News
Loading...

“கழுத்து வலிக்கிறது” - டாக்டர்களிடம் பேசிய ஜெ.

“கழுத்து வலிக்கிறது” - டாக்டர்களிடம் பேசிய ஜெ.

அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் முதல்வர் ஜெயலலிதா, சில நாட்களுக்கு முன்பு கண் விழித்துள்ளார். அப்போது, அவரது கழுத்துக்குக் கீழ் பொருத்தப்பட்டுள்ள டியூப்களால் வலி இருப்பதாகச் சன்னமான குரலில் மருத்துவர்களிடம் சொல்லியுள்ளார். இத்தனை நாட்களுக்குப் பிறகு, முதல்வர் பேசியதாக வெளியான தகவல் அ.தி.மு.க நிர்வாகிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

முதல்வர் உடல் நிலையில் முன்னேற்றம் இருக்கிறதா என்ற தலைப்பில் ஜூனியர் விகடனின் முந்தைய (அக்.16) இதழில் கவர் ஸ்டோரி வெளியிட்டிருந்தோம். அதில், “அக்டோபர் 9-ம் தேதி காலை, ஜெயலலிதாவின் உடல்நிலையில் ஏற்ற இறக்கம் ஏற்பட்டது. இதயத் துடிப்பு சீரற்ற முறைக்குப் போனது. அதை, அரை மணிநேரம் போராடி டாக்டர்கள் சரிசெய்தனர். நுரையீரல் சுவாசப் பிரச்னையில் ஓரளவு முன்னேற்றம் தெரிந்ததால், அவரை மூன்றாவது தளதுக்கு மாற்றலாமா என்று டாக்டர்கள் யோசனை செய்தனர்” என்று குறிப்பிட்டிருந்தோம். 

இதன் தொடர்ச்சியாக கடந்த 10-ம் தேதி, அப்போலோ வெளியிட்ட அறிக்கையில், “முதல்வருக்குத் தேவையான செயற்கை சுவாசம், ஆன்டிபயாட்டிக், நுண்ணூட்ட சத்துக்கள், பாசிவ் பிசியோதெரபி சிகிச்சைகள் தரப்படுகின்றன என்று சொல்லப்பட்டிருந்தது. எய்ம்ஸ் மருத்துவமனையின் நுரையீரல் மருத்துவப் பிரிவு பேராசிரியர் டாக்டர் ஜி.கில்மானி, அக்டோபர் 9-ம் தேதியும், 10-ம் தேதியும் முதல்வருக்கு சிகிச்சை அளித்துவரும் அப்போலோ மருத்துவர்கள் குழுவுடன் விவாதித்தார்” என்று தெரிவிக்கப்பட்டது. 

முதல்வருக்கு ஏற்பட்டிருந்த நுரையீரல் தொற்று, தொடர் சிகிச்சையின் விளைவாக, பெருமளவில் குறைந்திருக்கிறது என்று டாக்டர்கள் சொல்கிறார்கள். இப்போது, முதல்வர் ஒரு சில மணி நேரங்களுக்கு ஒரு முறை கண்விழித்துப் பார்க்கிறார். சோர்வின் காரணமாக மீண்டும் கண்களை மூடிக்கொள்கிறார். திரவ உணவு வழங்குவதற்காகத் தொண்டையில் மட்டும் இப்போது டியூப் வைக்கப்பட்டுள்ளது. கை, கால்களுக்கு உணர்வு திரும்புவதற்கான ‘பாஸிவ் பிசியோதெரபி’ (passive physiotherapy) சிகிச்சைக் கொடுக்கப்படுகிறது. ஏற்கெனவே இரண்டு முறை அப்போலோ வந்த லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியெல், முதல்வரின் உடல் நிலை குறித்து அப்போலோ மருத்துவர்களுக்கு ஆலோசனை கொடுத்தார். அதன்படிதான் முதல்வருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. லண்டன் சென்றுவிட்ட ரிச்சர்ட் பியெல் அங்கிருந்தபடியே டெலி மெடிசன் முறையில் ஆன்லைனில் தொடர்ந்து ஆலோசனைகள் வழங்கி வந்தார். இப்போது, மீண்டும் மூன்றாவது முறையாக கடந்த 13-ம் தேதி மதியம் ரிச்சர்ட் பியெல் அப்போலோ வந்திருக்கிறார். தொடர்ந்து சில நாட்களுக்கு முதல்வரின் உடல் நிலையை ரிச்சர்ட் கண்காணிப்பார் என்று அப்போலோ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...