News
Loading...

சட்டத்தின் முன் ஆண், பெண் பேதமில்லை

சட்டத்தின் முன் ஆண், பெண் பேதமில்லை

இந்திய அரசியலமைப்பு பிரிவு 14–ன்கீழ் ‘அனைவரும் சமம்’ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், நமது சட்டஅமைப்பில் சில சட்டங்கள் ஒருசிலருக்கு சாதக மாகவும், ஒருசிலருக்கென தனியாகவும் இருப்பதை பார்க்கமுடிகிறது. ஒருசில சட்டங்கள் ஆண்களை மட்டுமே குறிவைத்து, அவர்களுக்கு மட்டுமே தண்டனை அளிக்கும்வகையில் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, குடும்ப வன்முறைசட்டம் என்ற ஒருசட்டம் ஆண்களை மட்டுமே தண்டிக்கும்வகையிலும், தண்டனை எல்லைக்குள் பெண்கள் வரமாட்டார்கள் என்றும் இருக்கிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ, பொருளாதார ரீதியாகவோ கொடுமை செய்தால், அவ்வாறு கொடுமைசெய்யும் ஆண்மீது இந்த சட்டத்தின் பிரிவு 2(கியூ) மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், ஒரு பெண்ணை, மாமியாரோ,  நாத்தனாரோ, சகோதரியோ ஏதோ ஒருவகையில் கொடுமை செய்தால் இந்த சட்டத்தின்படி அவர்கள்மீது அதாவது, எந்தவொரு பெண் மீதும் நடவடிக்கை எடுக்கமுடியாது. 

ஒரு பெண் தன் குடும்பத்தில் ஒரு ஆண்மீது ஏதோ ஒரு கோபம் இருந்தால், அவரை தண்டிக்கவேண்டும் என்று நினைத்தால், உடனே, ‘‘என்னை மனரீதியாக கொடுமை செய்தார். அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று சொன்னால், அந்த ஆண் குற்றம்சாட்டப் படுபவராக ஆகிவிடுகிறார். ஒருவேளை ஒருபெண் மற்றொரு பெண்ணை இவ்வாறு உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ கொடுமைசெய்தால், அவர்மீது எந்த வொரு நடவடிக்கையும் எடுக்கமுடியாது. இதற்கு தீர்வு காணும் வகையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் குரியன் ஜோசப், ஆர்.எப்.நாரிமன் ஆகியோர் கொண்ட பெஞ்சு, சட்டத்திலுள்ள இந்த பாகுபாட்டை நீக்கும்வகையில், குடும்ப வன்முறை சட்டத்தில் ஆண்களுக்கு மட்டுமே குற்றவாளிகளாக்கும் சட்டப்பிரிவு 2(கியூ)வில் குற்றம் சாட்டப்பட்டவராக வயதுவந்த ஆண் மட்டும் என்று இருக்கும் வார்த்தையை நீக்கி உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவில் இச்சட்டப்பிரிவு ஆண்கள்மீது மட்டுமே குற்றம் சுமத்தமுடியும் என்றிருந்தால், ஒரு ஆண், ஒரு பெண்ணை மற்றொரு பெண்மூலம் கொடுமைசெய்து சட்டப்பிடியி லிருந்து தப்பித்து விடுவார். இதனால் இந்த சட்டத்தைக் கொண்டுவந்த நோக்கமே வீணாகிப் போய் விடும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். 

சுப்ரீம் கோர்ட்டின் இந்த அதிரடி உத்தரவால், ஒரு பெண்ணை கொடுமை செய்பவர் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் சரி, இந்த சட்டத்தின் கீழ் இனி நடவடிக்கைக்கு உள்ளாவார்கள். நிச்சயமாக உச்சநீதி மன்றத்தின் இந்த தீர்ப்பு மிகவும் வரவேற்கத்தக்கதாகும். இதேபோல, குழந்தை திருமண தடைசட்டத்திலும் ஆண்களுக்கு மட்டுமே தண்டனை அளிக்கும் வகையில் இருப்பதை சிலநாட்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதனே சுட்டிக்காட்டியிருக்கிறார். தாய், தந்தை இல்லாமல், பாட்டி பராமரிப்பில் வளர்ந்து வந்த ஒரு 16 வயது பெண்ணை, 35 வயது ஆணுக்கு திருமணம் செய்துவைத்ததாக ஒரு வழக்கு அவர் முன்னிலையில் வந்தது. இந்த வழக்கில், அந்த பெண்ணை திருமணம் செய்த ஆண் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடிந்ததே தவிர, திருமணத்தை நடத்தி வைத்த பாட்டிமீது நடவடிக்கை எடுக்கமுடியவில்லை. இந்த சட்டத்தின் மூலம் பெண்களுக்கு தண்டனை வழங்கி சிறைக்கு அனுப்ப முடியாது என்ற சட்டப்பிரிவு இருக்கிறது. எனவேதான், குழந்தைகள் திருமண சட்டப்பிரிவு 11(1–லும்) பெண்கள்மீது குற்றம் சாட்டமுடியாது என்று இருப்பதை தவிர்த்து, குழந்தை திருமண தடைசட்டம் ஆண், பெண் இருவருக்கும் பொதுவாக இருக்கவேண்டும் என்று நீதிபதி  வைத்தியநாதன் வலியுறுத்தியிருக்கிறார். எனவே, இதுபோல ஆண்களை மட்டுமே குற்றவாளிகளாக்கும் சட்டப் பிரிவுகளை யெல்லாம் பரிசீலனை செய்து, ‘ஆண், பெண் சமம்’ என்ற நிலையை பாராளுமன்றமும், உச்சநீதிமன்றமும் வலியுறுத்த வேண்டும். 

English Summary : Act before the male and female petamillai

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...