News
Loading...

நீரிழிவு நோயாளிகளின் உயிர்காக்கும் பேண்டேஜ்

நீரிழிவு நோயாளிகளின் உயிர்காக்கும் பேண்டேஜ்

மற்ற நோயாளிகளை விட நீரிழிவு நோயாளிகள் தம் ஒவ்வொரு நாளினையும் கவனமாகவும் பாதுகாப்பாகவும் வாழ வேண்டும். ஏன்? உடலில் சிறு காயம் ஏற்பட்டாலும் ஆறாமல் அவஸ்தைப்படுத்துவதோடு, சமயங்களில் உயிரையே பறித்துவிடுவதுதான் காரணம். இவர்களின் மனம் குளிர்விக்கும் வகையில் வந்துள்ளது, புண்களை விரைவாக ஆற்றும் பேண்டேஜ் ஒன்று. 

உலகில் 15 சதவிகித நீரிழிவு நோயாளிகள் காலில் ஏற்படும் புண் ஆறாமல் தவிக்கின்றனர் எனில், 25 சதவிகித நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற அவர்களின் கால்களையே அகற்றவேண்டிய அவலநிலை. மற்ற மருந்துகளை விட இப்புண்களை நான்கு மடங்கு வேகமாக ஆற்றும் பேண்டேஜ் ஒன்றை அமெரிக்காவின் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் உள்ள மெக்கார்மிக் பொறியியல் பள்ளியின் உயிரி வேதியியல் பொறியியல் பேராசிரியர் க்யுலெர்மோ அமீர் தலைமையிலான குழு கண்டுபிடித்துள்ளது. 

நீரிழிவு நோயின் தன்மை அதிகரிக்கும்போது அது நரம்புகளை பாதித்து கால்களில் உணர்வின்மை ஏற்படுத்துகிறது. இன்சுலின் பற்றாக்குறையால், ரத்தத்தில் வேகமாக அதிகரிக்கும் சர்க்கரை, ரத்த ஓட்ட வேகத்தைத் தடைசெய்கிறது.  இதனால் உடலின் கீழ்ப்பகுதிகளில் உணர்வின்மை ஏற்படுகிறது. இதன் காரணமாக காலில் ஏற்படும் சிராய்ப்புகள், கீறல்களை நீரிழிவு நோயாளிகள் அறியமுடியாமல் போகிறது. இவை நாளடைவில் ஆறாத காயங்களாகப் பெருகி, கால்களையே அகற்றும் நிலை உண்டாகிறது.  இதைக் குணப்படுத்தும் மருந்துகள் பயனளித்தாலும், இலவச இணைப்பாக புற்றுநோயையும் அழைத்து வருகின்றன. 

பேராசிரியர் அமீரின் புதிய கண்டுபிடிப்பான மருந்து, காயங்களின் மீது செயல்பட்டு அதனை ஆற்றும் விதமாக புரதத்தை உருவாக்கி புதிய ரத்த செல்கள் உருவாகத் தூண்டுகிறது; மேலும்  ரத்த ஓட்டத்தின் வேகத்தையும் அதிகரிக்கிறது. பாலி எத்திலின் க்ளைகோல், எஸ்டிஎஃப்-1 (Stormal cell Derived Factor) என்பவைதான் இதில் உள்ள முக்கியமான பகுதிப்பொருட்களாகும். ஸ்டோர்மல் செல் என்பதை ஒரு உறுப்பிலுள்ள ஒருங்கிணைந்த திசு செல்கள் என வரையறுக்கலாம். 

‘‘முதலில் காயங்களின் மீது புரதம் செலுத்தப்படும்போது உடல் தானாகவே அந்தக் காயத்தினை ஆற்றும் செயலில் இறங்குகிறது. காயங்களின் மேல் புரதம் உருவாகும்போது, உடல் தானாகவே ஸ்டெம்செல் மூலம் காயங்களை ஆற்றும்விதமாக புதிய ரத்த செல்களை உற்பத்தி செய்வதோடு, நச்சுத்தன்மை மற்றும் எரிச்சலைக் குறைக்கிறது’’ என புன்னகைக்கிறார் பேராசிரியர் அமீர். 

குறிப்பிட்ட வெப்பநிலையில் புரதத்தை ஒட்டுமொத்தமாக காயங்களின் மீது உருவாக்கினால் அது பயன் தராது. ஆனால் அறைவெப்பநிலைக்கு ஏற்ப அதே செயல்முறையை மெல்ல புரதம் வெளிப்படும் விதத்தில் செய்யும்போது பயன்தருகிறது. உணவுகளில் சுகர்ஃப்ரீ உணவு களைப் போல, இதுபோன்ற பெய்ன்ஃப்ரீ மருந்துகளும் காலத்தின் அவசியத்தேவைதான் அல்லவா?

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...