News
Loading...

வேலைவாய்ப்பை பெருக்கவேண்டும்

வேலைவாய்ப்பை பெருக்கவேண்டும்

எந்தவொரு நாட்டிலும், ஏழ்மை பெருமளவில் ஒழிக்கப் படும்போதுதான், அங்கு வளமும், வளர்ச்சியும் பெருகிக்கொண்டிருக்கும். மக்கள் கையில் அத்தியாவசிய செலவுகளுக்காவது பணப்புழக்கம் இருந்தால்தான் ஏழ்மை ஒழியும். அப்படிப்பட்ட பணப்புழக்கம் வளரவேண்டு மென்றால், வேலைவாய்ப்புகள் போதியளவில் இருந்தால் தான் அது நிறைவேறும். ஏழ்மைக்கு முக்கியக்காரணமான வேலையில்லா திண்டாட்டவிகிதம் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2015–16–ம் ஆண்டில்தான் அதிகமாக இருக்கிறது என்று தெரியவந்துள்ளது.

மத்திய அரசாங்க தொழிலாளர் அமைச்சகம் ஆண்டு தோறும் வேலைவாய்ப்பு–வேலையில்லா திண்டாட்டம்பற்றி ஒரு கணக்கெடுப்பு எடுத்துவருகிறது. இந்த கணக் கெடுப்பில், 15 வயதுக்கு மேற்பட்டவர்களின் வேலை வாய்ப்புகள் பற்றி வெளியிடப்படும். அந்தவகையில், கடந்த ஆண்டு 5 சதவீதம் பேர் வேலையில்லா திண்டாட் டத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற தகவல் கிடைத் துள்ளது. அனைத்து மாநிலங்களிலும் எடுக்கப்பட்ட இந்த ஆய்வில், கிராமப்புறங்களில் ஆண்கள் வேலையில்லா திண்டாட்டம் கடந்த 2 ஆண்டுகளாக ஒரேநிலையில் இருக்கிறது. ஆனால், பெண்கள் வேலையில்லா நிலைதான் உயர்ந்துள்ளது. நகர்ப்புறங்களில்தான் வேலையில்லா திண்டாட்டம் ஆண்களுக்கும், பெண்களுக்கும் குறைந் திருக்கிறது. ஆனால், மிகவும் கவலை அளிக்கத்தக்க நிலை எதுவென்றால், வேலைக்கு செல்லவேண்டிய கட்டாய  நிலையிலுள்ள  18  வயது முதல் 29 வயதுள்ளவர்களில், ஆண்களில் 11.3 சதவீதம் பேர்களும், பெண்களில் 20 சதவீதம் பேர்களும் வேலையில்லாமல் இருக்கிறார்கள். வேலைவாய்ப்பு  என்பது  தொழில்  வளர்ச்சி  மட்டுமல்லாமல், விவசாய வளர்ச்சியிலும் உருவாகவேண்டியதாகும்.

தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், 1993–94–ம் ஆண்டி லிருந்து விவசாய வளர்ச்சி மிகவும் குறைந்து 2.9 சதவீதமாக இருக்கிறது. வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 31.3.2016 நிலவரப்படி, 83 லட்சத்து 33 ஆயிரத்து 864 பேர் பதிவு செய்திருக்கிறார்கள். கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 
72 லட்சத்து 685 பேர் வேலைவாய்ப்பு பெறுவதற்காக பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், இன்னும் 5 ஆண்டுகளில் 90 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவும், ரூ.20 லட்சம் கோடிக்குமேல் தொழில் முதலீடுகள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்ப தாகவும், இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் சபைகளின் கூட்டமைப்பும், சென்னை வர்த்தகம் மற்றும் தொழில் அமைப்பும் தெரி வித்துள்ளது. ஏற்கனவே வெளிநாடுகளில் சென்று வேலை பார்ப்பவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பும் பணம் பெருமளவில் குறைந்துகொண்டிருக் கிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி காரணமாகவும், பொருளாதாரநிலை காரண மாகவும் வெளிநாட்டில் வேலைவாய்ப்புகள் குறைந்து கொண்டிருக்கிறது.

இந்தநிலையில், புதிய தொழில்களிலும், விவசாயத் திலும் வேலைவாய்ப்புகளை பெருக்குவது எப்படி? என்பதற்கான ஆய்வுகளை மத்திய அரசாங்கமும், மாநில அரசாங்கங்களும் எடுத்து, அதை நடைமுறைப்படுத்துவதை தங்கள் முதல் கடமையாகக்கொண்டு செயல்படவேண்டும். தொழில் தொடங்குவதற்கு ஊக்கமளிக்க வேண்டுமென்றால், முதலில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவேண்டும். வேலைவாய்ப்புகளை பெருக்கும் அளவிலான தொழில் களுக்கு அரசு எல்லா உதவிகளும் வழங்கவேண்டும். எல்லோருக்குமே அரசால் வேலைவாய்ப்புகளை உருவாக்கமுடியாது என்பதால், வேலைவாய்ப்புகளை பெருமளவில் உருவாக்கும் தனியார் தொழில் நிறுவனங் களுக்கு தேவையான அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும். இதுமட்டுமல்லாமல், சுயவேலைவாய்ப்புகளை பெருக்குவதற்கு இன்னும் பல புதிய திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். மேலும், இதுபோல் கிராமப்புறங்களில் விவசாயம்தான் அடிப்படை தொழில் என்பதால், விவசாயம் மேம்படுவதற்கான நவீனதொழில்நுட்பங்களை ஒருபுறம் செயல்படுத்தி, மற்றொருபுறம் விவசாயிகளுக்கு விளை பொருள்களுக்கான உரியவிலையை கொடுப்பதற்கான நடவடிக்கைகளையும் தீவிரமாக செயலாக்கத்திற்கு கொண்டுவரவேண்டும். விவசாயம், தொழில்வளர்ச்சி இரண்டையுமே இரு தண்டவாளங்களைப்போல நிர்மாணித் தால்தான், வேலைவாய்ப்பு என்ற ரெயில் வேகமாகச் செல்லமுடியும்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...