News
Loading...

டீ கடை பெஞ்ச் ; 28-10-16

டீ கடை பெஞ்ச் ; 28-10-16

பிரதமரை சந்திக்க டில்லி செல்கிறார் ஸ்டாலின்

''பாகுபாடு பாக்கறதால, புகைச்சல் ஆரம்பமாயிடுத்து ஓய்...'' என, தொண்டையை செருமியபடியே, பேச ஆரம்பித்தார் குப்பண்ணா.
''எங்க பா...'' என்றார் அன்வர் பாய்.
''நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு, தீபாவளி பரிசா, வேட்டி, சேலை, சுவீட் எல்லாம் சமீபத்துல கொடுத்தால்லியோ... இதுல, டப்பிங் ஆர்ட்டிஸ்ட் யூனியன், நடிகர் சங்கத்துல உறுப்பினர்களா இருக்கறவாளுக்கு தான் முன்னுரிமை கொடுத்திருக்கா...
''ஏன்னா, அடுத்த மாசம் டப்பிங் யூனியனுக்கு, தேர்தல் நடக்க போறதாம்... அதனால, அவாளோட ஓட்டுகளை வளைக்கறதுக்கு, கணக்கு போடறான்னு புலம்பறா ஓய்...
''அதே போல, சமீபத்துல நடிகர் சங்கம் நடத்தின நட்சத்திர கிரிக்கெட் செலவு கணக்குகளை வெளியிட்டா... 
''அதுல, விளம்பரம், 16 லட்சம், மேக்கப் செலவு, ஆறு லட்சம், வாகன செலவு, ஆறு லட்சம் ரூபாய்னு கணக்கு காட்டியிருக்கா... 'இந்த செலவுக்கு எல்லாம், வவுச்சர்களை காட்டணும்'னு செயற்குழுவுல கேள்வி எழுப்ப, உறுப்பினர்கள் தயாராயிண்டு இருக்கா ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.
''கள்ளச் சாராயத்துக்கு பேர் பெற்ற, கடலுார் மாவட்டத்துல, இப்ப சாராய புழக்கம் குறைஞ்சிட்டு வே...'' என்றார் அண்ணாச்சி.''எல்லாரும் திருந்திட்டாளா ஓய்...'' என, வியப்புடன் கேட்டார் குப்பண்ணா.
''அவங்க எல்லாரும் இப்ப, கஞ்சா விக்க போயிட்டாவ... பெரும்பாலும், மாணவர்களை குறி வச்சு தான் இந்த வியாபாரத்தை பண்ணுதாவ... சிதம்பரம் பகுதியில, நிறைய மாணவர்கள் கஞ்சா போதையில சீரழியுதானுவ வே...
''சேத்தியாத்தோப்பை சேர்ந்த, 'மாஜி' சாராய வியாபாரி தான், கஞ்சாவுக்கும், 'ஹோல்சேல் டீலரா' இருக்காரு... இவர், சொந்த ஊர் போலீஸ் ஸ்டேஷன்ல இருந்தபடியே, கஞ்சா வியாபாரத்தை கவனிக்காரு வே...'' என, முடித்தார் அண்ணாச்சி.
''ம்... நாவலர் நெடுஞ்செழியன் மாதிரி பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் படிச்ச மாவட்டத்துலயா பா இந்த கொடுமை...'' என, நொந்து கொண்டார் அன்வர் பாய்.
''பிரதமர் நேரம் கிடைச்சதும், திடீர்னு கிளம்பி போக இருக்காங்க...'' என, கடைசி விஷயத்திற்கு வந்தார் அந்தோணிசாமி
''யாரை சொல்றீர் ஓய்...'' என்றார் குப்பண்ணா.
''காவிரி பிரச்னை சம்பந்தமா, சமீபத்துல, ஸ்டாலின் தலைமையில, அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தினாங்கல்ல... இதுல, சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்டணும்னு தீர்மானம் போட்டாங்க...
''அதோட, கூட்டத்துல ஒரு ரகசிய முடிவு எடுத்திருக்காங்க... அதாவது, அனைத்து கட்சி கூட்டத்துல கலந்துக்கிட்ட எல்லாருமே, ஸ்டாலின் தலைமையில டில்லிக்கு போய், பிரதமரை பார்த்துப் பேச திட்டம் போட்டிருக்காங்க...
''இந்த விஷயத்தை இப்போதைக்கு வெளியில சொல்ல வேண்டாம்... பிரதமர் நேரம் தந்ததும், எல்லாரும் டில்லிக்கு போகலாம்னு சொல்லியிருக்காங்க...'' என, முடித்தார் அந்தோணிசாமி. அரட்டை வேறு திசைக்கு திரும்பியது.

போலீஸ் கேன்டீனில் பட்டாசு விற்காதது ஏன்?

''காலையில, 10 மணிக்கெல்லாம் ஆபீஸ் போயிடுறாரு பா...'' என, பெஞ்ச் கச்சேரியை ஆரம்பித்தார் அன்வர்பாய்.
''எல்லாரும் அப்படி தானே போறாவ... நீரு யாரை சொல்லுதீரு வே...'' என்றார் அண்ணாச்சி.
''நிதியமைச்சர் 
பன்னீர்செல்வத்துகிட்ட, முதல்வர் ஜெயலலிதாவின் இலாகாக்களை கூடுதல் பொறுப்பா கொடுத்திருக்காங்கல்ல... அவர், தினமும் காலை, 10:00 மணிக்கு கோட்டைக்கு வந்துடுறாரு பா...
''தன் அறையில இருக்கிற, சாமி படங்களுக்கு, ஊதுபத்தி ஏத்தி கும்பிடுறாரு... அப்புறமா, நிதித் துறை அதிகாரிகளை அழைச்சு பேசுறாரு பா... இடையில, விசிட்டர்களையும் பாக்கறாரு... சில விசிட்டர்களிடம் ரகசியமா பேச வேண்டி இருந்தா, உள்ளே இருக்கிற தனி அறைக்கு அழைச்சுட்டு 
போயிடுறாரு பா...
''தலைமை செயலர், சிறப்பு ஆலோசகரிடம் பேசணும்னா, எழுந்து நேரா அவங்க அறைகளுக்கே போயிடுறாரு... அமைச்சர்களிடம், 'இன்டர்காம்' மூலமாவே பேசுறாரு... யாரையும் அனாவசியமா, தன் அறைக்கு அழைக்கிறது கிடையாது... 
''சாயந்தரம் வரை இப்படி வேலை பார்க்கிறவர், அப்படியே அப்பல்லோ போயிட்டு, அங்க இருந்து வீட்டுக்கு போயிடுறாரு பா...'' என, 'பன்னீருடன் ஒரு நாள்' இருந்ததைப் போல, தினசரி வாடிக்கையைக் கூறி முடித்தார் அன்வர்பாய்.
''நாம பேசினதுக்கு பலன் கிடைச்சிட்டு வே...'' என்ற அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் நிதியில வாங்குறதா சொன்ன, எல்.இ.டி., பல்புகள், இன்னும் ஊராட்சிகளுக்கு 
வரலைன்னு, பத்து நாளைக்கு முன்னாடி பேசினோமுல்லா வே... அந்த பல்புகளை எல்லாம் கொள்முதல் பண்ணி, அ.தி.மு.க., ஒன்றிய செயலர்கள் வீடுகள்ல தான், 'ஸ்டாக்' வச்சிருக்காவ வே...
''நாம இந்த விவகாரத்தை பத்தி பேசினதும், 14 ஒன்றியங்கள்ல இருக்கிற ஊராட்சி செயலர்களை கூப்பிட்டு, அந்த பல்புகளை எல்லாம் கொடுத்துட்டாவ... இன்னும் ஒருசில நாட்கள்ல, ஊராட்சிகள்ல, எல்.இ.டி., பல்புகள் எரியும்னு சொல்லுதாவ வே...'' என, முடித்தார் அண்ணாச்சி.
''எப்படியோ, நல்லது நடந்தா சரி தான் பா..'' என்றார் அன்வர்பாய்.
''இந்த வருஷம் பட்டாசு இல்லைன்னு சொல்லிட்டா ஓய்...'' என, கடைசி மேட்டருக்கு வந்தார் குப்பண்ணா.
''யாருக்குங்க...'' என்றார் அந்தோணிசாமி.
''போலீசார், தீயணைப்பு, சிறை துறைகள்ல, வேலை பாக்கறவாளுக்கு, அடக்க விலைக்கே பொருட்களை விக்கற, 'போலீஸ் கேன்டீன்' இருக்கு... இதுல, வருஷா வருஷம், தீபாவளிக்கு பட்டாசு விற்பனை செய்வா ஓய்...
''ஆனா, இந்த வருஷம் சென்னை, போலீஸ் கேன்டீன்ல பட்டாசு விற்பனை கிடையாதுன்னு சொல்லிட்டா... விசாரிச்சதுல, 'நிறைய போலீஸ்காரங்க சென்னைக்கு மாறுதல்ல வந்திருக்கா... அவா எத்தனை பேருன்னு, இன்னும் கணக்கெடுக்கலை... அதனால, எவ்வளவு பட்டாசுகள் வேணும்னு தெரியாததால, விற்பனை இல்லை'ன்னு சொல்லி
யிருக்கா ஓய்...
''ஆனா, நிஜமான காரணம் என்னன்னா, காவல் துறைக்கு தலைமை வகித்த முதல்வர் ஜெயலலிதா, உடல் நலம் இல்லாம இருக்கறப்ப, தீபாவளி உற்சாகத்தை வெளிப்
படுத்துற பட்டாசு விற்பனை வேண்டாம்னு, உயரதிகாரிகள் முடிவு பண்ணிட்டாங்கறது தான் தகவல்...'' என, குப்பண்ணா முடிக்கவும், பெஞ்சில் அமைதி திரும்பியது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...