News
Loading...

விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றும் நல்ல உள்ளங்கள்

விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றும் நல்ல உள்ளங்கள்

இந்தியாவில் ஆண்டுதோறும், விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கடந்த ஆண்டு மட்டும் 5 லட்சத்து ஆயிரத்து 423 சாலைவிபத்துகள் நடந்துள்ளன. இதில், அதிர்ச்சிதரத்தக்க தகவல் என்னவென்றால், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகமான விபத்துகள் நடந்துள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் 67 ஆயிரத்து 250 விபத்துகள் நடந்திருக்கின்றன. அதிக உயிரிழப்பு ஏற்படுத்திய மாநிலங்களின் பட்டியலிலும் தமிழ்நாடு முன்னணியில் இருக்கிறது. இந்தியா முழுவதிலும் 1 லட்சத்து 46 ஆயிரத்து 133 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இதில், தமிழ்நாட்டில் மட்டும் 15 ஆயிரத்து 190 உயிர்கள் பறிபோய்விட்டன. கடந்த 2006–ம் ஆண்டு சட்டகமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில், விபத்துகளில் சிக்கி உயிரிழந்தவர்களில் 50 சதவீதம்பேர் அந்த இடத்திலிருந்து உரியநேரத்தில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லாததே காரணம் என்று கூறியுள்ளது. பொதுவாக, விபத்தில் சிக்கி ஒருமணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு கொண்டுசென்று சிகிச்சை தொடங்கும் நேரத்தை ‘‘தங்க நேரம்’’ என்பார்கள். ஆக, ‘‘தங்க நேரத்தில்’’ விபத்தில் சிக்கிய ஒருவரை மருத்துவமனைக்கு கொண்டுபோய் சிகிச்சையை தொடங்கினால் நிச்சயமாக உயிரைக்காப்பாற்ற வழியிருக்கிறது. விபத்தில் காயமடைந்தவர்கள் தானாக எழுந்துபோய் ஆஸ்பத்திரிக்கு செல்லமுடியாது. அவருக்கு யாராவது ஒருவர் உதவவேண்டும். 

இப்போதும், இதுபோல விபத்தில் சிக்கியுள்ளவர்களை காப்பாற்ற நல்ல உள்ளங்கள் தயாராக இருந்தாலும், அவர்கள் பாதிக்கப்பட்டவர்களை ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றால் அதிலும், தனியார் ஆஸ்பத்திரி என்றால் பணம்கட்ட சொல்வார்கள். இதற்கடுத்து, நீங்கள் யார்?, உங்கள் முகவரி என்ன?, உங்களுக்கும்–இவருக்கும் என்ன தொடர்பு? என்று ஆஸ்பத்திரியில் மட்டுமல்லாமல், இந்த சாலைவிபத்தை பதிவுசெய்ய வரும் போலீசாரும் கேள்விக்கணைகளை அவர்களை நோக்கி துளைத்தெடுப்பார்கள். போலீசார் அதோடுவிட்டுவிடாமல், விசாரணை என்று போலீஸ் நிலையத்திற்கு அழைத்துவந்தும் விசாரிப்பார்கள். மேலும், கோர்ட்டில் சென்று சாட்சிசொல்லும்படியும் நிர்ப்பந்திப்பார்கள். இப்படி பலசிக்கல்கள் இருப்பதால்தான், நிறையபேர் மனம் இருந்தும், ‘நமக்கு ஏன் வீண்வம்பு?’ என்று தங்கள் மனதை மாற்றிக்கொண்டு சென்றுவிடுகிறார்கள். இதுபோன்று விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற நினைப்பவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க கடந்த 2014–ம் ஆண்டு அக்டோபர் மாதம் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கேற்ப, மத்திய அரசாங்கம் சில வழிமுறைகளை வெளியிட்டிருந்தது. அதைபின்பற்றும்வகையில், தமிழக அரசு ஒரு உத்தரவே பிறப்பித்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. 

இந்த உத்தரவில் விபத்தில் காயமடைந்தவர்களை ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்பவர் முகவரியை மட்டும் பெறவேண்டுமேதவிர, வேறு எந்தக்கேள்விகளையும் கேட்கக்கூடாது. இதுபோன்ற விபத்துகளில் உதவிசெய்பவர்களுக்கு அரசு தக்க சன்மானம் வழங்கமுன்வரவேண்டும். டெலிபோன் மூலம் போலீஸ் ஸ்டேஷனுக்கோ, அல்லது விபத்து சிகிச்சைமையத்திற்கோ தகவல் தெரிவித்தால், அவரது பெயர் மற்றும் சொந்த விவரங்களை தெரிவிக்க நேரிலோ, அல்லது டெலிபோனிலோ கட்டாயப்படுத்தக்கூடாது. உதவிசெய்பவர்களின் சொந்தவிவரம் மற்றும் தொடர்புகொள்பவர்களின் விவரங்களை அளிப்பது அவரவர் விருப்பத்தை பொருத்தது. சிலர் தாங்களாகவே சாட்சிசொல்ல தங்கள் விருப்பத்தை தெரிவித்தால், போலீசார் ஒருமுறை மட்டுமே விசாரணை மேற்கொள்ளலாம். ஆஸ்பத்திரியில் கட்டணத்தொகை எதுவும் நிச்சயமாக கேட்கக்கூடாது. இதுபோல, இத்தகைய வழிமுறைகளை பொது மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. நிச்சயமாக அரசின் இந்த உத்தரவு, விபத்தில் சிக்கிய பல உயிர்களை காப்பாற்றவும், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்கவும் உதவும். அரசு உத்தரவை நிறைவேற்றுவது இனி ஆஸ்பத்திரி, போலீசார் மற்றும் அரசு ஊழியர்களின் கையில்தான் இருக்கிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...