News
Loading...

பாகிஸ்தான் மீது சர்ஜிகல் ஸ்டிரைக் நடைபெற்றது உண்மை: நேரில்கண்ட கிராம மக்கள் வாக்குமூலம்

பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது சர்ஜிகல் ஸ்டிரைக் நடைபெற்றது உண்மைதான்: நேரில்கண்ட கிராம மக்கள் வாக்குமூலம்

ஜம்மு-காஷ்மீரின் உரி பகுதியில் அமைந்துள்ள ராணுவத் தலைமையகம் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அண்மையில் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் இந்திய ராணுவத்தினர் 19 பேர் உயிரிழந்தனர். ஏற்கனவே பதான்கோட் தாக்குதலின் வடுக்கள் மறையாத நிலையில், இந்தத் தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.

பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகளே இந்தத் தாக்குதலை நடத்தியதாக இந்தியா குற்றம்சாட்டியது. மேலும், இதுதொடர்பான ஆதாரங்களையும் பாகிஸ்தான் அரசிடம் இந்தியா வழங்கியது. ஆனால், பாகிஸ்தான் இதை திட்டவட்டமாக மறுத்தது. இதற்கிடையே, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியாவுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தும் சதித்திட்டத்துடன் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக இந்திய ராணுவத்துக்கு  தகவல் கிடைத்தது.

இதையடுத்து ”சர்ஜிக்கல் ஸ்டிரைக்” என்ற அதிரடி தாக்குதலில் இந்திய ராணுவம் ஈடுபட்டு பாகிஸ்தான் பகுதியில் இருந்த தீவிரவாதிகளின் 7 முகாம்களை அழித்தது. இந்த தாக்குதலின் போது சுமார் 50 தீவிரவாதிகளும் அவர்களுக்கு ஆதரவாக இருந்த பாகிஸ்தான் ராணுவத்தினர் 2 பேரும் கொல்லப்பட்டனர். 

ஆனால், அப்படி ஒரு தாக்குதலே நடக்கவில்லை என்று புளுகிவரும் பாகிஸ்தானின் பொய் பிரசாரத்துக்கு பதிலளித்த மனோகர் பரிக்கர், ஆபரேஷன் செய்யப்பட்டதுகூட தெரியாமல் மயக்க மருந்து செலுத்தப்பட்ட நோயாளி போல பாகிஸ்தான் கிடக்கிறது. தாக்குதல் நடந்து முடிந்த பின்பும் என்ன நடந்தது? என்பதுகூட தெரியாமல் எந்த முடிவும் எடுக்க முடியாமல் பாகிஸ்தான் திணறுகிறது என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில், நாட்டு மக்களிடம் அரசின் இமேஜ் ‘டேமேஜ்’ ஆவதை தடுப்பதற்காக பாகிஸ்தான் அரசு குள்ளநரித்தனமாக பல்வேறு தந்திரங்களை கையாள தொடங்கியுள்ளது.

இந்தியாவில் இருந்து ஒளிபரப்பாகும் டி.வி.சேனல்களுக்கு தடை விதித்துவிட்டால் அங்கு நடப்பது உள்நாட்டு மக்களுக்கு தெரியவராது என்று மனப்பால் குடிக்கும் பாகிஸ்தான் அரசு, எல்லைப்பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை இந்திய வீரர்கள் சுட்டுக் கொன்றனர் என்ற உண்மையை பொய்யாக்கும் முயற்சியில் தற்போது தீவிரம் காட்டுகிறது.

இதன் முதல்கட்டமாக, இந்திய வீரர்கள் தாக்குதல் நடத்திய பகுதியை கழுவி சுத்தப்படுத்தாத குறையாக அனைத்து தடயங்களையும் அழித்துவிட்டு, உள்நாடு மற்றும் சில வெளிநாடுகளை சேர்ந்த பத்திரிகையாளர்களை சிந்து நதியின் ஓரம் உள்ள மந்தோல் என்ற எல்லைப்பகுதிக்கு ஹெலிகாப்டர் மூலம் அழைத்து சென்ற ராணுவ உயரதிகாரிகள், இந்த இடத்தில்தான் தாக்குதல் நடத்தியதாக இந்தியா பொய் சொல்கிறது என்று சுட்டிக்காட்டினர். 

எல்லைப்பகுதியில் இருக்கும் இருநாட்டு ராணுவ வீரர்களும் துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். மற்றபடி, இந்திய வீரர்கள் யாரும் நமது எல்லைக்குள் ஊடுருவி, நம்நாட்டைச் சேர்ந்த யாரையும் சுட்டுக் கொல்லவில்லை என்றும் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

மேலும், அப்பகுதியின் அருகாமையில் வசிக்கும் பாகிஸ்தானியர்களும் அப்படி ஒரு தாக்குதல் இங்கு நடக்கவே இல்லை என்று அரசு அதிகாரிகளின் உத்தரவின்படி பத்திரிகையாளர்களுக்கு பேட்டியும் அளித்தனர்.

இந்தநிலையில், 
பாகிஸ்தான் எல்லையில் முகாமிட்டுள்ள தீவிரவாதிகள்மீது இந்திய கமாண்டோ வீரர்கள் ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ எனப்படும் அதிரடி தாக்குதலை நடத்தியது உண்மைதான் என இந்திய எல்லையோரப் பகுதியில் வாழும் கிராமவாசிகள் ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளனர்.

எல்லைக்கோட்டுப் பகுதியில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் தூரத்தில் வாழ்ந்துவரும் துத்னியால் குக்கிராமவாசிகள், இந்திய கமாண்டோ படை வீரர்களின் தாக்குதலில் அங்குள்ள லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளுக்கு சொந்தமான 7 முகாம்கள் தாக்கி அழிக்கப்பட்டதாகவும் இந்த தாக்குதலில் பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் இன்று ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளனர்.

கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் பிரேதங்களை பாகிஸ்தான் ராணுவ வாகனங்கள் அவசரஅவசரமாக ஏற்றிசென்றதை கண்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், இங்குள்ள அல்-ஹவாய் பாலம் அருகே இருக்கும் ஒரு கட்டிடமும் இந்த தாக்குதலில் தீக்கிரையானதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...