News
Loading...

30 நாட்கள்... 30 சம்பவங்கள்! - அப்போலோவில் ஜெ.

30 நாட்கள்... 30 சம்பவங்கள்! - அப்போலோவில் ஜெ.

செப்டம்பர் 22-ம் தேதி அப்போலோவில் அட்மிட் ஆனார் முதலமைச்சர் ஜெயலலிதா. அக்டோபர் 21-ம் தேதியோடு, ஒரு மாதம் நிறைவடைந்துவிட்டது. ஒரு மாதமாக, தமிழகத்தின் ‘ஹாட் டாக்’ அப்போலோதான். கடந்த 30 நாட்களில் தமிழகம் சந்தித்த 30 அதிர்வுகள்  பற்றிய அலசல்! 

01/போயஸ் கார்டன் டு அப்போலோ! 

2016 செப்டம்பர் 22-ம் தேதி இரவு 9.30 மணிக்கு, போயஸ் கார்டன் வேதா நிலையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் ஜெயலலிதா அப்போலோவுக்குச் சென்றார். 

02/உறுதி செய்த அறிக்கை!

‘முதலமைச்சர் ஜெயலலிதா, சாதாரண காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக் குறைவால் ஏற்பட்ட உடல்சோர்வுக்கு சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டிருக்கிறார்’ என செப்டம்பர் 23, அதிகாலை 1 மணிக்கு அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது அப்போலோ.

03/கருணாநிதி வாழ்த்து!

ஜெயலலிதா விரைவில் குணமடைய எதிர்க் கட்சித் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர். அதில் பலரையும் புருவம் உயர்த்த வைத்தது, கருணாநிதியின் அறிக்கைதான். செப்டம்பர் 24-ம் தேதி வெளியான அந்த அறிக்கையில், ‘முதல்வர் ஜெயலலிதாவோடு கொள்கை அளவில் வேறுபட்டாலும், விரைவில் அவர் உடல்நலம் பெற்று பணியினைத் தொடர வாழ்த்துகிறேன்’ என சொல்லியிருந்தார் கருணாநிதி.

04/உள்ளாட்சித் தேர்தல்! 

முதல்வர் மருத்துவமனையில் இருந்தபோதும், உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை செப்டம்பர் 25-ம் தேதி வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியது மாநிலத் தேர்தல் ஆணையம். 

05/அ.தி.மு.க வேட்பாளர்கள்!

அ.தி.மு.க-வின் நிரந்தரப் பொதுச் செயலாளர் மருத்துவமனையில் இருந்தபோதும், தலைமைக் கழகத்தில் இருந்து, அ.தி.மு.க வேட்பாளர் பட்டியல் வெளியானது. சீட் கிடைத்தவர்கள் கொண்டாடினர். கிடைக்காதவர்கள் ‘இது அம்மாவின் ஒப்புதல் பெறாத பட்டியல்’ என புலம்பினார்கள். 

06/முதல் எச்சரிக்கை 

ஜெயலலிதா உடல்நிலை குறித்து பல வதந்திகள் பரவின. பதறிப்போன அரசாங்கம், அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்தை வைத்து எச்சரிக்கும் தொனியில் அறிக்கை வெளியிட்டது. ‘முதலமைச்சர் நலமுடன் இருக்கிறார். தவறான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம்’ என அறிக்கை வெளியிட்டார்கள்.  

07/அம்மா பேசினாரா? 

‘நான் உங்களின் அம்மா பேசுகிறேன். நான் நலமாக இருக்கிறேன்’ என ஜெயலலிதா பேசியதுபோல், வாட்ஸ்-அப்பில் ஒரு குரல் பதிவு வெளியானது. ஜெயலலிதா உடல்நிலை வதந்திகளில், இதுதான் உச்சக்கட்டம். 

08/போட்டோ எங்கே?

‘அப்போலோ மருத்துவமனையில் காவிரிப் பிரச்னை குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்’ என அரசாங்கம் அறிக்கை வெளியிட்டது. உடனே கருணாநிதி, ‘ஒரு மணிநேரம் ஆலோசனை நடத்தும் அளவுக்கு முதலமைச்சர் நலமாக இருக்கிறார் என்றால், ஆலோசனைக் கூட்டத்தின் போட்டோவை ஏன் வெளியிடவில்லை’ என கேள்வி எழுப்பினார்.

09/மீண்டும் மன்னார்குடி! 

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து, அவர் விலக்கி வைத்திருந்த மன்னார்குடி சொந்தங்கள் நெருங்கத் தொடங்கின. அப்போலோவைச் சுற்றி, திவாகரன், மகாதேவன், ராவணன் நடமாட்டம் தென்பட்டது.

10/அரச குடும்பங்களின் டாக்டர்! 

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க, லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியெல் சென்னை வந்தார். இவர், சவூதி அரச குடும்பம், புருனே சுல்தான், வல்லரசு நாடுகளின் அதிபர்களுக்கு சிகிச்சை அளிப்பவர். லண்டனின் புகழ்பெற்ற கைய்ஸ் அண்டு செயின்ட் தாமஸ் மருத்துவமனையில் பணியாற்றுகிறார்.

11/ஆளுநர் வருகை!

ஜெயலலிலிதா அட்மிட் ஆகி, ஒரு வாரத்துக்கு மேல் ஆன நிலையில், கவர்னர் வித்யாசாகர் ராவ் அக்டோபர் 1-ம் தேதி மருத்துவமனைக்கு வந்தார். ‘முதல்வர் உடல்நலம் தேறிவருகிறார்’ என அறிக்கை வெளியிட்டார். 

12/‘அரசாங்கத்துக்கு பொறுப்பு இருக்கிறது!’

‘முதலமைச்சரின் உடல்நிலை பற்றி பொது மக்களுக்குத் தெரிவிக்க வேண்டியது அரசின் கடமை’ என சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம்  கருத்து சொன்னது. 

13/உள்ளாட்சித் தேர்தல் ரத்து!

மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்த உள்ளாட்சித் தேர்தலை சென்னை உயர் நீதிமன்றம் அக்டோபர் 4-ம் தேதி ரத்து செய்தது. தேர்தல் வேலைகளில் பிஸியான அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் ஆகியோர் அப்போலோவில் குவிந்தனர். 

14/அபாயக்கட்டம்!

இந்து ஆங்கில நாளேட்டின் முன்னாள் ஆசிரியர் மாலினி பார்த்தசாரதி, ‘முதலமைச்சர் ஜெயலலிதா அபாயகட்டத்தைத் தாண்டிவிட்டார்’ என்று ட்விட்டரில் பதிவிட்டார். 

15/எய்ம்ஸ் டாக்டர்கள்!

எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து ஜெயலலிதாவின் உடல்நிலையைப் பரிசோதிக்க டாக்டர்கள் கில்நானி, அஞ்சன் டிரிக்கா, நிதிஷ்நாயக் ஆகியோர் வந்தனர். இவர்களை வைத்து மத்திய அரசு உளவு பார்க்கிறது என்று சர்ச்சை கிளம்பியது. 

16/உறுதிசெய்த அப்போலோ!

அக்டோபர் 8-ம் தேதி, அப்போலோவில் இருந்து வெளியான அறிக்கையில், முதலமைச்சருக்கு நுரையீரல் பிரச்னை, செயற்கை சுவாசம், பாசிவ் பிசியோதெரபி, நோய்த் தொற்றுப் பிரச்னைகள் இருப்பது அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டது. 

17/கைவிட்ட மோடி!

‘அக்டோபர் 4-ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்’ என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கிறார் என்பதைக் கணக்குப்போட்ட மத்திய அரசு, ‘காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது’ என உச்ச நீதிமன்றத்தில் பல்டி அடித்தது. அ.தி.மு.க எம்.பி-க்களையும் மோடி சந்திக்க மறுத்தார். 

18/ஜனாதிபதி ஆட்சி! 

பி.ஜே.பி. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ‘முதலமைச்சர் ஜெயலலிதா எப்போது குணம் பெறுவார் எனத் தெரியவில்லை. அதனால், தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை ஏற்படுத்த வேண்டும்’ என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்குக் கடிதம் எழுதினார். தமிழக அரசியல் பரபரப்பானது.

19/ராகுல் வந்தார்!

‘தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை ஏற்படுத்த வேண்டும்’ என சுப்பிரமணியன் சுவாமியை வைத்து பி.ஜே.பி. ஆட்டம் காட்டிய நிலையில், டெல்லியில் இருந்து தனி விமானத்தில் அப்போலோ வந்தார் ராகுல். ‘எங்களின் ஆதரவு அ.தி.மு.க-வுக்கு எப்போதும் உண்டு’ என சொல்லி பி.ஜே.பி. முகத்தில் கரி பூசினார்.

20/ஓரணியில் எதிர்க் கட்சிகள்!

ராகுல் காந்தியை அடுத்து, மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், வைகோ ஆகியோர் அப்போலோ வந்தனர். இவர்கள் அனைவரும், ‘ஜனாதிபதி ஆட்சியைக் கொண்டுவர மத்திய அரசு முயன்றால், நாங்கள் அதை எதிர்ப்போம்’ என்று ஒரே குரலில் சொன்னார்கள். 

21/முகம் மாறிய பி.ஜே.பி!

அக்டோபர் 10-ம் தேதி, மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு அப்போலோ வந்தார்.

22/பழைய பன்னீர் செல்வம்!

‘முதலமைச்சர் ஜெயலலிதாவின் துறைகளை, மூத்த அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கவனிப்பார்’ என ஆளுநர் வித்யாசாகர் ராவ், அக்டோபர் 11-ம் தேதி, முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். ‘இது முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஒப்புதலோடு எடுக்கப்பட்ட நடவடிக்கை’ என்றும் கவர்னர் தெளிவுபடுத்தி இருந்தார்.

23/ஸ்டாலின் வாழ்த்தும் கருணாநிதி எதிர்ப்பும்!

ஜெயலலிதாவின் இலாக்காக்கள் ஓ.பி.எஸ்-ஸுக்குக் கொடுக்கப்பட்டதை வரவேற்று மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் சொன்னார். ஆனால், கருணாநிதி அதை விமர்சனம் செய்தார். 

24/வதந்திகள்... கைதுகள்!

ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றிய வதந்திகளை கட்டுப்படுத்த காவல் துறை நடவடிக்கையில் இறங்கியது. தமிழகத்தில் 7 பேரைக் கைதுசெய்தது. 

25/அமித்ஷாவும் அருண் ஜெட்லியும்!

பி.ஜே.பி சார்பில், அதன் தேசியத் தலைவர் அமித்ஷாவும் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லியும் அப்போலோவுக்கு வந்து அட்டென்டன்ஸ் போட்டனர். 

26/வந்தார் ரஜினி!

அக்டோபர் 16-ம் தேதி, நடிகர் ரஜினிகாந்த் அப்போலோ மருத்துவமனைக்கு வந்தார். 

27/ராஜாத்தி - சசிகலா சந்திப்பு!

ஸ்டாலின் அப்போலோ வந்து விசாரித்தார். கருணாநிதியின் துணைவி ராஜாத்தி அம்மாள் அப்போலோவில் சசிகலாவை சந்தித்தார்.

28/இடைத்தேர்தல்

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும் நிலையிலும் முதல் ஆளாக அந்தத் தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது அ.தி.மு.க.

29/சிங்கப்பூர் டாக்டர்கள்! 

லண்டன் டாக்டர், எய்ம்ஸ் டாக்டர்கள் திரும்பிவிட்ட நிலையில், சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனை டாக்டர்கள் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க வந்தனர். 

30/நலமுடன் இருக்கிறார்  

‘‘முதலமைச்சர் ‘இன்ட்ராக்ட்’ செய்கிறார். ஊட்டச்சத்துக்கள் அவருக்கு அளிக்கப்படுகின்றன. ஆனாலும், ரெஸ்பரேட்டரி சப்போர்ட்டில் இன்னும் இருக்கிறார்’’ என அப்போலோ அறிக்கை வெளியிட்டது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.