News
Loading...

OLX வர்த்தகத்தில் கொடிகட்டிய களவாணி! இது 'புல்லட்' கணேசனின் கதை

OLX வர்த்தகத்தில் கொடிகட்டிய களவாணி! இது 'புல்லட்' கணேசனின் கதை

சென்னையில் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் திருட்டு சம்பவங்கள் நடந்தன. இது தொடர்பாக புகார்கள் போலீஸ் நிலையங்களில் குவிந்தன. திருட்டைத் தடுக்க வேண்டிய போலீஸாரையே திணற வைத்தது இந்த பைக் திருட்டு சம்பவங்கள். வாகன சோதனை, கண்காணிப்பு, இரவு ரோந்து என பல முயற்சிகள் செய்தாலும் பைக் திருட்டை கட்டுப்படுத்த முடியவில்லை. அதோடு திருடனையும் கண்டுப்பிடிக்கவில்லை.

இந்நிலையில் பைக் திருட்டை தடுக்க போலீஸாரே களமிறங்கினர். அப்போது பட்டினம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் பிரவீன் என்ற பைக் திருடன் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் போலீஸாரே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "சூளைமேடு பகுதியை சேர்ந்த பிரவீனுடன் சேர்ந்து அதே பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரும் பைக் திருட்டில் கொடி கட்டி பறந்தது தெரிந்தது. இவர்களது வர்த்தகத்துக்கு ஓஎல்எக்ஸ் என்ற இணையதளத்தைப் பயன்படுத்தியுள்ளனர். ஐ.டி.ஐ முடித்துவிட்டு வேலையில்லாமல் கணேசன் இருந்துள்ளார். பிறகு பி.சி.ஏ படித்துள்ளார். இந்த சமயத்தில் ஆன் லைன் வர்த்தகத்தில் கணேசன் ஈடுபட அதன் மூலம் அவருக்கு 7 லட்சம் ரூபாய் கடன் ஏற்பட்டது. கடனில் சிக்கித் தவித்த கணேசன், பைக்குகளை திருடி விற்கலாம் என்ற யோசனை ஏற்பட்டுள்ளது. ஹைடெக்காக திருட்டு தொழிலில் களமிறங்கியுள்ளார் கணேசன்.
புதிய புல்லட் பைக்குகள், ரேஸ் பைக்குகளை மட்டுமே திருடும் கணேசன், அதிலும் புதிய யுக்தியை கையாண்டுள்ளார். அதாவது, பைக்குகளை திருடுவதற்கு முன்பே அந்த வாகனத்தின் எண், இன்ஜின் எண் என அனைத்து விவரங்களையும் சேகரித்து அதற்கு போலி ஆர்.சி புத்தகத்தை தயாரித்து கொள்வார். பிறகு அந்த வாகனத்தை திருடி ஓஎல்எக்ஸில் விளம்பரப்படுத்துவார். இதற்கு அவர், தன்னுடைய பெயரை வினோத், ராம், பாலா என்று ஒவ்வொரு தடவைக்கு ஒரு பெயரைப் பதிவு செய்வார். அதோடு செல்போன் நம்பரையும் அடிக்கடி மாற்றுவார்.ஓஎல்எக்ஸ் என்பதால் வாடிக்கையாளர்களும் திருட்டு பைக்குகளை நல்ல விலைக்கு வாங்கியுள்ளனர். இதனால் கடந்த 6 மாதங்களில் மட்டும் 25 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதித்துள்ளார். கடனையும் அடைத்து ஆடம்பரமாக வாழ்ந்துள்ளார்.

இந்த சமயத்தில் பிரவீன், போலீசிடம் சிக்க, அதன் மூலம் கணேசனின் திருட்டு சம்பவங்கள் போலீசுக்கு தெரிந்து விட்டது. கணேசனைப் பிடிக்க போலீஸாரும், வாடிக்கையாளர் போல செயல்பட்டுள்ளனர். கணேசனிடம், புல்லட் வேண்டும் என்று ஓஎல்எக்ஸ் மூலமே முயற்சித்து அவரை கைது செய்துள்ளனர்" என்றனர்.

கணேசனிடமிருந்து 23 பைக்குகளைப் பறிமுதல் செய்துள்ளது போலீஸ். ஆனால் அவர் திருடிய பைக்குகளின் எண்ணிக்கை நூறை தாண்டும் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

வடிவேல் சொன்னது போல திருட்டு தொழிலுக்கு ரூம் போட்டு இவர்கள் எல்லாம் யோசிப்பார்கள் போல....

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.