக வழங்குகிறார்கள். ஜியோ டி.வி, ஜியோ சினிமா என இந்த எல்லா சேவைகளும் இலவசம்தான். ஆனால் இதைப் பயன்படுத்தும் ஒவ்வொரு நிமிடமும் டேட்டாவுக்கான கட்டணம் எகிறிக்கொண்டே இருக்கும். இதையெல்லாம் தாண்டி ஜியோ சிம் கார்டு வாங்க எல்லா நகரங்களிலும் கூட்டம் அலைமோதுகிறது. பல இடங்களில் கிடைக்கவில்லை. இதற்குக் காரணமாக சில கவர்ச்சி அம்சங்களும் இல்லாமல் இல்லை.

இப்போது வாங்குகிற சிம் கார்டுகளுக்கு டிசம்பர் 31ம் தேதி வரை பில் கட்டத் தேவையில்லை. அதற்குள் குறைந்தபட்சம் 10 கோடிப் பேர் ஜியோ சிம் வாங்குவார்கள் என கருதுகிறது ரிலையன்ஸ். அத்தனை பேரும் மற்ற நெட்வொர்க்குகளில் இருப்பவர்களோடு பேச வேண்டுமானால், மற்ற நெட்வொர்க்குகளும் தங்களுடைய இன்டர்கனெக்ட் அளவீட்டை அதிகரிக்க வேண்டும். ஒருவேளை அப்படி நிகழாமல் போனால், இலவச சலுகை தொடரலாம். (செப்டம்பருக்கு முன்பாக சோதனை முறை பயன்பாட்டின்போதே ஜியோவிலிருந்து மற்ற நெட்வொர்க்குகளுக்குப் போனவற்றில் சுமார் 5 கோடி அழைப்புகள் ‘கால் டிராப்’ ஆகின.

‘‘ரிலையன்ஸிலிருந்து மற்ற போன்களுக்குப் பேச முடியாது என்பது போன்ற தோற்றத்தை உருவாக்க திட்டமிட்டே இதைச் செய்தார்கள்’’ என முகேஷ் குற்றம் சாட்டியிருந்தார்.) ஜியோவில் டேட்டாவுக்கு மட்டுமே கட்டணம். பேசுவதற்கும், இந்தியா முழுக்க சென்றாலும் ரோமிங் கட்டணமும் கிடையாது. பேசும் கால்களுக்கு ஆகும் டேட்டா, உங்கள் டேட்டா அக்கவுன்ட்டிலிருந்து கழிக்கப்படாது. ஆனால் வீடியோ கால் செய்தால், அதற்கு டேட்டா கழிக்கப்படும்.
 
ஒரு நாளில் 100 எஸ்.எம்.எஸ் இலவசம். தீபாவளி, பொங்கல் வந்தால் கூடுதல் கட்டணம் கிடையாது. ஜியோவோடு மோத மற்ற நிறுவனங்கள் கட்டண விகிதங்களை மாற்றக்கூடும். எல்லோருக்குமே அந்தப் பயன் வந்து சேரும். எது எப்படியோ, ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் ஒவ்வொருவரையும் மாதா மாதம் குறைந்தது 500 ரூபாயாவது பில் கட்ட வைக்கும் கட்டாயத்தில் தள்ளிவிடும் ஜியோ! அதிக டேட்டா பயன்படுத்துகிறவர்கள், தங்களது பில்லில் பெரிய வித்தியாசம் இல்லை என உணர்வார்கள், ஆனால் இணைய இணைப்பின் தரம் மேம்பட்டிருக்கும்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.