News
Loading...

அரசியல்வாதிகளின் பிடியில் விளையாட்டுத் துறை!

ஒரு குத்துச்சண்டை வீரரின் பன்ச்

ஒலிம்பிக் ஃபீவர் அடங்கிவிட்டன. இனி அடுத்த ஒலிம்பிக் போட்டி நடக்கும் போதுதான் இனி விளையாட்டுத் துறை பற்றி பேசுவோம். விளையாட்டுத் துறைக்கு மத்தியில் ஒரு தனி அமைச்சகம், மாநில அரசில் தனி அமைச்சகம், பல விளையாட்டு அமைப்புகள் என அத்தனை படைப் பரிவாரங்கள் இருந்தும் சர்வதேச அளவில் இந்திய வீரர்கள் மண்ணை கவ்வக் காரணம் விளையாட்டு அரசியல்தான்.

ஒரு குத்துச்சண்டை வீரரின் பன்ச்

பெயர் குறிப்பிட விரும்பாத குத்துச்சண்டை ஆர்வலர் ஒருவர், ‘‘தமிழகத்தில் தமிழ்நாடு குத்துச்சண்டை கழகம் நேரு ஸ்டேடியத்தில் இயங்கிவருகிறது. அதிகாரப்பூர்வமான இந்த அமைப்புக்குப் போட்டி அமைப்பு ஒன்றும் உள்ளது. சென்னை போன்ற பெரிய நகரங்களில் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த இரு அமைப்புகளும் வசதி வாய்ப்பை ஏற்படுத்தித் தருகின்றன. இந்த அமைப்புகள் தங்கள் பலத்தைக் காட்டும் போட்டியில் திறமையற்றவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். இவர்களில் அரசியல் தொடர்பு உள்ளவர்கள் மட்டுமே அடுத்தடுத்த நிலைக்குச் செல்லமுடியும்.

அகில இந்திய அளவிலான பயிற்சிக்காக தமிழகத்தைச் சேர்ந்த வீரர் ஒருவர் சில ஆண்டு களுக்கு முன் பயிற்சிக்காக ஹைதராபாத்திலுள்ள குத்துச்சண்டை கழகத்திடம் சேர்ந்தார். திறமையாகப் பயிற்சி பெற்றும், ஆந்திரக்காரரான அந்த அமைப்பின் நிர்வாகி, தனது மாநில வீரரை ஊக்குவிப்பதற்காக தமிழக வீரரை தகுதியற்றவர் என திருப்பி அனுப்பினார். அடுத்த சில ஆண்டுகளில் தேசிய அளவில் சீனியருக்கான போட்டியில் வெண்கலம் வென்றார் அந்தத் தமிழக வீரர். இப்படி அரசியல், மதம்,  மாநிலம் என ஒவ்வொரு விளையாட்டும் குறுகிய மனப்பான்மையில் சிக்கிக் கிடக்கிறது’’ என்றார்.

ஒரு குத்துச்சண்டை வீரரின் பன்ச்

தேசிய அளவில் குத்துச்சண்டை விளையாட் டில் பங்கேற்ற தமிழக வீரர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவர்களில் ஒருவர் ராஜேஷ். கடந்த 2000-ம் ஆண்டு நடந்த இந்தோ மொரிஷியஸ் சர்வதேச போட்டியில் தங்கம் வென்றவர் இவர். ஏ.கே.மிஷ்ரா கோப்பையில் தங்கமும் வென்றும் அரசால் அதிகம் கண்டுகொள்ளப்படாத தமிழக வீரர் இவர்.

ஒரு குத்துச்சண்டை வீரரின் பன்ச்

அங்கீகாரம் கிடைக்காத நிலையிலும் இளம் வீரர்களுக்குப் பயிற்சி அளித்துவரும் அவரை சந்தித்துப் பேசினோம். “பள்ளி வயதில் என் வீட்டருகே இருந்த விளையாட்டு மைதானத்தில் முன்னாள் குத்துச்சண்டை வீரர் சிவப்பிரகாசம் பயிற்சி அளிப்பார். அதைப் பார்த்து நாமும் ஒருநாள் பாக்ஸர் ஆகவேண்டும் என்ற ஆசை மனதில் கொழுந்துவிட்டு எரிந்தது. ஆனால், பயிற்சியின்போதே ஒருநாள் எனது குருநாதர் சிவப்பிரகாசம் இறந்தார். பிறகு, லக்ஷ்மிகாந்தன் என்பவரிடமும், தேவ் ஆனந்த என்பவரிடமும் பயிற்சி பெற்றேன். பிரபல குத்துச்சண்டை வீரரான அர்ஜுனா விருதுபெற்ற தேவராஜ் என் நெருங்கிய உறவினர். ஒருமுறை நேரு ஸ்டேடியத்தில் நான் பங்கேற்ற போட்டியைப் பார்த்துவிட்டு வியந்து போனார். என்னைப் பாராட்டியதோடு, எனக்குப் பயிற்சி அளிக்கவும் ஒப்புக்கொண்டார். அதற்குப் பிறகு, தேசிய மற்றும் சர்வேதேச அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு பல பதக்கங்களைப் பெற்றேன். எனக்கொரு கனவு இருந்தது. அது ஒலிம்பிக்கில் பதக்கம் பெறுவது. பல காரணங்களால் இலக்கை அடையமுடியவில்லை. நான் இழந்த வாய்ப்பை இன்னொரு தமிழக வீரர் பெறவேண்டும் என உறுதி அதற்கான முயற்சிகளில்  ஈடுபட்டுள்ளேன்.

லயோலா கல்லூரி எனக்கு களம் கொடுத்திருக்கிறது. சாமான்யனான என்னாலேயே சர்வதேச அளவில் வீரர்களைத்  தயார்படுத்த முடிகிறதென்றால் அரசு நினைத்தால் நிறைய செய்யலாமே?” என்றார்.  

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.