News
Loading...

விற்பனையாகப் போகிறது: சேலம் உருக்கு ஆலை!

விற்பனையாகப் போகிறது; சேலம் உருக்கு ஆலை!

மத்திய அரசாங்கமும், மாநில அரசுகளும் சரி, தங்கள் கட்டுப்பாட்டில் சில பொதுத்துறை நிறுவனங்களை இயக்கிவருகிறது. பொதுவாக, இதேபோன்ற நிறுவனங்கள் தனியாரால் நடத்தப்படும் போது, அவை நிறைய லாபம் ஈட்டும் நிலையில், அரசுகள் நடத்தும் பல பொதுத்துறை நிறுவனங்கள் மட்டும் கடும் நஷ்டத்தில் இயங்கி வருகிறது என்பது கண்கூடாகக்காணும் உண்மையாகும். இதற்கு நிர்வாகத் திறமையின்மை, தேவையற்ற வீண்செலவுகள் என்று பலகாரணங்கள் கூறப்பட்டாலும், தொடர்ந்து இத்தகைய நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கினால், அதனால் மக்களின் வரிப்பணம் பாழாகிறது என்பதுதான் நிதர்சனமான உண்மையாகும். இந்தநிலையில், இதற்கு முன்பே பல பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் தனியாருக்கு விற்கப்பட்டு, நஷ்டம் ஈடுகட்டப்பட்டுள்ளது. 1999–2000 மற்றும் 2003–2004 ஆகிய ஆண்டுகளில் மட்டும் 16 பொதுத்துறை நிறுவனங்களிலுள்ள பங்குகள் தனியாருக்கு விற்கப்பட்டு, ரூ.6,344 கோடி அப்போதே அரசுக்கு திரட்டப்பட்டது. வாஜ்பாய் பிரதமராக இருந்த காலக் கட்டத்தில்கூட, இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம், வேதாந்தா குழும நிறுவனத்துக்கு ரூ.768 கோடிக்கு விற்கப்பட்டது. இதுபோல, ஜெசோப் நிறுவனத்தின் பங்குகள் வெளியே விற்கப்பட்டன. 

இந்தநிலையில், நரேந்திரமோடி பிரதமராக பதவி யேற்றவுடன், இதுவரையில் இருந்த திட்டக்குழு மாற்றிய மைக்கப்பட்டு, ‘நிதி அயோக்’ என்ற பெயரில் ஆலோச னைக்குழு அமைக்கப்பட்டது. இந்த ‘நிதி அயோக்’ ஆலோசனைக்குழு கடந்த ஜூன் மாதம் தனது பரிந்துரையை அரசுக்கு தாக்கல் செய்தது. அப்போது, நஷ்டத்தில் இயங்கும் சில பொதுத்துறை நிறுவனங்களை விற்றுவிடலாம் என்றும், சில பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை 50 சதவீதத்துக்கும் குறைவாக குறைத்துக் கொள்ளும் வகையில் விற்றுவிடலாம் என்றும், இதன்மூலம் அந்த பங்குகளை வாங்கும் நிறுவனமே அதன் நிர்வாகத்தை மேற்கொள்ளும் என்றும் ஆலோசனை கூறியிருந்தது. பொதுவாக, 44 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்றுவிடலாம் என்று ‘நிதி அயோக்’ குழு கண்டறிந்துள்ளது. இதில், 26 நிறுவனங்களை மூடிவிடலாம் என்று ஆலோசனை தெரிவித்துள்ளது. இந்தநிலையில், கடந்த வியாழக்கிழமை கூடிய மத்திய அமைச்சரவை கூட்டம், ‘நிதி அயோக்’ குழுவின் பரிந்துரைகளை பரிசீலித்தது. அப்போது, 12 பொதுத்துறை நிறுவனங்களை விற்றுவிடலாம் என்றும், சில பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்று விடலாம் என்றும் முடிவெடுத்தது. என்றாலும், இது கொள்கை முடிவுதான் என்றும், இவ்வாறு விற்க முடி வெடுக்கப்பட்ட நிறுவனங்கள் ஒவ்வொன்றையும் தனித் தனியாக பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டு, தீவிரமாக ஆராய்ந்து பின்பு முடிவெடுக்கலாம் என்றும் தீர்மானிக்கப்பட்டது. இவ்வாறு, விற்பதற்காக முடிவெடுக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களில் சேலம் உருக்காலை நிறுவனமும் ஒன்றாகும். 

சேலம் உருக்காலை தமிழ்நாட்டில் தீவிரமுயற்சி எடுத்து, எல்லாத்தரப்பிலும் விடுக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் தொடங்கப்பட்டதாகும். 16.9.1970–ம் நாள் சேலத்தில் அப்போது தமிழக முதல்–அமைச்சராக இருந்த கருணாநிதி தலைமையில், பிரதமர் இந்திராகாந்தியால் அடிக்கல் நாட்டப்பட்டு தொடங்கப்பட்ட ஆலையாகும். இந்த ஆலையில் 2,500–க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நேரடி யாகவும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் மறை முகமாகவும் வேலைவாய்ப்பை பெறுகின்றனர். கடந்த  5 ஆண்டுகளில் இந்த ஆலை ரூ.1,302 கோடி நஷ்டத்தை சந்தித்திருக்கிறது என்று கூறப்படுகிறது. நிர்வாகத்தை சீரமைத்து மத்திய அரசாங்கமே இதைத் தொடர்ந்து நடத்துவதற்கு தமிழக எம்.பி.க்கள் மற்றும் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். அப்படி தொடர்ந்து நடத்த மத்திய அரசாங்கம் ஒப்புதல் அளிக்காமல், விற்பனை செய்வதற்கோ, பங்குகளை விற்பதற்கோ எடுக்கப்பட்ட முடிவை நிறைவேற்றினால், இங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்கள் பணி பாதுகாப்போ, தமிழகத்தின் நலனோ எந்தவகையிலும் பாதிக்கப்படாது என்ற உறுதியை மத்திய அரசாங்கம் தரவேண்டும்.

English Summary : Is going to be sold Salem Steel Plant

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.