News
Loading...

பெண்களை வன்தொடர்தல் செய்ய சினிமாதான் சொல்லித்தருது!

பெண்களை வன்தொடர்தல் செய்ய சினிமாதான் சொல்லித்தருது!

‘‘சுவாதிக்குப் பிறகு, கரூர்ல சோனாலி, தூத்துக்குடியில பிரான்சினா, கோவையில தன்யா, விழுப்புரத்துல நவீனா, மயிலாடுதுறையில தீபிகானு ஒருதலைக் காதல் கொலைகள் படுபயங்கரமாவும் தொடர்ச்சியாவும் நடந்துட்டு வருது. இப்போ டெல்லியில... நடுரோட்டுல ஒரு பெண்ணை முப்பது இடத்துல குத்திக் கொன்னிருக்கான்னு செய்தி! படிக்கிறப்பவே ரொம்ப பயமா இருக்கு. பெண்களைப் பின்தொடர்ந்து வர்றது குற்றம்னு இந்த சமூகத்துல யாருக்கும் தெரியறதில்ல. இதுக்கு சினிமாவும் ஒரு காரணம்!’’ - ஆதங்கமாகவும், அழுத்தமாகவும் கருத்துகளை முன்வைக்கும் ஐஸ்வர்யா, சினிமாவில் இதுபோன்ற காட்சிகளைக் குறைத்து, பொறுப்பாக படம் எடுக்க வலியுறுத்தி ஒரு கையெழுத்து இயக்கம் தொடங்கியிருக்கிறார். 

‘www.Change.org’ என்கிற இணையதளத்தில் ஆரம்பித்திருக்கும் இவரின் கையெழுத்து இயக்கத்திற்கு சினிமாத் துறையினர் உட்பட ஆயிரத்து நூறுக்கும் மேற்பட்டவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஃபேஸ்புக்கில் #callingoutstalking  என்றும், ட்விட்டரில் @calloutstalking எனவும் பக்கங்களை உருவாக்கி மேலும் ஆதரவைத் திரட்டி வருகிறார். அதென்ன வன்தொடர்தல்? ஐஸ்வர்யாவிடமே கேட்டோம்.

‘‘Stalking என்பதன் தமிழ்ப் பதத்தை ‘வன்தொடர்தல்’னு மாத்தியிருக்கோம். பொதுவாக ஆங்கிலத்திலிருந்து இதைத் தமிழுக்கு மொழிபெயர்க்கும்போது ‘பின்தொடர்தல்’னு வரும். ஆனா, ஃபாலோ பண்றவங்களுக்கும் இவங்களுக்கும் இருக்கிற வித்தியாசம் தெரியணுமே... அதனாலதான் இந்தப் பெயர்’’ என்கிறவர், ஏன் இப்படியொரு கையெழுத்து இயக்கம்? என்பது பற்றித் தொடர்ந்தார்.

‘‘சமீபத்துல, சுவாதி படுகொலை எல்லோரையும் உலுக்கிடுச்சு. அப்போ, ‘சினிமாவும் இதுக்கு ஒரு காரணம்’னு விவாதம் போயிட்டிருந்துச்சு. அது, உண்மைதான்னு எனக்கும் பட்டுச்சு. ஒரு பொண்ணுகிட்ட முதல் தடவையா எப்படி அப்ரோச் பண்ணணும்ங்கிற விஷயத்தைக் கத்துக் கொடுக்கிற இடமாக இன்னைக்கு சினிமாதான் இருக்கு. ஹீரோயின் திரும்பிப் பார்க்க மாட்டா. ஆனா, ஹீரோ அவ பின்னாடியே போவார். ‘எப்படின்னாலும் அவ சரின்னு சொல்லித்தான் ஆகணும். 

இப்போ சொல்லாட்டி நாளைக்கு சொல்வா’னு ஹீரோ டயலாக் பேசுவார். ‘உன் மூஞ்சியைப் பார்த்தாலே பிடிக்கலை’னு ஹீரோயின் சொன்ன பிறகும் பதிலுக்கு, ‘என்னையெல்லாம் பார்த்தா பிடிக்காது... பார்க்க பார்க்கத்தான் பிடிக்கும்’னு சொல்றதும் இன்னும் இளைஞர்களுக்கு உற்சாக டானிக்கா இருக்கு. இப்படித்தான் பெரும்பாலான படங்கள் கடந்த பத்து வருஷமா வன்தொடர்தலை மையமா வச்சு வந்திட்டு இருக்கு. ‘ஒரு பொண்ணைப் பார்க்கணும். அவளை ஃபாலோ பண்ணணும். 

அவளையே நினைக்கணும். எஸ்.எம்.எஸ். அனுப்பி தொல்லை பண்ணணும்...’ இப்படி ஒரே மாதிரியான ஸ்கிரிப்ட். கடைசியா படத்துல பொண்ணு ‘யெஸ்’ சொல்லி சந்தோஷமா முடிச்சிடுறாங்க. ஆனா, ‘நோ’ சொன்னா என்ன நடக்கணும்னு எந்த சினிமாவுலயும் காட்டுறதில்ல. அதைப் பத்தி பேசற ஐடியா கூட இல்லாம இருக்காங்க. இப்படியான நிறைய விவாதங்கள் எங்களுக்குள்ள நடத்தினோம். சிலர் இந்த மாதிரியான படங்களைத் தடை பண்ணணும்னு சொன்னாங்க. 

சினிமாக்காரர்கள் அதை ‘கருத்து சுதந்திரம்’னு மறுக்கறாங்க. நாங்க சினிமாவை முழுசா குறை சொல்லலை. ஆனா, பொறுப்பா படம் எடுங்கன்னுதான் கேட்கிறோம். இதை வலியுறுத்திதான் பிளாக்ல இருந்த பத்து பேர் சேர்ந்து ‘பெண்களை இழிவுபடுத்துற காட்சிகளைக் கொண்டாடாதீங்க’னு இந்த கையெழுத்து இயக்கம் ஆரம்பிச்சோம்’’ என்கிற ஐஸ்வர்யா, சென்னையில் பிரிட்டிஷ் நாடகங்கள் பற்றி பிஹெச்.டி ஆய்வு செய்கிறார். இப்போது வன்தொடர்தல் பற்றின ஆய்வுகளையும் சேகரித்துள்ளார்.

‘‘அமெரிக்காவுல வன்தொடர்தலுக்கும் சினிமாவுக்கும் உள்ள தொடர்பு பத்தி மருத்துவ ஆய்வுகள் நிறைய இருக்கு. அந்த ஆய்வுகள் ‘இது மாதிரியான படங்களைப் பார்த்து வளர்ற பசங்களுக்கு இதுதான் காதல், வாழ்க்கைனு புரிய நிறைய வாய்ப்பு இருக்கு’னு சொல்லுது. இந்த பெட்டிஷனை தொடங்கினதும் ட்விட்டர் பக்கத்துல இருக்கிற ரஜினி, கமல்ல ஆரம்பிச்சு அனிருத் வரை எல்லாருக்கும் அனுப்பிச்சோம். இப்போ, ஐ.நாவின் பெண்கள் நல்லெண்ண தூதரா நியமிக்கப்பட்டிருக்கிற ஐஸ்வர்யா தனுஷ்கிட்டயும், ‘உங்க அப்பா, கணவர் எல்லோரும் சினிமாவில் மிகப் பெரிய நிலையில் இருக்காங்க. 

அவங்ககிட்ட சொல்லி இதைக் கட்டுப்படுத்துங்க’னு கேட்டோம். ஆனா, ரெண்டு மூணு பேர் தவிர யார்கிட்ட இருந்தும் பதில் வரலை. நடிகர் சித்தார்த், ‘நாங்க பண்ணினது தப்புதான். நாங்க தவறான முன்மாதிரியை உருவாக்கியிருக்கோம். நான் உட்பட யாரும் இந்த பொறுப்புல இருந்து தப்பிக்க முடியாது. நாங்க மாறணும்’னு சொல்லியிருந்தார். மனசுக்கு அது ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. அப்புறம், லட்சுமி ராமகிருஷ்ணன், ‘சினிமாவுல இது  விஷமா பரவிடுச்சு. இப்பவாவது உணர்ந்து திருந்தினா பரவாயில்ல’னு சொல்லி சப்போர்ட் பண்ணியிருக்காங்க’’ என்கிறவர், வன்தொடர்தல் மிகப் பெரிய குற்றம் என்கிறார்.

‘‘இ.பி.கோ. 354டி சட்டப் பிரிவுப்படி வன்தொடர்தல் மிகப் பெரிய குற்றம். இந்தச் சட்டத்தை 2013ல் நிர்பயாவின் மரணத்துக்குப் பிறகு அமல்படுத்தியிருக்காங்க. இந்தக் குற்றத்துல ஒருத்தர் முதல் தடவையா ஈடுபட்டா மூணு வருஷ தண்டனை கிடைக்கும். பெயில் எடுத்துக்கலாம். அதே நபர் மறுபடியும் ஈடுபட்டா, பெயில் இல்லாத ஐந்து வருட தண்டனை கிடைக்கும். இதேமாதிரி ஆன்லைன்ல வன்தொடர்தல்ல ஈடுபட்டாலும் இந்தச் சட்டத்தில் வழக்குப் பதியலாம். 

இப்போ, இதைப் பத்தின விழிப்புணர்வு ஏற்படுத்திட்டு இருக்கோம். சினிமாவுல கொலை, கொள்ளை, கள்ளக்கடத்தல் எல்லாத்தையும் குற்றம்னு சொல்றாங்க. ஆனா, இந்த வன்தொடர்தலை ஆண்மகனின் வீரம், உயர்ந்த குறிக்கோள்னு சித்திரிக்கிறாங்க. எதை பெரிசுனு காட்டுறாங்களோ, அது நம் நாட்டு சட்டத்தின்படி குற்றம்’’ எனும் இவர், சட்டம் பற்றின விழிப்புணர்விலும் ஈடுபட்டு வருகிறார்.

‘‘ஒரு ஆண், ஒரு பெண் பின்னாடி போய் பேசணும்னு நினைக்கிறான். உடனே, போலீஸ்கிட்ட பிடிச்சுக் கொடுக்க முடியாது. ‘எங்கிட்ட பேசாதே’ன்னோ, ‘உன்னைப் பார்த்தா பயமா இருக்கு, என் பின்னாடி வராதே’ன்னோ பெண் சொன்ன பிறகும் பின்தொடர்ந்தாதான் குற்றம்னு சட்டம் சொல்லுது.  சில பொண்ணுங்க தனியா இதைச் சொல்ல பயப்படலாம். நண்பர்களை சேர்த்துக்கிட்டு ஒரு டீமா போய் சம்பந்தப்பட்ட நபர்கிட்ட பேசச் சொல்றோம். 

அப்படியும் கேட்கலைன்னா அப்பா, அண்ணாகிட்ட சொல்லி பொறுமையா எடுத்துச் சொல்ல சொல்றோம். அதுக்குப்பிறகே போலீஸ்கிட்ட போகலாம்னு சொல்றோம். இதை முதல்கட்டமா காலேஜ்ல பேசிட்டு இருக்கோம். அப்புறம் பள்ளிகளுக்குப் போலாம்னு இருக்கோம். நாங்க வைக்கிற வேண்டுகோள் இதுதான். ஒரு பெண்ணை வன்தொடர்தல் சரி என்றோ, காதல் என்றோ, ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்று என்றோ சித்தரிக்க வேண்டாம். நடிகர்கள், காதல் என்கிற பெயரில் வன்தொடர்வதை நியாயப்படுத்தும் கதாபாத்திரங்களை ஏற்காதீர்கள். நடிகைகள், வன்தொடர்பவர் மீது காதல் வயப்படுவதே இயல்பென்பது போன்ற பாத்திரங்களை மறுத்திடுங்கள். தமிழ்நாட்டை பெண்களுக்குப் பாதுகாப்பான ஒரு இடமாக்க ஆக்கபூர்வமான வழிகளை முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கோம்’’ என முடிக்கிறார் ஐஸ்வர்யா!

‘‘கடைசியா படத்துல பொண்ணு ‘யெஸ்’ சொல்லி  சந்தோஷமா முடிச்சிடுறாங்க. ஆனா, ‘நோ’ சொன்னா என்ன நடக்கணும்னு எந்த  சினிமாவுலயும் காட்டுறதில்ல...

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.