News
Loading...

தேர்தலுக்கு செலவழித்தது 97 கோடி! - இது தி.மு.க செலவுக் கணக்கு

தேர்தலுக்கு செலவழித்தது 97 கோடி! - இது தி.மு.க செலவுக் கணக்கு

தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு தி.மு.க. வசம் தேனாம்பேட்டை இந்தியன் வங்கியில் 205.51 கோடி ரூபாய் இருப்பு இருந்தது. தேர்தலுக்காகக் கட்சிக்கு கலெக்‌ஷன்கள் வரத் தொடங்கின. அதாங்க நன்கொடைகள். அப்படி நேரடியாகவும் செக் மூலமாகவும் வந்த வரவு மட்டும் 9.69 கோடி ரூபாய். மொத்தமாக பார்த்தால் 215.21 கோடி ரூபாய் தி.மு.க-விடம் இருந்தது. தேர்தல் முடிந்த பிறகு மீதம் இருக்கும் தொகை  117.86 கோடி ரூபாய். 

அடுத்து செலவுகளை அலசுவோம். ஸ்டார் பேச்சாளர்களுக்குப் போக்குவரத்து உட்பட எந்தச் செலவையும் தி.மு.க. செய்யவில்லை. ஆனால், தலைவர்களின் போக்குவரத்து செலவுகளை மேற்கொண்டார்கள். இதற்காக 1.16 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருக்கிறது. விமானம், ஹெலிகாப்டர் எதையும் பயன்படுத்தாமல் சாலை வழியாக சென்றுதான் பிரசாரம் செய்ததாக சொல்லியிருக்கிறது தி.மு.க.

இந்துஸ்தான் தாம்சன் அசோசியேட்ஸ் நிறுவனத்தின் மூலம் 28.36 கோடிக்கு டி.வி. மற்றும் பத்திரிகை​களுக்கு பிரசார விளம்பரங்கள் அளிக்கப்பட்டன. பென்னட் கோல்மேன் என்கிற நிறுவனத்தின் மூலம் 4.75 கோடி ரூபாய்க்கு பல்க் எஸ்.எம்.எஸ்., வாட்ஸ் அப் விளம்பரங்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. கூகிள் நிறுவனத்தின் மூலம் இணையத்தளங்களில் செய்யப்பட்ட விளம்பரத்துக்கு தரப்பட்ட தொகை 35 லட்சம் ரூபாய். பிரின்ட், எலக்ட்ரானிக்ஸ், பல்க் எஸ்.எம்.எஸ்., கேபிள் டி.வி, இணையத்தளங்கள், டி.வி. சேனல்கள் என விளம்பரங்களுக்காக மட்டும் 33.46 கோடி ரூபாய் செலவழித்திருக்கிறது தி.மு.க. 

பெங்களூரைச் சேர்ந்த நியூ கான்செப்ட் இந்தியா, ரஷ்பா என்டர்பிரைசஸ், ரேகா மார்க்கெட்டிங், மகாவீர் இன்டெர் நேஷனல் ஆகிய நான்கு நிறுவனங்களில் இருந்து 4.62 கோடி ரூபாய்க்கு 21.20 லட்சம் தொப்பிகளையும் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ஜே.கே. ஆப்செட் பிரின்டர்ஸ், கிளாசிக்கா டிசைன் பிரின்டிங், நியூ கான்செப்ட் இந்தியா ஆகிய நிறுவனங்களிடம் இருந்து 1.86 கோடி ரூபாய்க்கு 59.24 லட்சம் மாஸ்க்குகள் மற்றும் 1.13 கோடி ரூபாய்க்கு 98 லட்சம் பேட்ஜ்களும் ரஷ்பா என்டர்பிரைசஸ், ரேகா மார்க்கெட்டிங் ஆகிய நிறுவனங்களிடம் இருந்து 66.36 லட்சம் ரூபாய்க்கு 98.70 லட்சம் மஃப்ளர்களும் ரஷ்பா என்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் இருந்து 24.29 லட்சம் ரூபாய்க்கு 98.70 லட்சம் டவல்களும் ராயப்பேட்டை அஸ்வின் பிரின்டிங் ஏஜென்ஸியில் இருந்து 4.13  லட்சம் ரூபாய்க்கு 1.57 லட்சம் ஸ்டிக்கர் களும் வாங்கப்பட்டிருக்கின்றன. இப்படி போஸ்டர், பேனர், பேட்ஜ், ஸ்டிக்கர் வகையில் மட்டும் 8.56 கோடி ரூபாய் தரப்பட்டிருக்கிறது. மஃப்ளர்களுக்கு கொடுத்த தொகைதான் வாய் பிளக்க வைத்திருக்கிறது. ஒரு மஃப்ளருக்கு 67 பைசா கொடுத்ததுதான் கொடுமை. 

தமிழ், தமிழர் என பேசும் தி.மு.க., தொப்பி, மாஸ்க், பேட்ஜ், மஃப்ளர், டவல் ஆகியவற்றை தமிழ்நாட்டில் வாங்காமல் கர்நாடகாவில் போய் வாங்கியிருக்கிறார்கள். தமிழர்களின் வியாபார நிறுவனங்களில் கொள்முதல் செய்யாமல் பெங்களூரில் வாங்கிய பாசத்துக்கு காரணம் என்னவோ?

ராசி கிராஃபிக்ஸ், அஸ்வின் பிரின்டிங், ரத்னா ஆப்செட் ஆகிய நிறுவனங்களிடம் இருந்து 57.08 லட்சம் தேர்தல் அறிக்கைகளைத் தயாரித்திருக்கிறார்கள். இதற்காக 8.28 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருக்கிறது. ராயப்பேட்டை அண்ணாமலை பேனர் சென்டரில் இருந்து 70.20 லட்சம் துண்டறிக்கைகளுக்காக 55.28 லட்சம் செலவிட்டிருக்கிறார்கள். வேட்பாளர்களின் தொகுப்புக்காக 4.96 லட்சம் செலவானது. தேர்தல் அறிக்கை, துண்டறிக்கைகளுக்காக மட்டும் 8.88 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. மற்ற செலவுகளுக்காக 29.77 லட்சம் செலவானது.

தேர்தலுக்கு செலவழித்தது 97 கோடி! - இது தி.மு.க செலவுக் கணக்கு

இதுதவிர வேட்பாளர்களின் செலவுகளையும் தி.மு.க. ஏற்றுக் கொண்டது. 7 லட்சம் முதல் 25 லட்சம் வரையில் வேட்பாளர்களுக்கு தகுந்த மாதிரி தொகைகளைக் கொடுத்திருக்கிறார்கள். 135 தி.மு.க. வேட்பாளர்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. 25 லட்சம் தரப்பட்டவர்களில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.பி.சாமி, தா.மோ.அன்பரசன், துரைமுருகன், பொன்முடி, ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் சிம்லா முத்துச்சோழன், என்.ஆர்.தனபாலன், சேகர்பாபு, ஜெ.அன்பழகன், கனிமொழி, நடிகர் வாகை சந்திரசேகர் ஆகியோர் அடங்குவர். அதாவது வசதி படைத்தவர்களுக்கும் தி.மு.க. பணம் அளித்திருக்கிறது.

7 பேருக்கு தலா 15 லட்சம் அளித்திருக்கிறார்கள். கொஞ்சம் பணக்காரர்கள் என்பதால் என்னவோ கருணாநிதிக்கும் ஸ்டாலினுக்கும் தலா 15 லட்சம் தரப்பட்டிருக்கிறது. இந்த வரிசையில் கே.என். நேரு, கீதா ஜீவன், மதிவாணன் ஆகியோரும் அடங்குவர். எதுவுமே தரப்படாதவர்களும் இருக்கிறார்கள். வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்ட ப.ரங்கநாதன், எ.வ.வேலு, எஸ்.முத்துசாமி, கே.சி.பழனிச்சாமி, டாக்டர் பூங்கோதை ஆகியோருக்கு ஒரு நயா பைசாகூட வழங்கப்படவில்லை. மிகக் குறைந்த தொகையாக 7 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டவர் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட சச்சிதானந்தம். சேலம் தெற்கு தொகுதியில் போயிட்ட குணசேகரனுக்கு எட்டு லட்சம் தரப்பட்டிருக்கிறது. தே.மு.தி.க-வில் இருந்து பிரிந்து மக்கள் தே.மு.தி.க. எனத் தொடங்கி தி.மு.க. கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட மூன்று பேருக்கும் தி.மு.க. தலைமை பணம் அளித்திருக்கிறது. இதில் மேட்டூர் தொகுதியில் போட்டியிட்ட எஸ்.ஆர்.பார்த்திபனுக்குத்தான் மிகக் குறைவாக 10 லட்சம் தரப்பட்டது. வி.சி.சந்திரகுமாருக்கு 20 லட்சமும் கும்மிடிப்பூண்டி சேகருக்கு 25 லட்சமும் தரப்பட்டது.

தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் 5 பேர், மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்த 4 வேட்பாளர்கள் ஆகியோருக்கு தலா 25 லட்சம் ரூபாயை தி.மு.க. வழங்கியிருக்கிறது. காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு எதுவும் தரப்படவில்லை. புதுச்சேரியில் போட்டியிட்ட 9 தி.மு.க. வேட்பாளர்களுக்கும் தலா பத்து லட்சத்தில் இருந்து 15 லட்சம் வரையில் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி தி.மு.க. வேட்பாளர்களுக்கு இப்படி தரப்பட்ட மொத்த தொகை 44.97 கோடி ரூபாய்.  

எல்லா செலவுகளையும் சேர்த்து ஒட்டு மொத்தமாக தி.மு.க. செய்த செலவு 97 கோடியே 34 லட்சத்து 41 ஆயிரத்து 798 ரூபாய்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...