News
Loading...

வீட்டை விற்று உலகப் பயணம்...

வீட்டை விற்று உலகப் பயணம்...

புல்லட் மோட்டார் சைக்கிளில் கன்னியாகுமரியில் இருந்து தன்னந்தனியே பயணத்தை தொடங்கி, ஒரு வருடத்தில் 20 நாடுகளில் 36 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை கடந்திருக்கிறார், அதுல் கிருஷ்ணவாரியார் என்ற சாகச வீரர்.

இவரது சாகசத்திற்கு நிறைய பணம் தேவைப்பட்டது. ஆனால் ‘ஸ்பான்சர்கள்’ கிடைக்கவில்லை. ஆனாலும் மனம்தளராமல், தான் சம்பாதித்து பெங்களூருவில் வாங்கிய வீட்டை விற்று, அந்த பணத்தில் பயணத்தை தொடங்கியிருக்கிறார்.

‘‘ஒவ்வொரு நாட்டிலும் எனக்கு வெவ்வேறு விதமான அனுபவங்கள் கிடைத்தன. ஈரானில் இருந்து துருக்கிக்கு செல்லும் வழியில் மிக கடுமையான பனி மழையில் சிக்கிக்கொண்டேன். முதலில் காற்றடித்தது. அப்படியே மணலை வாரிக்கொண்டு வந்து சாலையில் கொட்டியது. சாலை எதுவும் தெரியவில்லை. சிறிது நேரத்தில் வானத்தில் வெளிச்சம் பரவியதுபோலிருந்தது. சுதாரிப்பதற்குள் பனிக்கட்டி மழை பொழிந்தது. எதிரே வருவது எதையும் பார்க்க முடியவில்லை. அதற்கு மேல் புல்லட்டை ஓட்ட முடியவில்லை. நிறுத்திவிட்டேன். ஒரு மணி நேரம் கடந்த பின்பு இயல்பு நிலை திரும்பியது. துருக்கி எனக்கு அளித்த சிறப்பு வரவேற்பாக அதை எடுத்துக்கொண்டேன்’’ என்கிறார், கிருஷ்ணவாரியார்.

எல்லைகளை கடக்கும்போது இவர்  தனது புல்லட்டை கப்பலில் ஏற்றிக்கொண்டு சென்றிருக்கிறார். தாய்லாந்து, வியட்நாம், கம்போடியா, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஈரான், துருக்கி உள்பட பல்வேறு நாடுகளை சுற்றிய அவர், மேலும் பத்து நாடுகளுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். அதற்குள் அவர் புல்லட் சேதமடைந்துவிட, பயணத்தை அவர் நிறுத்தவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

‘‘வடக்கு ஸ்பெயினில் இருந்து பிரான்சிற்கு திரும்பும் வழியில் பயண் என்ற நகரத்தின் அருகில் உள்ள கிராமத்தை கடந்துகொண்டிருந்தபோது, புல்லட் பழுதடைந்தது. பத்து நாட்கள் அங்கு தங்கியிருந்தேன். கோளாறை சரிசெய்ய ஒரு மணி நேரத்திற்கு 100 யூரோ பணம் கேட்டார்கள். அதுவும் சரியாகும் என்ற உறுதி எதையும் அவர்கள் தரவில்லை. அதனால் பயணத்தை முடித்துக்கொண்டேன். அங்கிருந்து 200 கி.மீ. தூரத்தில் இருக்கும் ஒரு தம்பதியை உதவிக்கு அழைத்தேன். அவர்கள் வந்து என்னை அவர்களது வீட்டிற்கு அழைத்துச்சென்றார்கள். நான் இரண்டு நாட்கள் தங்கிவிட்டு, இந்தியா திரும்பினேன். புல்லட்டை அவர்கள் ஊருக்கு அனுப்பிவைத்தார்கள்’’ என்கிறார். இவரது பயணத்திற்கு 20 லட்சம் ரூபாய் செலவாகியிருக்கிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...