News
Loading...

கேரளாவில் அதிக நாய்களை கொல்லும் பஞ்சாயத்து தலைவர்களுக்கு தங்க நாணயம் பரிசு

கேரளாவில் அதிக நாய்களை கொல்லும் பஞ்சாயத்து தலைவர்களுக்கு தங்க நாணயம் பரிசு
தெருக்களில் சுதந்திரமாக சுற்றித்திரியும் நாய்களை படத்தில் காணலாம்.

கேரளாவில் தெரு நாய் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து போராட்டங்களும் நடத்தினர். ஆனால் விலங்குகள் நல வாரியத்தின் எதிர்ப்பு காரணமாக தெரு நாய்களை கொல்ல அரசு தயக்கம் காட்டியது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் 90 வயது முதியவர் ஒருவர் தெரு நாய் கடித்து பரிதாபமாக இறந்தார். அதோடு சிறு குழந்தைகளும் நாய்கடிக்கு ஆளாகி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இதையடுத்து தெரு நாய் தொல்லையில் இருந்து தப்பிக்க தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சில அமைப்புகள் முயற்சி மேற்கொண்டன.

அதன்படி கேரள மாநிலம் கோட்டயத்தை அடுத்த பாலாவில் உள்ள புனித தாமஸ் கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் நாய்களை கொல்லும் பஞ்சாயத்து மற்றும் நகராட்சி தலைவர்களுக்கு தங்க நாணயம் பரிசு அளிக்கப்படும் என்று அறிவித்து உள்ளனர்.

இது பற்றி தாமஸ் கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்க பொதுச்செயலாளர் ஜேம்ஸ் பாம்பேயக்கல் நிருபர்களிடம் கூறியதாவது:-

கேரளாவில் தெருநாய் தொல்லையால் பொது மக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு பல முறை கோரிக்கை விடுத்தோம். ஆனால் அரசு இதுவரை எந்த முறையான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே நாங்களே நாய்களை கொல்லும் முயற்சியை மேற்கொண்டுள்ளோம். அதன்படி எங்கள் அமைப்பின் உறுப்பினர்கள் 1200 பேரிடம் நிதி திரட்ட முடிவு செய்துள்ளோம்.

கிடைக்கும் பணத்தில் தங்க நாணயங்கள் வாங்க உள்ளோம். அதனை எந்த பஞ்சாயத்து, நகராட்சி தலைவர்கள் அதிக நாய்களை கொல்லுகிறார்களோ அவர்களுக்கு தங்க நாணயங்கள் பரிசாக வழங்க உள்ளோம்.

இதற்காக கேரளாவின் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தலைவர்கள் அவரவர் பகுதியில் தினமும் கொல்லும் நாய்களின் எண்ணிக்கை பற்றிய விவரங்களை எங்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

வருகிற டிசம்பர் மாதம் 10-ந்தேதி வரை இந்த கணக்கெடுப்பு நடைபெறும். இதில் எந்த பஞ்சாயத்து, நகராட்சி தலைவர் அதிக அளவில் நாய்களை கொன்றது தெரிய வந்ததோ அந்த தலைவருக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கேரளாவில் தெரு நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றி அரசு சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் கடந்த 4 மாதங்களில் மட்டும் 4 பேர் நாய்க்கடிக்கு பலியாகி உள்ளனர். 701 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகிறார்கள். இவர்களில் 175 பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தவிர இந்த ஆண்டு மட்டும் இதுவரை 53 ஆயிரம் பேர் நாய் கடிக்கு ஆளாகி சிகிச்சை பெற்று உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

English Summary :Panchayat leaders killing more dogs gift gold coin in Kerala

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...