News
Loading...

காவிரி பிரச்னையில் கர்நாடகாவில் தொடர் வன்முறை சொந்த ஊர்களுக்கு திரும்பும் தமிழர்கள்

காவிரி பிரச்னையில் கர்நாடகாவில் தொடர் வன்முறை சொந்த ஊர்களுக்கு திரும்பும் தமிழர்கள்

கர்நாடகா மாநிலத்தில் தொடர்ந்து வன்முறை நீடிப்பதால் ஏராளமான தமிழர்கள் சொந்த ஊர் திரும்பி வருகின்றனர். தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து விட எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவில் நேற்று முன்தினம் வன்முறை வெடித்தது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டன. தமிழக பதிவெண் கொண்ட  வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. 

ஆங்காங்கே வன்முறை நீடிப்பதால்  தமிழக - கர்நாடக மாநிலம் இடையே போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. தமிழக-கர்நாடக எல்லையான ஓசூர் அருகே ஜூஜூவாடி மற்றும் அத்திப்பள்ளியில் இரு மாநில போலீசார் குவிக்கப்பட்டனர். அத்துடன், துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

சொந்த ஊர் திரும்பும் தமிழர்கள்:  பெங்களூரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் வன்முறை சம்பவங்களால் தமிழர்கள் மூட்ைட முடிச்சுகளுடன் தங்களின் சொந்த ஊருக்கு திரும்ப தொடங்கி உள்ளனர். இதில் பெரும்பாலானோர் தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை  சேர்ந்தவர் இன்பரசன். இவர் பெங்களூர் ராஜாஜி நகர் 4வது குறுக்கு தெருவில் சிப்ஸ்கடை நடத்தி வந்தார். 

ராஜாஜி நகரில் தமிழர்களுக்கு சொந்தமான நிறுவனங்களை தாக்குவதால் அச்சத்தில் கடையை மூடி விட்டு நேற்று பெங்களூரில் இருந்து அத்திப்பள்ளி வரை வந்து அங்கிருந்து ஓசூருக்கு வந்தார். அவர் கூறுகையில், `தமிழர்களுக்கு சொந்தமான நிறுவனங்கள் என தெரிந்தால் தாக்குகின்றனர். எனது கடை சிறிய கடையாக இருந்ததால் முன்கூட்டியே மூடி விட்டேன். நிலைமை சரியாகும் வரை சொந்த ஊரில் இருக்கலாம் என வந்து விட்டேன். என்னைப்போல் பலர் உயிருக்கு பயந்து இரவோடு இரவாக ரயில் பிடித்து வந்துள்ளனர்’’ என்றார்.

கர்நாடகா பஸ்களுக்கு பாதுகாப்பு:  தமிழக-கர்நாடக எல்லையான ஓசூர் அருகே ஜூஜூவாடி மற்றும் அத்திப்பள்ளியில் இரு மாநில போலீசார் குவிக்கப்பட்டனர். கிருஷ்ணகிரி கலெக்டர் கதிரவன், எஸ்.பி. மகேஷ்குமார் ஆகியோர் நேற்று மாநில எல்லையில் ஆய்வு செய்தனர். பின்னர் அத்திப்பள்ளியில் பலர் பஸ் வசதி இல்லாமல் தவித்து வந்ததால் அவர்களை அழைத்து வர போலீஸ் பாதுகாப்புடன் தமிழக பஸ்களை அனுப்ப முடிவு செய்யப்பட்டது. 

ஓசூர், ஜூஜூவாடியில் இருந்து தமிழக அரசு போக்குவரத்து கழக பஸ்கள் நேற்று மதியம் 1.30 முதல் அத்திப்பள்ளிக்கு இயக்கப்பட்டது. அதோடு போலீஸ் வேன்களும் இயக்கப்பட்டன. கர்நாடக பயணிகள் அனைவரும் அதில் ஏற்றி அத்திப்பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கிருந்து தமிழர்களும் ஓசூருக்கு அழைத்து வரப்பட்டனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...