News
Loading...

விமான நிலையம் - சின்னமலை இடையே மெட்ரோ ரயில் சேவை : ரயிலை பெண் டிரைவர் இயக்கினார்

விமான நிலையம் - சின்னமலை இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது : ரயிலை பெண் டிரைவர் இயக்கினார்

சென்னை : விமான நிலையம் - சின்னமலை இடையே மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா நேற்று தலைமை செயலகத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பச்சை கொடியை அசைத்து தொடங்கி வைத்தார். அந்த ரயிலை பெண் டிரைவர் அம்சவேணி ஓட்டினார். 
சென்னையில், கோயம்பேடு - ஆலந்தூர் இடையே  உயர்த்தப்பட்ட பாதையில் 2015ம் ஆண்டு ஜூன் மாதம் 29ம் தேதி பயணிகளுக்கான  மெட்ரோ ரயில் சேவை துவங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, விமான நிலையம் - சின்னமலை இடையே பயணிகளுக்கான மெட்ரோ ரயில் சேவையை  முதல்வர் ஜெயலலிதா 21ம் தேதி துவக்கி வைப்பார் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று மதியம் 12 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து  வீடியோ கான்பரன்சிங் மூலம் ஜெயலலிதா பச்சை கொடியை அசைத்து தொடங்கி வைத்தார். அதேநேரம் விமான நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் மத்திய நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு, கப்பல் போக்குவரத்து துறை இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் ஆகியோர் கொடி அசைத்து முதல்வர் மெட்ரோ ரயில் சேவையை ரயிலை தொடங்கி வைத்தனர். 

முதல்வர் கொடியை அசைத்ததும், விசில் சத்தத்துடன் மெட்ரோ ரயிலை அம்சவேணி (26) என்ற பெண், விமான நிலையத்தில் இருந்து இயக்கி சென்றார். அதைத்தொடர்ந்து, 2வது ரயிலை நளினி (28) என்ற பெண் இயக்கினார். இந்த ரயிலில் மத்திய அமைச்சர்கள் வெங்கய்யா நாயுடு, பொன் ராதாகிருஷ்ணன், அமைச்சர் எம்.சி.சம்பத், பெரும்புதூர் தொகுதி எம்பி கே.என்.ராமச்சந்திரன், தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் மெட்ரோ ரயில் நிலைய அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் பயணம் செய்தனர். விமான நிலையம் - சின்னமலை இடையே இயக்கப்படும் மெட்ரோ ரயில் மீனம்பாக்கம், நங்கநல்லூர் சாலை, ஆலந்தூர், கிண்டி ஆகிய ரயில்  நிலையங்களில் நின்று செல்லும்.

மத்திய அமைச்சர்கள் காத்திருப்பு: வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்ற மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா தலைமை செயலகத்திலும், மத்திய நகர்ப்புற வளர்ச்சி துைற அமைச்சர் வெங்கய்யா நாயுடு, கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் விமான நிலையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மத்திய அமைச்சர்கள் வெங்கய்யா நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் சென்னை விமான நிலையத்துக்கு காலை 11 மணிக்கே வந்தனர். பின்னர் காலை 11.20 மணிக்கு சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் விழா நடைபெறும் மேடைக்கு வந்தனர். விழா 11.30 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் ஜெயலலிதா 11.37 மணிக்கு தான் தலைமை செயலகம் வந்தார். மத்திய அமைச்சர்கள் ஜெயலலிதாவுக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

5 பெண் டிரைவர்கள்

விமான நிலையம் - சின்னமலை இடையேயான முதல் ரயிலை பெண் டிரைவர் அம்சவேணி இயக்கினார். இதுதவிர நளினி, பிரீத்தி, சுமித்ராதேவி, ஜெயஸ்ரீ உள்ளிட்ட 5 பெண் டிரைவர்களும் மெட்ரோ ரயிலை ஓட்ட பயிற்ச்சி அளிக்கப்பட்டுள்ளது. இதுதவிர 13 ஆண்களும் டிரை வர்களாக உள்ளனர். 4 பெட்டிகள் கொண்ட ரயில் தற்போது இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது. அதிக வரவேற்பு ஏற்பட்டால் 6 ரயில் பெட்டிகள் கொண்ட ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல் பயணிகள் மெட்ரோ ரயிலை இயக்கிய அம்சவேணி கூறும்போது, “அதிகளவில் பயணிகளை ஏற்றிக் கொண்டு ரயிலை ஓட்டிச் செல்வது சந்தோஷமாக உள்ளது. பொதுமக்கள் மெட்ரோ ரயிலை அதிகம் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் குறையும்” என்றார்.

விமான நிலையம் - கோயம்பேடு கட்டணம் ரூ.50

விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும் ரயில் மீனம்பாக்கம், நங்கநல்லூர் சாலை, ஆலந்தூர், கிண்டி வழியாக சின்னமலை வரை உயர்த்தப்பட்ட பாதையில் செல்லும். விமான நிலையத்தில் இருந்து கோயம்பேடு செல்பவர்கள், ஆலந்தூரில் இறங்கி 2வது மாடியில் உள்ள கோயம்பேடு - ஆலந்தூர் இடையே இயக்கப்படும் மெட்ரோ ரயிலில் ஏறி செல்ல வேண்டும். விமான நிலையம் - கோயம்பேடு வரை கட்டணமாக ரூ.50 வசூலிக்கப்படுகிறது. விமானநிலையம் - சின்னமலை செல்ல ரூ.40 கட்டணம் ஆகும். இதுவே மாநகர பஸ்சில் செல்ல ரூ.10 முதல் ரூ.15 வரை மட்டுமே செலவாகும். ஆனால், மெட்ரோ ரயிலில் சென்றால் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல், குளுகுளு ஏசி வசதியுடன் செல்ல முடியும். மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று நேற்று பயணம் செய்த பலரும் கருத்து தெரிவித்தனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...