
நடிகர் : அஜெய்
நடிகை : ஹசிகா
இயக்குனர் : தங்கதுரை எம்
இசை : கார்த்திகேயன் எஸ்
ஒளிப்பதிவு : சார்லஸ் மெல்வின் எம்
மன்னராட்சி காலத்தில் வறட்சியின் காரணமாக பஞ்சத்தில் சிக்கித் தவிக்கும் ஒரு நாட்டின் அரசரின் கையில் ஒரு தகடு இருக்கிறது. அந்த தகட்டில் பொன், வைடூரியங்கள் நிறைந்த ஒரு புதையல் இருக்கும் இடத்திற்கான வழி இருக்கிறது. அந்த புதையலை தேடிக் கண்டுபிடித்து நாட்டில் நிலவும் பஞ்சத்தை போக்க நினைக்கிறார். அப்போது, நயவஞ்சகனான மந்திரி ராஜ்கபூர், அந்த தகட்டை கைப்பற்ற நினைக்கிறார்.
இதற்காக நாட்டின் மன்னன், இளவரசி ஆகியோரை கொல்லும் மந்திரி, அந்த தகட்டை தேடும்போது அது தளபதியின் கையில் கிடைக்கிறது. அவரிடம் சண்டையிட்டு தகட்டை கைப்பற்ற முயற்சிக்கும்போது, தளபதியும், மந்திரியும் இறந்து போகிறார்கள். இதனால், தகடு யார் கைக்கும் கிடைக்காமல் அங்கேயே புதைந்து போகிறது.
பல நூற்றாண்டுகள் கழித்து இந்த கதை அப்படியே கல்லூரியில் பாடமாக சொல்லப்படுகிறது. இதை அறியும் நாயகன் அஜய், நாயகி ஹசிகா தத் மற்றும் அவரது நண்பர்கள் நாலு பேர் சேர்ந்து, தகடு தொலைந்ததாக கூறப்படும் காட்டுப்பகுதிக்கு சென்று அந்த தகட்டை தேடிக் கண்டுபிடிக்க புறப்படுகின்றனர். அங்கு போனபிறகு இவர்களுக்கு ஒரு பெரிய பிரச்சினை ஏற்படுகிறது.
அந்த பிரச்சினையை சமாளித்து அந்த தகட்டை கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
நாயகன் அஜய், நாயகி ஹசிகா தத் என படத்தில் முக்கால் வாசி நடிகர்கள் புதுமுகம் என்பதால் படத்தில் உள்ளவர்களிடம் பெரிதாக நடிப்பை எதிர்பார்க்க முடியவில்லை. இருப்பினும், தங்களது திறமைக்கேற்ற நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். மன்னராட்சி காலத்தில் நடக்கும் கதையில் மட்டுமே அனுபவம் வாய்ந்த நடிகரான ராஜ்கபூர், பல படங்களில் நடித்துள்ள சனம் ஷெட்டி ஆகியோர் தெரிந்த முகங்கள். ராஜ்கபூர் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தை சிறப்பாகவே செய்திருக்கிறார். சனம் ஷெட்டியும் தனது பங்குக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
மன்னர் காலத்து சம்பவத்தை நவீன காலத்தோடு இணைத்து படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் தங்கதுரை. ஒரு மணி நேரத்திற்குள் சொல்லிவிடக்கூடிய கதையை, நீளத்திற்காக தேவையில்லாத காட்சிகளை அமைத்திருப்பது படத்திற்கு தொய்வை ஏற்படுத்தியிருக்கிறது.
சார்லஸ் மெல்வினின் பின்னணி இசை பரவாயில்லை. மன்னராட்சி காலத்திற்கும், நவீன காலத்திற்கும் மாற்று ஒளியமைப்பு வைத்து தனது பணியை சிறப்பாக செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கார்த்திகேயன்.
மொத்தத்தில் ‘தகடு’ பழசு.
முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்
News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.