News
Loading...

பறந்த செலவு ரூ.9.42 கோடி தேர்தலுக்கு ரூ.64.72 கோடி - அ.தி.மு.க வரவு செலவு!

பறந்த செலவு ரூ.9.42 கோடி தேர்தலுக்கு ரூ.64.72 கோடி - அ.தி.மு.க வரவு செலவு!

உள்ளாட்சித் தேர்தல் களை கட்டத் தொடங்கிவிட்டது. கரன்சிகள் ஏகத்துக்கும் கொட்டப்படும். நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் கட்சிகள் கொட்டிய கரன்சிகள் கணக்கில் அடங்காது. கணக்கு காட்டியதே மயக்கம் போடும் அளவுக்கு இருக்கிறது. வேட்பாளர்கள் தனிப்பட்ட முறையில் செய்யும் செலவுகள் தொகுதிக்குட்பட்டது. அதற்கு வரம்பு உண்டு. ஆனால் கட்சிகளின் தலைமை செய்யும் செலவுகளுக்கு வரம்பு இல்லை. சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. செய்த செலவுகள் பற்றிய ஸ்கேன் ரிப்போர்ட் இது.  

கதீட்ரல் ரோடு பாங்க் ஆஃப் இந்தியா, அபிராமபுரம் இந்தியன் பேங்க், மயிலாப்பூர் கரூர் வைஸ்யா வங்கிகளில் அ.தி.மு.க-வுக்கு 5 அக்கவுன்ட்கள் இருக்கின்றன. சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு கையிருப்பை வங்கியிருப்பு சேர்த்து அ.தி.மு.க-விடம் இருந்த மொத்த பணம் ரூ.217.86 கோடி. தேர்தலுக்கு செலவழித்த பிறகு இது ரூ.197.69 கோடியாக குறைந்தது.  

ஸ்டார் பேச்சாளர்கள் 25 பேரின் போக்குவரத்து செலவு​களை அ.தி.மு.க. செய்தது. அதில் நடிகர் சிங்கமுத்துவுக்கு​தான் மிக குறைந்த தொகையாக 56 ஆயிரம் ரூபாய் தரப்பட்டிருக்கிறது. மிக அதிகபட்சமாக நடிகை விந்தியாவுக்கு ரூ.1.14 லட்சம் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர்கள் வையாபுரி, ஆனந்த்ராஜ், ஆர்த்தி, மனோபாலா, தியாகு, செந்தில், ராமராஜன் ஆகியோரைவிட குண்டுக் கல்யாணத்துக்குதான் கூடுதல் தொகை தரப்பட்டிருக்கிறது. நாஞ்சில் சம்பத்திற்கு செந்தில், ராமராஜன், குண்டுக் கல்யாணம், விந்தியா ஆகியோரைவிட குறைவாகத்தான் செலவழிக்கப்பட்டிருக்கிறது. ஸ்டார் பேச்சாளர்களின் போக்குவரத்துக்கு மட்டும் ஆன செலவு 20.27 லட்சம் ரூபாய்.

தேர்தல் பிரசார கூட்டங்களுக்கு ஆகாய மார்க்கமாக சென்றுதான் ஜெயலலிதா பிரசாரம் செய்தார். Heligo Charters என்ற நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலி​காப்டரை​தான் பயன்படுத்தினார். இதற்காக 5.66 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டன. Chipsan Aviation என்ற நிறுவனத்தின் விமானத்தையும் ஜெயலலிதா பயன்படுத்தினார். அதற்கான செலவு 3.76 கோடி ரூபாய். ஹெலிகாப்டர் மற்றும் விமான பயணச் செலவு மட்டும் 9.42 கோடி ரூபாய்.

பறந்த செலவு ரூ.9.42 கோடி தேர்தலுக்கு ரூ.64.72 கோடி - அ.தி.மு.க வரவு செலவு!

பத்திரிகைகளில் விளம்பரம் செய்த வகையில் 3.92 கோடி ரூபாய் செலவானது. அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நாளிதழ் நமது எம்.ஜி.ஆருக்கு ரூ.8.36 லட்சத்துக்கு விளம்பரம் தரப்பட்டுள்ளது. எஃப்.எம். ரேடியோக்களில் பிரசாரம் செய்வததற்கு 2.97 கோடி ரூபாய் தரப்பட்டுள்ளது. ரேடியோ விளம்பரத்தை பொறுத்தவரையில் அரசின் பிரசார் பாரதி ரேடியோவுக்கு மட்டும் ரூ.1.58 கோடி கொடுத்திருக்கிறார்கள். அதற்கு அடுத்த இடத்தில் ரேடியோ மிர்சி இருக்கிறது. அதற்கு தரப்பட்ட தொகை ரூ.54 லட்சம். டி.வி. சேனல்களில் விளம்பரம் செய்ததற்காக 28.62 கோடி ரூபாய் செலவழித்​தார்கள். இதில் ஜெயா டி.வி-க்குதான் அதிகபட்சமாக 23 கோடி ரூபாய் தரப் பட்டுள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் இருந்த விஜய் டி.வி-க்கு 2.66 கோடி ரூபாய் தரப்பட்டது. இணையதளங்கள், எலக்ட்ரா னிக்ஸ், எல்.ஈ.டி. டிஸ்பிளே, நடமாடும் பிரசார வேன் ஆகியவற்றுக்காக 14.19 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டது. இந்த விளம்பரங்கள் மொத்தத்தையும் கணக் கிட்டால் 49.71 கோடி ரூபாயை செலவழித்திருக்கிறார்கள். 

போஸ்டர், பேனர், பேட்ஜ், ஸ்டிக்கர், கட் அவுட், வளைவுகள், ஹோர்டிங்ஸ், கொடி, டோர் சிலிப், தேர்தல் அறிக்கை ஆகியவற்றுக்காக 4.11 கோடி செலவானது. தமிழ்நாடு தேர்தல் அறிக்கைப் புத்தகங்கள் தயாரிக்க ரூ.2.78 லட்சமும் புதுச்சேரி தேர்தல் அறிக்கை தயாரிக்க ரூ.83 ஆயிரமும் செலவானது. இதற்காக ஆன மொத்த செலவு 4.14 கோடி ரூபாய்.

பறந்த செலவு ரூ.9.42 கோடி தேர்தலுக்கு ரூ.64.72 கோடி - அ.தி.மு.க வரவு செலவு!

ஜெயலலிதா பங்கேற்ற பிரசார கூட்டங்களில் மேடை, பந்தல், டெக்கரேஷன், சவுண்ட் சர்வீஸ், லைட்டிங், ஏஸி, எல்.ஈ.டி திரைகள், நாற்காலிகள், தடுப்புகள், துணிக் கூரை, ஜெனரேட்டர்கள், அரேபியன் டென்ட், தற்காலிக கழிப்பறைகள், குடிநீர், ஆம்புலன்ஸ் ஆகிய வசதிகள் அமைக்கப்பட்டிருந்தன. 15 இடங்களில் ஜெயலலிதா பேசினார். இதற்காக செலவு ரூ.1.18 கோடி. சென்னையிலும் திருச்சியிலும் நடந்த பொதுக்கூட்டத்துக்குதான் மிக அதிகமாக செலவானது. சென்னை தீவுத் திடலில் நடந்த பொதுக் கூட்டத்துக்கு ரூ.17.47 லட்சம் செலவானது. தீவுத்திடல் வாடகை 11,78,638 ரூபாய். திருச்சியில் ஜி.கார்னர் ரயில்வே மைதானத்தில் நடந்த பொதுக் கூட்டத் திற்கு ரூ.30.72 லட்சம் செலவானது. ரயில்வே மைதான வாடகைக்கு மட்டும் 25,35,989 ரூபாய் தரப்பட்டிருக்கிறது.  

போக்குவரத்துக்கு ரூ.1.62 லட்சமும் டீசலுக்கு 2.25 லட்சமும் போக்குவரத்து தொடர்பான மற்ற செலவுக்கு ரூ.81 ஆயிரமும் என இதர செலவுகள் வகையில் 4.70 லட்சம் ரூபாய் செலவழித்திருக்கிறது அ.தி.மு.க. 

இப்படி எல்லா வகையிலும் ஒட்டுமொத்தமாக செய்யப்பட்ட மொத்த செலவு எவ்வளவு தெரியுமா? 64 கோடியே 72 லட்சத்து 20 ஆயிரத்து 412 ரூபாய்.

அம்மாடியோவ்!

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...