News
Loading...

10 பூச்சிகள்... 10 செய்திகள்..!

10 பூச்சிகள்... 10 செய்திகள்..!

உலகில் எந்த உயிரியும் வீணாகப் பிறப்பதில்லை. இந்தப் பூச்சிகளை நாம் அறிந்திருந்தாலும், பெரிதாக கவனம் செலுத்தியிருக்கமாட்டோம். ஆனால் அவையும் இயற்கையின் சுழற்சியில் முக்கியமான அங்கம் வகிப்பவை என்பதை நாம் அறிவதில்லை. இந்த 10 பூச்சிகள் அளவில் சிறியவை என்றாலும் நம்முடைய வாழ்வில் இவற்றினுடைய தாக்கம் அதிகம். 

கொசுக்கள்

ஸ்ட்ரா போட்டு ரத்தம் உறிஞ்சும் கொசுக்களைக் குறித்து செய்யாத ஆராய்ச்சி கிடையாது. தொற்றுநோய்களைப் பரப்பும் கொசுக்களிடமிருந்து தப்பிக்க நாம் தோலில் தடவாத க்ரீம்கள் கிடையாது. 

அப்புறமும் கொசுக்கள் - குறிப்பாக பெண் கொசுக்கள் தேடி வந்து கடிக்கின்றன. இதற்கு என்ன காரணம்? ‘கொசு உங்களிடமிருந்து ரத்தம் கடன் கேட்க  உங்கள் மரபணுதான் காரணம்’ என்கிறது ஆய்வு ஒன்று. 

லண்டனில் உள்ள சுகாதாரம் மற்றும் சூழல் மருத்துவப் பள்ளி, 37 இரட்டையர்களை வைத்து ஒரு சோதனை செய்தது. 20 கொலைவெறி ரத்த தாகம் கொண்ட கொசுக்கள் உள்ள ட்யூபில் இரட்டையர்களின் கைகளை நீட்டச்சொல்லி பரிசோதனை நடந்தது. அதில் சிலரின் கைகளைச் சுற்றி அமர்ந்து ரத்தம் உறிஞ்சின கொசுக்கள். 

ஒரே மாதிரியான தோற்றம் கொண்ட டி.என்.ஏ.வை பகிர்ந்துகொண்ட இரட்டையர்களின் கையிலும்,  உடன்பிறந்தவர்களின் டி.என்.ஏ.வை பகிராத இரட்டையர்கள் கையிலும் ரத்தம் உறிஞ்ச கொசுக்கள் அமர்ந்தது வேறுபட்டிருந்தது. சிலரின் உடலில் இயல்பாகவே கொசு விரட்டும் தன்மை இருந்தது. அந்த ஜீன்களை அடையாளம் கண்டால் கொசு நம்மை கடிக்காதபடி மருந்து உருவாக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

10 பூச்சிகள்... 10 செய்திகள்..!

மோனார்க் வண்ணத்துப்பூச்சிகள்

மோனார்க் வண்ணத்துப்பூச்சிகளின் (Danaus plexippus) இடப்பெயர்வு மற்றும் குறைந்து வரும் எண்ணிக்கை குறித்த தகவல்கள் அறிவியல் மீளாய்வு செய்யவேண்டிய தேவையை உணர்த்தி வருகின்றன. இவை இலையுதிர்காலத்தில் மெக்சிகோவின் கிழக்குப் பகுதியிலிருந்து அமெரிக்கா மற்றும் கனடாவின் தெற்குப் பகுதியை நோக்கிச் செல்கின்றன. அங்குள்ள ஒரு மரத்தின் மேல் அனைத்து வண்ணத்துப்பூச்சிகளும் அமர்கின்றன என்பது வியப்புக்குரிய செய்தி. 

வாழிடங்கள் அழிக்கப்படுவதால் ஒவ்வொரு ஆண்டும் அதன் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக மில்க்வீட் எனும் தாவர இனம் 58 சதவிகிதத்திற்கு மேல் குறைந்ததை ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். மரபணு மாற்றப்பட்ட சோளம், சோயாபீன்ஸ் உள்ளிட்ட பயிர்களுக்குத் தெளிக்கும் க்ளைபோசைட் எனும் களைக்கொல்லியின் பயன்பாடு அதிகமானதும் வண்ணத்துப்பூச்சிகளின் அழிவிற்குக் காரணம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

பேன்கள்

நமது தலையைப் பிய்த்துக்கொள்ள வைக்கும் அதே பேன்தான் (Pediculis humanus capitis). ஆறு கால்கள் கொண்ட பேன்கள் ஈரமான வெப்பம் மிகுந்த இடமான நம் தலையைத் தேர்வு செய்து வாழ்கின்றன. ‘‘பல்வேறு சிகிச்சை முறைகளையும் தாண்டி பேன்கள் எப்படி உயிர் பிழைத்து வாழ்கின்றன என்பது ஆய்வுக்குரியது’’ என்கிறார் ஆம்ஹெர்ஸ் பகுதியில் உள்ள மாசாசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தின் வேதியியல் மற்றும் சூழல் நச்சியல் துறைப் பேராசிரியர் ஜான் கிளார்க். ‘‘பைரெத்ரின்ஸ் மற்றும் பைரெத்ராய்ட்ஸ் உள்ளிட்ட பூச்சிக்கொல்லிகளின் தாக்குதலை பேன்கள் தாங்கி வளரத் தொடங்கிவிட்டன’’ என ஆச்சரியத் தகவல் கூறுகிறார் ஜான் க்ளார்க்.

தேனீக்கள்

பூச்சியியல் ஆய்வாளர்கள் பல  பூச்சிகளை ஆராய்ச்சி செய்திருந்தாலும் தேனீக்கள் அவர்களுக்கு ஸ்பெஷல்தான். வருமானத்தைக் கொட்டிக் கொடுக்கும் பூச்சி இதுதானே! தேனீக்கள் பூக்களில் உள்ள தேனை தனக்கென சேகரிப்பதோடு அயல் மகரந்தச் சேர்க்கைக்கும் ஒன்று சேர்த்து டிக் அடிப்பதால்தான் இந்த அளவில்லாத அக்கறை. 

பயிர் விளைச்சலினால் ஓராண்டில் அமெரிக்க அரசுக்கு கிடைத்த லாபம் மட்டுமே 24 பில்லியன் டாலர்கள் என்றால் அதில் தேனீக்களின் பங்கு 15 பில்லியன் டாலர்களாகும்.  ஆனால் பூச்சிக்கொல்லிகளின் அதீத பயன்பாட்டினால் காலனி கொலாப்ஸ் டிஸ் ஆர்டர் (கூட்டுக்கு வழிதெரியாமல் தவிப்பது) எனும் கோளாறினால் பாதிக்கப்பட்டு தேனீக்கள் இறந்துவிடுகின்றன. தேனீக்களின் நச்சு, பக்கவாதம் மற்றும் பல்வேறு நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. 

சிவப்பு எறும்புகள்

அமெரிக்காவின் சிவப்பு எறும்புகளை (Solenopsis invicta) நெருப்பு எறும்புகள் என்று கூறலாம். பிரேசில் கப்பலிலிருந்து அமெரிக்காவிற்கு 1930ம் ஆண்டு வந்திறங்கி தனது செயல்பாடு களின் மூலம் ‘நான் வந்துட்டேன்னு சொல்லு’ எனக் கூறியிருக்கிறது.

 தமது எரிச்சலூட்டும் நச்சின் மூலம் விலங்கு களைக் கொன்று சில மணி நேரத்தில் முழு உடலையும் கூட்டமாகச் சேர்ந்து தின்று காலி செய்கின்றன இவை. தாவரங்களின் மேல் உள்ள மண்ணை அகற்றுவது, குறிப்பிட்ட இன உயிரிகளைத் தாக்கி அவற்றை அழிப்பது என 24 மணி நேரமும் வேலை பார்க்கும் சிவப்பு எறும்புகளால் ஒரு ஆண்டிற்கு டெக்சாஸ் மாநிலத்தில் மட்டுமே 1.2 பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்படுகிறது. 

மரத்தை அழிக்கும் பூச்சிகள்

பைன் மர வண்டுகள் (Dendroctonus ponderosae), மரகத நிற துளைப்பான்கள் (Agrilus planipennis), ஜிப்சி அந்துப்பூச்சிகள் (Lymantria dispar) ஆகிய பூச்சி வகைகளே காடுகளிலுள்ள பெரும்பாலான மரங்களைத் தங்களது உணவாகக் கொள்வதோடு, அவற்றை முற்றாக அழித்தும் விடுகின்றன. ஆஷ் மரங்களைத் துளையிடும் சாம்பல் நிற துளைப்பான் தன் முட்டைகளை அதில் வைத்துவிடுகிறது. 

இந்த வழிமுறையில் வளர்ச்சி நிலைகளில் பல்லாயிரக்கணக்கான மரங்களைத் தின்று அழிக்கின்றன. ஜிப்சி அந்துப்பூச்சி தனது முட்டைகளை மரத்தில் துளையிட்டு வைப்பதோடு, சில பூஞ்சைகளையும் அதில் உள்ளிடுகிறது. லார்வாக்கள் உருவாகி வளரும்போது பூஞ்சைகளை உண்டு வளரும். ஆனால் பூஞ்சைகள் மரம் முழுக்க பரவி அதனை அழித்துவிடுவது மோசமான க்ளைமேக்ஸ்.  

ஈக்களின் புழுக்கள்

பல நூற்றாண்டுகளாக மருத்துவ காயங்களைச் சுத்தம் செய்யவும், நோய்த் தொற்றை தடுக்கவுமான பயன்பாடுகளுக்கு புழுக்கள் பயன்பட்டு வருகின்றன. இவை இறந்துபோன திசுக்களை உண்டு காயம்பட்ட இடத்தை சுத்திகரிக்கின்றன. ஆனால் மருத்துவத்தில் ஆன்டிபயாடிக்குகள் கண்டுபிடிக்கப்பட்டபின் புழுக்கள் குப்பைத்தொட்டியில் எறியப்பட்டது வரலாறு.

ஆனால் வரலாறு திரும்புவதுதானே ட்ரெண்ட் இப்போது. புழுக்களைப் பயன்படுத்த எஃப்டிஐ அனுமதி கிடைத்துவிட்டது. 2013ம் ஆண்டு வெளியான ஆய்வில் ‘மருத்துவர்களை விட புழுக்கள் இறந்த திசுக்களை துல்லியமாக அகற்றுகின்றன’ என முடிவுகள் கூறுகின்றன. இறந்துபோன உடல் சிதையும்போது அவ்வுடலில்  ஈக்கள்தான் முதன்முதலில்  தங்கள் முட்டைகளை இடுகின்றன. இவைதான் புழுக்களாக மாறிய வளர்ச்சி நிலையில் இறந்த திசுக்களை உண்கின்றன. 

கரப்பான் பூச்சிகள்

35 கோடி ஆண்டுகளாக நம்மிடையே வாழ்ந்து வரும் உயிரியான கரப்பான் பூச்சி, இன்னும் தீராத மர்மங்களை தன்னுள் வைத்துள்ளது. 2007ம் ஆண்டு வெண்டர்பில்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் செய்த ஆராய்ச்சியின் படி, பல பூச்சிகளும் வெறுக்கும் பெப்பர்மின்ட், பெரும்பாலான பூச்சிகளும் விரும்பும் வெனிலா என இரண்டையும் கரப்பான் பூச்சியின் முன் வைத்து அதன் கற்கும் தன்மையை அறிய முயன்றனர். 

அதில் கரப்பான்பூச்சிக்கு கற்கும் திறன் இரவில் அதிகமாகவும் காலையில் மந்தமாகவும் இருப்பது கண்டறியப்பட்டது. அதன் ஞாபக சக்தி அதன் உயிரியல் கடிகாரத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது என்பது இந்த ஆராய்ச்சியில் கிடைத்த புதிய தகவலாகும். 

கரும்புள்ளி வண்டு

காட்டில் மிக எளிதாக உங்கள் கண்ணில் தட்டுப்படும் கரும்புள்ளிவண்டு (Coccinellidae), தனது வேறுபட்ட கலர்ஃபுல் முதுகு ஓடுகள் மூலம் நினைவுகூரப்படுகிறது. இவற்றில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன என்றாலும் விவசாயத்திற்கு உதவி செய்பவை மிகக் குறைந்த வண்டினங்களே. 

கரும்புள்ளி வண்டுகள் தாவரங்களின் தண்டில் சாறுகளை உறிஞ்சும் பேன்களைப் பிடித்து உண்டு தாவரங்களைக் காப்பாற்றுகின்றன. ஜப்பானில் இந்த கரும்புள்ளி வண்டினங்களை உருவாக்குவதற்கு மெனக்கெட்டு வருகின்றனர். காரணம் இல்லாமலா? அவர்களது கடுகுக்கீரை விவசாயத்தின் சேதத்தை இந்த வண்டுகள் 90 சதவிகிதம் குறைக்கிறது. 

சோள அந்துப்பூச்சி 

ஐரோப்பிய அந்துப்பூச்சி (Ostrinia nubilalis) 1 இன்ச் நீளமுள்ளது. இது ஹங்கேரி, இத்தாலி நாடுகளைக் கடந்து அமெரிக்கா மற்றும் கனடாவில் தன் கால்களை ஊன்றியுள்ளது. அமெரிக்காவில் ஓராண்டிற்கு சோளத்தில் வாழும் இந்த அந்துப்பூச்சி 1 பில்லியன் டாலர்கள் நஷ்டத்தை அநாயாசமாக ஏற்படுத்துகிறது. ‘இதைச் சமாளிக்க மரபணு மாற்றப்பட்ட தன்னைத்தானே காத்துக்கொள்ளும் சோளப்பயிர்தான் ஒரே தீர்வு’ என்ற முடிவிற்கு ஆராய்ச்சியாளர்கள் வந்துள்ளனர். இதில் பேசில்லஸ் துரிஞ்சினெஸ் எனும் பாக்டீரிய நுண்ணுயிரி பயன்படுகிறது.

பழ ஈக்கள்

100 ஆண்டுகளுக்கு மேலாக பழ ஈக்களின் (Drosophila melanogaster) உடலமைப்பு, டி.என்.ஏ குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து பார்க்கின்சன், அல்சீமர், ஹன்டிங்டன், அமைட்ரோபிக் லேட்டரல் ஸ்கெலரோசிஸ்-ALS (நரம்பு மண்டலத்தைத் தாக்கும் நோய்) உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை செய்வது எப்படி என அடையாளம் காண முயற்சித்து வருகின்றனர்.

உயிரியல் உள்ளிட்டவற்றுக்கும் ஆராய்ச்சி செய்ய இந்த பழ ஈக்கள் எளிதாகத் துணைபுரிகின்றன என நார்த் கரோலினா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவிக்கின்றனர். - இந்த 10 பூச்சிகளுக்காகவும் நாம் செய்யவேண்டியது இயற்கையைக் கெடாமல் பாதுகாப்பது ஒன்று மட்டுமே.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.