News
Loading...

நீதிமன்றம் என்ன தபால் ஆபீசா?

நீதிமன்றம் என்ன தபால் ஆபீசா?

ஜனநாயகத்தின் நான்கு தூண்கள் சட்டமன்றம், நீதிமன்றம், நிர்வாகம், பத்திரிகைகள் ஆகும். இந்த நான்கு தூண்களுமே தனித்துவம் வாய்ந்தது. அவரவருக்கென தனி பொறுப்புகளும், கடமைகளும், தனித்தனி அதிகார வரம்புகளும் உள்ளன. ஒருவர் எல்லையில், அடுத்தவர் நுழைவது நல்லதல்ல. ஆனால், இப்போதெல்லாம் நீதிமன்றங்களில் வழங்கப்படும் தீர்ப்புகளைப் பார்த்தால், நிர்வாகம் செய்யவேண்டிய பணிகளை இத்தனை நாட்களுக்குள் நீங்கள் செய்து முடிக்கவேண்டும். இல்லையென்றால், கோர்ட்டு தலையிட நேரிடும் என்பதுபோன்ற பலதீர்ப்புகள் வருகிறது. ஒருபக்கம் இந்த கோணத்தில் பார்த்தால், மற்றொருபக்கம் பொதுமக்களிடையே அரசுத்துறைகளில் தாங்கள் எவ்வளவோ கோரிக்கைகளை மனுக்களாக வழங்குகிறோம். நாங்கள் நடையாய் நடப்பதுதான் மிச்சம். இவர்களிடமிருந்து எங்கள் மனுக்கள் பைசல் செய்யப்படாத நிலையில்தான் உயர்நீதிமன்றத்தின் கதவைத் தட்டுகிறோம் என்கிறார்கள். இவ்வாறு நீதிமன்றங்களுக்கு போவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தொடங்கி, இப்போது எந்த பிரச்சினையென்றாலும் அதிகாரிகள் தீர்க்கவில்லையென்றால், ஐகோர்ட்டுக்கு வருவது சாதாரணமாகி விட்டது. 

சென்னை பூக்கடையில், நடைபாதைகளில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருந்தன. இதை அங்கிருந்து கையெட்டும் தூரத்தில் இருக்கும் போலீஸ் நிலைய அதிகாரிகளே அகற்றியிருக்கலாம். அவர்கள் தங்களது கடமையை செய்யாததால், உயர்நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு சென்றது. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் கொண்ட பெஞ்சு உடனடியாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். இதுவரை தங்கள் கடமையை செய்யத்தவறிய போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. அவ்வளவுதான், ஆக்கிரமிப்புகள் எங்கு போனது என்றே தெரியவில்லை. இது போலீசார் செய்யவேண்டிய கடமை. இதற்கு உயர்நீதிமன்றம் செல்ல வேண்டியதில்லை.

இப்போது விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு ஆக்கிரமிப்பை அகற்ற மாவட்ட கலெக்டரிடம் கொடுத்த மனுமீது நடவடிக்கை எடுக்காததால், உயர்நீதிமன்றத்தின் முதல் பெஞ்சுக்கு வழக்குவந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு சொன்ன தலைமை நீதிபதியும், ஆர்.மகாதேவனும், அதிகாரிகளின் மீது கடுமையான கண்டன கணைகளை வீசியுள்ளனர். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால்தான் இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வந்திருக்கிறது. பொதுமக்கள் தரும் மனுக்கள்மீது நடவடிக்கை எடுக்கச்சொல்லி அதிகாரிகளுக்கு ஒவ்வொரு முறையும் உத்தரவிடுவதற்கு நீதிமன்றம் என்ன தபால் ஆபீசா?, நீதிமன்றத்தை ஒரு தபால் ஆபீசாக கருதிவிடக்கூடாது. பொதுமக்கள் தரும் மனுக்கள் மீது அவ்வப்போது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏற்கனவே தமிழக அரசு 2015–ல் பொதுமக்கள் தரும் மனுக்கள்மீது ஒருமாதத்திற்குள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது. இனியும் அந்த அரசு ஆணைக்கிணங்க, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், அரசுத்துறை செயலாளர்கள் அனைவரும் தினமும் ஒரு மணிநேரம் நீதிமன்றங்களில் வந்துநின்று பொதுமக்கள் குறைதீர்க்க என்னென்ன மனுக்கள் வழக்காக வந்திருக்கிறது? என்பதை பார்த்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டிய நிர்ப்பந்தம் எங்களுக்கு ஏற்படும் என்று கூறியிருக்கிறார்கள். பொதுவாக இப்போது ஒருகுறை, அதிகாரிகள் மீது பேசப்படுகிறது. எந்த கீழ்மட்ட அதிகாரியும், தன் அதிகார எல்லைக்குள் முடிவெடுக்க வேண்டிய விஷயத்தை அவர்களே எடுக்க துணிவில்லாமல், மேல் அதிகாரிகள் முடிவு எடுக்கட்டும் என்று சொல்லி மேலே அனுப்பி விடுகிறார்கள். இப்படி ஒவ்வொரு கட்டத்திலும் அனுப்பப்படும் பைல்கள் உயர் அதிகாரிகளிடம் மலைபோல குவிந்துவிடுகிறது. எனவே, ஒவ்வொரு அதிகாரியும் தங்கள் வரம்புக்குட்பட்ட முடிவுகளை அவர்களே எடுக்க வேண்டும், தங்கள் பொறுப்பை தட்டிக்கழிக்கும் வகையில் மேல் அதிகாரிகளுக்கு அனுப்பக்கூடாது என்றவகையில், கடும் எச்சரிக்கை தெரிவிக்க வேண்டும். இனியும் அரசுநிர்வாகம் தொடர்பான, அதிகாரிகளின் நிர்வாக எல்லைக்குள் இருக்கும் விஷயங்கள் உயர்நீதிமன்றத்திற்கு போகாத வகையில் கண்ணும் கருத்துமாக செயல்படவேண்டும்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.