News
Loading...

மக்கள் குறைகளை தீர்க்கும் தனி அதிகாரிகள்

மக்கள் குறைகளை தீர்க்கும் தனி அதிகாரிகள்

பண்டையகாலம் தொட்டே தமிழ்நாட்டில் சின்னஞ்சிறு கிராமங்களிலும், உள்ளாட்சி நிர்வாகம் சிறப்பாக நடந்திருக்கிறது. அந்தக்காலங்களில் கிராமங்களில் ஊர்த்தலைவர்கள் என்று பண்புமிக்க ஒருவரை மக்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். கிராமத்தில் சின்னகுறை இருந்தாலும், அதன் தீர்வுக்கு அந்த ஊர்தலைவர் வைத்ததே சட்டம். பிற்காலங்களில் உள்ளாட்சி அமைப்புகள் தலையெடுத்தன. கிராமங்களில் பஞ்சாயத்து என்றும், நகரங்களில் நகராட்சி என்றும், பெருநகரங்களில் மாநகராட்சி என்றும் அமைக்கப்பட்டன. சாலைவசதி வேண்டுமென்றாலும், சாலைபராமரிப்பு என்றாலும் சரி, குடிநீர் வேண்டுமென்றாலும், கழிவுநீர் அடைத்துவிட்டது என்றாலும் சரி, இப்படி சின்னசின்ன தேவைகளுக்கும் மக்கள் நாடிசெல்வது இந்த உள்ளாட்சி அமைப்புகளைத்தான். தமிழ்நாட்டில், தற்போது 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள், 388 ஊராட்சி ஒன்றியங்கள், 31 மாவட்ட ஊராட்சிகள், 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த அமைப்புகளில் எல்லாம் முதலில் வார்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். நடக்கப்போகும் தேர்தலில் கீழ்மட்ட அமைப்புகளின் தலைவர்கள் நேரடித் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மேல்மட்டங்களில் தலைவர்களை வார்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். அந்தவகையில், தற்போதுள்ள உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகாலம் வருகிற 24–ந் தேதியோடு முடிவடைகிறது. அதற்கு முன்பாக மொத்தம் இந்த உள்ளாட்சி அமைப்புகளில், 1 லட்சத்து 31 ஆயிரத்து 794 பதவியிடங்களை நிரப்ப கடந்த 17, 19–ந் தேதிகளில் தேர்தல் நடப்பதாக இருந்தது. 

ஆனால், எஸ்.டி. பிரிவு மக்களுக்கு இடஒதுக்கீடு செய்யப்படவில்லை என்ற வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், ‘உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு அவசரகதியில் அறிவிக்கப்பட்டதாக கூறி, அதை ரத்து செய்தார். புதிய தேர்தல் அறிவிப்பு வெளியிட்டு டிசம்பர் 31–ந் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்’ என்றார். இதனை எதிர்த்து தொடரப்பட்ட அப்பீல் வழக்கு ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. எனவே, அக்டோபர் 24–ந் தேதிக்கு பிறகு உள்ளாட்சி அமைப்புகள் நிர்வாகத்திற்கு மக்கள் பிரதிநிதிகள் இருக்க மாட்டார்கள் என்றநிலையில், நிர்வாகத்தை நிர்வகிப்பதற்காக அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், தனி அதிகாரிகள் நியமிக்கப்படும் வகையில், தமிழக கவர்னர் 2 அவசர சட்டங்களை பிறப்பித்துள்ளார். இந்த அவசர சட்டங்களின்படி, இந்த தனி அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கான அதிகாரங்களையும், கடமைகளையும், பொறுப்புகளையும் நிறைவேற்றுவார்கள். யார்–யார்? தனி அதிகாரிகள் பொறுப்புக்களை ஏற்பார்கள்? என்பது குறித்து எந்த நேரத்திலும் தனியாக அரசு உத்தரவு வெளியிடப்பட இருக்கிறது. 

ஆக, இனி உள்ளாட்சி தேர்தல் நடந்து புதிய உறுப்பினர்கள், தலைவர்கள், தேர்ந்தெடுக்கும்வரையில், மக்களுக்கான அனைத்து கடமைகளையும் ஆற்றவேண்டியது இந்த அதிகாரிகளின் பொறுப்பில்தான் இருக்கும். பொதுவாக தங்களுக்கு ஏதாவது ஒருகுறை என்றால், மக்கள் அந்தந்த பகுதி வார்டு உறுப்பினரை போய் தொடர்புகொள்வார்கள். ஆனால், இனி ஒட்டுமொத்த ஊரிலுள்ள மக்களும் சின்னஞ்சிறு குறைகளுக்கும் தனி அதிகாரிகளை தொடர்புகொள்ளவேண்டிய நிர்பந்தம் ஏற்படும். இந்தநிலையில், தனி அதிகாரிகள் தங்களுக்கு ஏற்கனவே உள்ள நிர்வாக பொறுப்புகளோடு, அடுத்த 2 மாதங்களுக்கு மக்களின் சின்னஞ்சிறு குறைகளையும் தீர்க்கும் பொறுப்பில் இருப்பார்கள். அதிலும், சரியாக வடகிழக்குப்பருவமழை பெய்யும் நேரத்தில் தான் இவர்கள் நிர்வாகம் இருக்கும். எனவே, தனி அதிகாரிகளாக நியமிக்கப்படும் அதிகாரிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மழைச்சேதம், மழைச்சேதங்களை சரிப்படுத்தும் நிவாரண பணிகளை மேற்கொள்ளவேண்டும் என்ற பெரும் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டிய நேரம் இது. தனி அதிகாரிகள் மட்டுமல்லாமல், உள்ளாட்சியின் அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள், ‘‘மக்கள் சேவையே மகேசன் சேவை’’ என்ற நிலையில், பம்பரமாகச்சுழன்று பணியாற்ற வேண்டும்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...