News
Loading...

ஓணம் பண்டிகை இன்று திருவோணத்துடன் நிறைவு பெறுகிறது.

ஓணம் பண்டிகை இன்று திருவோணத்துடன் நிறைவு பெறுகிறது.

கேரளாவின் ஒட்டுமொத்த பாரம்பரியமும், கலாச்சாரமும் சங்கமிக்கும் நாளாக ஓணம் பண்டிகை திகழ்கிறது. ஜாதி, மத பேதமின்றி அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்படுகிறது. மலையாள ஆண்டின் முதல் மாதமான சிங்க மாதத்தில், பருவமழைக்காலம் முடிந்ததும் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. அறுவடைத்திருநாள் என்றும் இதனை அழைப்பர். சிங்க மாதத்தில் அத்தம் நட்சத்திரத்தில் தொடங்கும் ஓணப்பண்டிகை, 10 நாட்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.

பெரும்பாலும் பண்டிகைகள் கடவுளை முன்வைத்துதான் கொண்டாடப்படும். ஆனால் இந்த ஓணம் பண்டிகை மகத்தான மன்னனுக்காக கொண்டாடப்படுகிறது. கேரளத்தை சிறப்போடு ஆண்டு வந்த மகாபலி மன்னன் தான தர்மங்களில் சிறந்து விளங்கினார். இவரை சோதிக்க நினைத்த திருமால், மகாபலி வேள்வி செய்யும்போது, வாமனனாக (குள்ள உருவில்) வந்து, தனக்கு மூன்றடி மண் கேட்டார். மகாபலியும் எடுத்துக்கொள்ள சொன்னார்.

முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் ஆகாயத்தையும் அளந்த திருமாலுக்கு மூன்றாம் அடிக்கு இடமில்லை. இதனால், திருமாலின் பாதத்தில் சிரம் தாழ்த்தினார் மகாபலி. அவருக்கு முக்தி கொடுப்பதற்காக மகாபலியின் தலையில் கால்வைத்து பாதாள உலகுக்கு தள்ளினார் திருமால்.

தன்மீது அளவு கடந்த அன்பு வைத்திருப்பதால், ஆண்டுக்கு ஒருமுறை நாட்டு மக்களை கண்டு மகிழ திருமாலிடம் வேண்டினார் மகாபலி. அதன்படி ஒவ்வொரு திருவோண நாள் அன்றும் மகாபலி பாதாள உலகிலிருந்து பூலோகத்திற்கு வருவதோடு, தங்களது வீடுகளுக்கும் வந்து செல்வதாக கேரள மக்கள் நம்புகிறார்கள். இதை நினைவுகூர்ந்து ஓணத்தின்போது, ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அத்தப்பூ கோலமிட்டு மகாபலியை மக்கள் வரவேற்கின்றனர். அன்று பெண்கள் தூய வெள்ளை ஆடை அணிந்து கைகொட்டுக்களி என்னும் கும்மிப்பாட்டோடு மகாபலியை வரவேற்க ஆடி பாடுவர்.

கேரளாவில் ஆவணி மாதம் பூக்கள் பூத்துக்குலுங்கும் மாதமாகும். ஓணத்தை முன்னிட்டு பத்து நாட்களும் வீட்டின் முன்பு பூக்களினால் கோலங்கள் இட்டு மகிழ்வர். இந்த கோலங்களில் அத்தப்பூ இடம்பெறுவது சிறப்பு. பூக்கோலத்தில் முதல்நாள் ஒரே வகையான பூக்கள், இரண்டாம் நாள் இருவகையான பூக்கள் என தொடர்ந்து பத்தாம் நாள் பத்து வகையான பூக்களால் அழகு செய்வர்.

ஓண நாளன்று ஓணசத்யா என்ற 64 வகையான உணவு தயாரிக்கப்படுகிறது. ஓண நாளில் கேரளாவின் பாரம்பரியமான படகுப்போட்டி நடத்தப்படும். இந்தப்போட்டியில் பங்கு பெறுபவர்கள் வஞ்சிப்பாட்டு என்ற பாடலை பாடிக்கொண்டு படகை செலுத்துவர். கடுவாக்களி (புலி) நடனமும், கயிறு இழுத்தல், களரி போன்ற விளையாட்டுக்களும் ஓணத்தின் சிறப்பாகும். இந்த ஆண்டு செப். 4ம் தேதி ஓணம் பண்டிகை தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இப்பண்டிகை இன்று திருவோணத்துடன் நிறைவு பெறுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...