News
Loading...

வெர்ச்சுவல் உலகில் வெர்ச்சுவல் பிசினஸில் ஜெயிக்கும் முறைகளைத் தெரிந்து கொள்வோம்

வெர்ச்சுவல் உலகில் வெர்ச்சுவல் பிசினஸில் ஜெயிக்கும் முறைகளைத் தெரிந்து கொள்வோம்

முன்பு நம் எல்லோருக்கும் நிறைய நேரம் இருந்தது. பொழுதுபோக்குக்காக ஓவியம், கதை, கவிதை, பாட்டு, நடனம், விளையாட்டு என்று சந்தோஷமாகச் செய்துவந்தோம். ஆனால் இன்று நம் எல்லோருக்கும் நேரம் இருப்பதில்லை. கிடைக்கிற நேரத்தையும் மொபைல் போனில் கேம்ஸ், வாட்ஸ் அப், ஃபேஸ்புக் என்று செலவிடுகிறோம்.

நம் திறமைகளைச் சம்பாத்தியமாக்கினால்தான் அவை அனைவராலும் கவனிக்கப்படுகின்றன. சம்பாத்தியமில்லாத திறமை கண்டுகொள்ளப்படுவதுமில்லை, மதிக்கப்படுவது மில்லை. ஒருவர் தஞ்சாவூர் பெயிண்டிங்கில் திறமைசாலியாக இருக்கிறார் என்ற தகவலைவிட, ‘வீட்டில் இருந்தே தஞ்சாவூர் பெயிண்டிங் செய்து மாதம் பத்தாயிரம் சம்பாதிக்கிறார்!’என்று செய்தி வந்தால் மட்டுமே அந்தத் திறமை கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது. அதே செய்தியை ஃபேஸ்புக், ட்விட்டர் என்று சமூக வலைத்தளங்கள் மூலம் பிரபலப்படுத்தும்போது பரவலான புகழ் கிடைக்கிறது.

நம்மிடம் இருக்கும் திறமையையே வேலையாகவும் தொழிலாகவும் மாற்றிக்கொள்ள முடியும். அதை ஆன்லைனில் வெளி உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காண்பிக்கலாம். கண்ணுக்குத் தெரியாத இந்த இணைய உலகம் வெர்ச்சுவல் வேர்ல்ட் (மெய்நிகர் உலகம்). இங்கே நாம் செய்யும் வர்த்தகம் வெர்ச்சுவல் உலகில் நடக்கும் வெர்ச்சுவல் பிசினஸ்.

தொழில்நுட்பத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்

நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் உலகம்போல மற்றோர் உலகம் இணையத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதை ‘வெர்ச்சுவல் உலகம்’, ‘சைபர் வேர்ல்ட்’ என்றும் சொல்லலாம். இணைய உலகத்தோடு இணைந்து பயணம் செய்யும்போதுதான் நம்மால் இந்த உலகத்தோடு ஒட்டி வாழ முடியும். நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த உலகில் செய்கிற அத்தனை வேலைகளையும் இணைய உலகிலும் செய்ய முடியும்.

இப்போது இந்த உலகம் நமக்கு இரண்டு வாய்ப்புகளைக் கொடுத்துள்ளது. ஒன்று, நேரடியாக அந்தந்த அலுவலகங் களுக்குச் சென்று வசதிகளைப் பயன்படுத்திக்கொள்வது. மற்றொன்று, இணையத்தில் ஆன்லைன் மூலம் உட்கார்ந்த இடத்தில் இருந்தே அவற்றைப் பெறுவது.

இனி வரும் காலத்தில் எல்லாமே இணையமயமாக்கப் பட்டிருக்கும். புத்தகங்கள், தியேட்டர்கள், கடைகள், லைப்ரரிகள், பள்ளிகள், கல்லூரிகள்... இப்படி எல்லாமே இருக்கும் இடம் தேடி இணையம் மூலம் வந்துவிடும். மனிதர்களின் சேவைகள் குறைந்து, எங்கும் எதிலும் கம்ப்யூட்டர், இன்டர்நெட், ஆப்ஸ் எனத் தொழில்நுட்பங்களின் ஆதிக்கம் நிறைந்திருக்கும். மனித உதவி குறைந்து போயிருக்கும்.

வருங்காலத்தில் ஏ.டி.எம்.மில் பணம் எடுக்கத் தெரியவில்லை, ஆன்லைனில் டிக்கெட் எடுக்கத் தெரியவில்லை, ஆப்ஸில் கால் டாக்ஸி புக் செய்யத் தெரியவில்லை என்று ஏராளமான ‘தெரியவில்லை’களைச் சுமந்து கொண்டு, மற்றவர்களின் உதவியை எதிர்நோக்கிக் காத்திருக்காதீர்கள். தகவல் தொழில்நுட்பத்தோடு இணைந்து வளர்ந்து வாருங்கள். அப்போதுதான் வருங்காலத்தில் மற்றவர்களைச் சார்ந்திருக்காமல் வாழ முடியும்.

வெர்ச்சுவல் உலகில் வெர்ச்சுவல் பிசினஸில் ஜெயிக்கும் முறைகளைத் தெரிந்து கொள்வோம்

திறமையையும் பிசினஸாக்கலாம்!

சிறிய இடத்தை வாடகைக்கு எடுத்து கேட்டரிங் பிசினஸ் செய்து வருவதாக வைத்துக்கொள்வோம். சுற்றியுள்ளவர்கள், அடுத்த தெருவில் உள்ளவர்கள், அடுத்த ஊரில் உள்ளவர்கள் என்று நமக்குத் தெரிந்தவர்கள் மட்டுமல்ல, அறிமுகம் இல்லாதவர்களும் நம் கேட்டரிங் பிசினஸ் குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். நம்மைத் தேடி வர வேண்டும். நிகழ்ச்சிகளுக்கு ஆர்டர் கொடுக்க வேண்டும். அப்போதுதான் பிசினஸ் நடக்கும்.

குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால், நமக்குச் சம்பந்தமே இல்லாதவர்களுக்கும் நம் தொழில் பற்றித் தெரிந்தால்தான் நாம் சிறிதாவது வெற்றி அடைந்திருக்கிறோம் என்று பொருள்.

கேட்டரிங் பிசினஸ் மூலம் நமக்குக் கிடைக்கிற லாபம் மாதம் 20 ஆயிரம் ரூபாய் என்று வைத்துக்கொள்வோம். இதே பிசினஸை ஆன்லைனிலும் செய்யத் தொடங்கினால், உட்கார்ந்த இடத்திலிருந்து உலகம் முழுவதும் நம் பிசினஸை விளம்பரப்படுத்த முடியும். லாபமும் இதைவிடப் பல மடங்கு கிடைக்கும். பிசினஸையும் விரிவுபடுத்தலாம்.

கேட்டரிங் பிசினஸ் ஓர் உதாரணம் மட்டுமே. டெய்லரிங், எம்பிராய்டரி, கைவினைப் பொருட்கள், டியூஷன், பியூட்டி பார்லர், பொருட்களை வாங்கி விற்பது போன்ற அனைத்து விதமான வியாபாரங்களையும் ஆன்லைனில் விளம்பரப்படுத்தி விரிவுபடுத்த முடியும்.

வெர்ச்சுவல் உலகில் வெர்ச்சுவல் பிசினஸில் ஜெயிக்கும் முறைகளைத் தெரிந்து கொள்வோம்

எழுத்து, இசை, நடனம், ஓவியம் போன்றவற்றில் திறமை உள்ளவர்களும் அவற்றை பிசினஸாக மாற்ற ஆன்லைனில் வாய்ப்புகள் உள்ளன.

முன்பெல்லாம் திருநெல்வேலி அல்வா வேண்டுமென்றால், திருநெல்வேலியில் இருந்து யாராவது வாங்கி வந்தால்தான் உண்டு. இன்றோ, ஆன்லைனில் ஆர்டர் செய்தால் அடுத்த 24 மணி நேரத்துக்குள் அல்வா நம் வயிற்றுக்குள். அந்த அளவுக்கு பிசினஸின் வேகம் உள்ளது. வியாபாரம் விரிவடைந்துள்ளது. லாபம் அதிகரித்துள்ளது. அமைந்தகரையில் உட்கார்ந்து கொண்டு இனிப்பு மிட்டாய் விற்கும் நபர், ஆன்லைன் ஆர்டர் பெற்று அமெரிக்காவில் இயங்கிவரும் இந்திய மளிகைக் கடைக்கு அதே இனிப்பு மிட்டாயை ஏற்றுமதி செய்கிறார். சென்னை இட்லிகள், சிங்கப்பூரில் இயங்கிவரும் அலுவலக கேன்டின்களுக்குக் காலை விமானத்தில் சுடச்சுடப் பயணம் செய்கின்றன.

வரும் காலத்தில் மளிகைக் கடைகள், துணிக் கடைகள், ஹோட்டல்கள், வங்கிகள், கல்வி நிறுவனங்கள் என்று எதுவுமே நம் கண்களுக்குத் தெரியப் போவதில்லை. ஆனால், இணையம் மூலம் அவற்றின் சேவைகளையும் பொருட்களையும் நம்மால் பயன்படுத்த முடியும். இதுதான் ‘வெர்ச்சுவல் பிசினஸ்’.

இனி, வெர்ச்சுவல் உலகில் வெர்ச்சுவல் பிசினஸில் ஜெயிக்கும் முறைகளைத் தெரிந்து கொள்வோம்.

(சம்பாதிப்போம்)

கட்டுரையாளர், மென்பொருள் நிறுவன நிர்வாக அதிகாரி. 
தொடர்புக்கு: compcare@hotmail.com

தொடரின் நோக்கம்

ஆன்லைனில் வேலைகளைத் தேடி, பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் கொடுக்கப்படும் ஆலோசனைகள் அல்ல. இவை உங்களிடம் இருக்கும் திறமையையும் நேரடியாக நீங்கள் செய்துகொண்டிருக்கும் பணி / தொழிலை ஆன்லைன் மூலமாக விரிவுபடுத்தி, உங்கள் வருமானத்தைப் பெருக்கும் ஆலோசனை மட்டுமே!

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.