News
Loading...

டீ கடை பெஞ்ச் : 29-10-16

டீ கடை பெஞ்ச் : 29-10-16

மந்திரி பேச்சையே மதிக்காமல் ஆடும் பி.ஏ.,


ஊரெங்கும் பட்டாசுகள் படபடக்க, அதிகாலையே பெஞ்சில் ஆஜரான பெரியவர்கள், தீபாவளி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
டீயை ருசித்தபடியே, ''ஆய்வு கூட்ட விபரங்களை தெரிவிக்கணும்னு சொல்றாங்க பா...'' என, விஷயத்தை ஆரம்பித்தார் அன்வர் பாய்.
''என்ன கூட்டம் ஓய்...'' என்றார் குப்பண்ணா.
''மின் வாரிய தலைமை அலுவலகத்துல, அமைச்சர் தங்கமணி அடிக்கடி ஆய்வு கூட்டம் போடுறாரு... மற்ற துறைகளின் அமைச்சர்கள் ஆய்வு கூட்டம் போட்டா, அது சம்பந்தமான விபரங்களை, பத்திரிகைகளுக்கு செய்திக் குறிப்பா
தருவாங்க பா...''ஆனா, மின் வாரியத்துல அப்படி செய்றதில்லை... இதனால, வாரியத்துல என்ன நடக்குன்னே மக்களுக்கு தெரியலை... அதனால, 'மற்ற துறைகள் மாதிரி, வாரிய கூட்ட முடிவுகளையும் மக்களுக்கு தெரிவிக்கணும்'னு ஊழியர்கள் சொல்றாங்க பா...'' என, முடித்தார்
அன்வர் பாய்.
''சொந்த சமூக பிரமுகர்களை வச்சே பதிலடி கொடுக்க போறாங்க...'' என, அடுத்த விஷயத்திற்கு வந்தார் அந்தோணிசாமி.
''யாருக்கு வே...'' என்றார் அண்ணாச்சி.
''முதல்வர் ஜெயலலிதா உடம்பு சரியில்லாம, ஆஸ்பத்திரியில இருக்காங்க... அவங்க தோழி சசிகலாவுக்கு எதிரா, அ.தி.மு.க.,வுல இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா, அடிக்கடி பேட்டி கொடுத்துட்டு இருக்காங்க...
''இதனால, புஷ்பா மேல ஆத்திரத்துல இருக்கிற சசிகலா தரப்பு, புஷ்பாவை ரத்த காட்டேரி மாதிரி சித்தரிச்சு, தமிழகம் முழுக்க போஸ்டர் ஒட்டினாங்க... இந்த போஸ்டர்களை டில்லியிலயும் ஒட்டியிருக்காங்க...
''அடுத்து, புஷ்பாவின் நாடார் சமுதாய பிரமுகர்கள் மூலமா, அவருக்கு எதிரா போஸ்டர்கள் அடிச்சு ஒட்ட, சசிகலா தரப்பு காய் நகர்த்திட்டு இருக்குங்க...'' என, முடித்தார் அந்தோணிசாமி.
''பி.ஏ.,வின் ஆட்டம் ஓவரா இருக்கு ஓய்...'' என்றார் குப்பண்ணா.
''எங்க வே...'' என்றார் அண்ணாச்சி.''தமிழகத்துல, போன, அ.தி.மு.க., ஆட்சியில, ஊரை எல்லாம் சுத்தி பார்க்கற துறையின் அமைச்சரா இருந்தவரிடம், சீனியர் பி.ஏ.,வா இருந்தவரை சொல்றேன் ஓய்...
''இந்த முறை, அந்த துறை, வேற ஒருத்தர்கிட்ட போயிடுத்து... ஆனாலும், சீனியர் பி.ஏ.,வா பழைய ஆளே தான் இருக்கார்... அமைச்சர் மாதிரியே ஆட்டம் போட்டு, அதிகாரிகளை திட்டி தீர்க்கறார்... இது பத்தி, அமைச்சருக்கும் புகார் போயிருக்கு... அவரும், பி.ஏ.,வை கண்டிச்சிருக்கார்... ஆனாலும், அவர் திருந்தலை ஓய்...
''சமீபத்துல, தீவுத்திடல்ல பட்டாசு கடைகள் போட அனுமதி கொடுத்ததுல, பி.ஏ., புகுந்து விளையாடிட்டார் ஓய்...'' என்ற குப்பண்ணா, ''நம்ம சக்திவேல் பட்டாசு வாங்க கார்த்தால, 4 மணிக்கெல்லாம் எழுந்து போனான்... இன்னும் வரலை... ஒருவேளை சிவகாசிக்கே போயிட்டானோ...'' என, அலுத்துக் கொண்டார்.
துண்டை உதறியபடி எழுந்த அண்ணாச்சி, ''எல்லாருக்கும் இன்னைக்கு தீபாவளி விருந்து நம்ம வீட்டுல தான்... நல்லி எலும்பு குழம்பு ஸ்பெஷல்...'' என்றதும், குப்பண்ணா முழிக்க, ''பயப்படாதீரும்... உமக்கு தனியா பருப்பு சாம்பார் இருக்கு... சீக்கிரமா வந்துடுங்க வே... நாயர் நீரும் தான்...'' என, அழைத்து விட்டு கிளம்ப, பெஞ்ச் காலியானது.

புதுவையில் பா.ம.க., போட்டியிடாத பின்னணி

''கலெக்டரையே மிரட்டுற அளவுக்கு போயிட்டார் ஓய்...'' என்ற அதிரடி தகவலுடன், பேச்சை ஆரம்பித்தார் குப்பண்ணா.
''யாரு வே அது...'' என்றார் அண்ணாச்சி.''கோவையில எங்க பார்த்தாலும், விளம்பர
பலகைகள் மயமா இருக்கு... தனியார் ஏஜென்சி தான் இதை வச்சிருக்கு... இதை, ஆளுங்கட்சி, 'டிவி'யில
வேலை பார்க்கற ஒருத்தர் நடத்தறார் ஓய்...
''இவர் ஏற்கனவே, தேர்தல் பணிகளை வீடியோ எடுக்கற கான்ட்ராக்ட், உள்ளூர் சேனல்கள் நடத்தறதுன்னு மினி தொழிலதிபரா வலம் வர்றார்... இப்ப, புதுசா, 25 இடங்கள்ல, விளம்பர பலகை வைக்க அனுமதி கேட்டு, கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளையே மிரட்டறார் ஓய்...
''கட்டட அனுமதி, கான்ட்ராக்ட்னு பல விஷயங்கள்ல புகுந்தும் காரியம் சாதிக்கறார்... போலீஸ் விவகாரங்கள்லயும் கட்டப்பஞ்சாயத்து பண்ணி, காசு பார்க்கறார்... இவரை பாத்து, ஆளுங்கட்சியினரே பயப்படறா... இவர் மேல, ஆளுங்கட்சி, 'டிவி' நிர்வாகத்துக்கு நிறைய புகார்கள் போயும், எந்த நடவடிக்கையும் எடுக்கலை ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.
''விதிகளை மீறி, மூணு வருஷமா பொறுப்பு அதிகாரியை வச்சிருக்காங்க பா...'' என, கடைசி மேட்டருக்கு வந்தார் அன்வர் பாய்.''எங்க வே...'' என்றார் அண்ணாச்சி.
''கால்நடை
மருத்துவ அறிவியல் பல்கலை, உடைமை அலுவலகத்துல செயற்பொறியாளராக இருக்கிறவர், மூணு வருஷத்துக்கும் மேலா, எஸ்டேட் பொறுப்பு அதிகாரியாவும்
இருக்காரு பா...
''இவர் கண்காணிப்புல நடந்த, ஓசூர் கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்லுாரி கட்டுமானப் பணியில முறைகேடு நடந்ததா புகார்கள் இருக்கு...
''எஸ்டேட் அதிகாரி பதவிக்கு, பல்கலை விதிப்படி, கண்காணிப்பு பொறியாளர் அந்தஸ்துல, நேரடி நியமனம் அல்லது டெபுடேஷன்ல தான்,
அதிகாரியை நியமிக்கணும்... பல்கலை உயர்
அதிகாரி, விதிகளை மீறி, பொறுப்பு அதிகாரியை நீடிக்க விட்டிருக்காரு பா...'' என, முடித்தார் அன்வர் பாய்.அப்போது தான் பெஞ்சுக்கு வந்த அந்தோணிசாமி, ''குப்புசாமியும், திலகரும் வந்துட்டு போயிட்டாங்களா...'' என, நண்பர்களிடம் விசாரித்தபடியே, பெஞ்சில் ஐக்கியமானார்.
''மூணு தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் நிறுத்தினவங்க, புதுச்சேரியை மட்டும்
கண்டுக்காம விட்டுட்டாவ வே...'' என்றார் அண்ணாச்சி.''எந்த கட்சியை சொல்றீங்க...'' என்றார் அந்தோணிசாமி.''பா.ம.க.,வை தான்... தமிழகத்துல, அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்கு, பா.ம.க., சார்புல வேட்பாளர்களை
அறிவிச்சிருக்காவல்லா... ஆனா, அவங்களுக்கு ஓரளவுக்கு செல்வாக்கு இருக்கிற புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில, வேட்பாளரை நிறுத்தலை வே...
''அங்க, புதுச்சேரி காங்கிரஸ் முதல்வர் நாராயணசாமி போட்டியிடுதாரு... ஆரம்பத்துல, பா.ஜ., கூட நெருக்கமா இருந்த, பா.ம.க.,
இப்ப அந்த கட்சியை விட்டு விலகிட்டு... அதனால, காங்கிரஸ் கூட உறவு வச்சுக்க, அந்த கட்சியின் தலைமை விரும்புது... அதனால தான்,
நாராயணசாமிக்கு எதிரா வேட்பாளரை நிறுத்தாம இருந்துட்டாவ வே...'' என, முடித்த அண்ணாச்சி எழவும் மற்றவர்களும்
கிளம்பினர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...