News
Loading...

மீண்டும் ‘கலப்பட பால்’ வைத்தியநாதன்! - அலறும் ஆவின்

மீண்டும் ‘கலப்பட பால்’ வைத்தியநாதன்! - அலறும் ஆவின்

ஆவின் பால் கலப்பட வழக்கில் ஏற்கெனவே சி.பி.சி.ஐ.டி. போலீஸாரால் கைதுசெய்யப்பட்டு, ஜாமீனில் வந்த வைத்தியநாதன், ஆவின் பால் டெண்டரில் மீண்டும் கால் பதிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. 

‘லாரிகளில் கொண்டுசெல்லப்படும் ஆவின் பால் கலப்படம் செய்யப்படுகிறது’ என்று வெளியான பகீர் தகவலால் 2014-ல் தமிழகமே அதிர்ந்தது. அது தொடர்பாக நடந்த விசாரணையில், ‘ஆண்டுக்கு சுமார் ரூ.150 கோடி அளவுக்கு ஆவின் பாலில் கலப்பட ஊழல் நடந்துள்ளது. ஒவ்வொரு நாளும் 2 லட்சம் லிட்டர் வரை பால் திருடப்பட்டு உள்ளது. பாலுக்குப் பதிலாக, வேதிப்பொருள் சேர்க்கப்பட்ட தண்ணீர் அல்லது பவுடர் கலக்கப்பட்டு உள்ளது’ என்ற தகவல்கள் வெளிவந்தன. இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது. ஆவின் பால் ஊழலுக்குப் பின்னால் இருந்த வைத்தியநாதன் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த  அதிகாரிகள் சிலர் மீதும் நடவடிக்கை  எடுக்கப்பட்டது. இதுபற்றி ஜூ.வி-யில் தொடர்ந்து எழுதி உள்ளோம். 

தென் சென்னை மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளராக இருந்த வைத்தியநாதன், அ.தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார்.பால்வளத் துறை அமைச்சர் பதவி, மாதவரம் மூர்த்தியிடம் இருந்து பறிக்கப்பட்டது.  வைத்தியநாதனின் நிறுவனமான தீபிகா டிரான் ஸ்போர்ட், சவுத் இந்தியா டிரான்ஸ்போர்ட் ஆகியவை முடக்கப்பட்டு, கருப்பு பட்டியலில் அந்த நிறுவனத்தின் பெயர்கள் சேர்க்கப்பட்டன. 

2014-2016 ஆண்டு ஆவின் பால் டெண்டரை பொறுத்தவரையில், தமிழகம் முழுவதும் சுமார் 275 டேங்கர் வாகனங்கள் தனியாரிடம் இருந்து இயக்கப் பட்டன. தற்போது, ஆவின் நிறுவனத்துக்கு என 66 டேங்கர் வாகனங்கள் வாங்கப்பட்ட நிலையில், 2016-2018-ம் ஆண்டு ஆவின் பால் டெண்டரில் 241 டேங்கர் வாகனங்களுக்குத் தனியாரிடம் இருந்து டெண்டர் விடப்பட்டு வருகின்றன.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வைத்தியநாதன் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில், தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் 2016-2018 ஆண்டுக்கான ‘டேங்கர் லாரிகள் மூலம் பால் கொண்டு செல்வதற்கான டெண்டருக்கு’ வைத்தியநாதன் விண்ணப்பித்துள்ளார். மூத்த அமைச்சர் ஒருவரது செல்வாக்கைப் பயன்படுத்தி முறைகேடான முறையில், வைத்தியநாதன் டெண்டரைக் கைப்பற்றி மீண்டும் ஆவினில் கால் பதிக்க இருப்பதாக ஆவின் வட்டாரத்தில்  பரபரப்பாகப் பேசப்படுகிறது. 

இது தொடர்பாக வைத்தியநாதனிடம் பேசினோம். “என் மீது போடப்பட்டு இருப்பது பொய் வழக்கு. அதனை எதிர்ந்து வழக்கு தொடர்ந்து உள்ளேன்.  அந்த வழக்கில் தீர்ப்பு வரும் வரை, சட்டப்படி நான் குற்றமற்றவன். அதுவரை, அரசுத் துறை சார்பாக நடக்கும் எந்த ஒரு டெண்டரிலும் நான் கலந்துகொள்ளலாம் என சென்னை உயர் நீதிமன்றம் எனக்கு அனுமதி வழங்கியுள்ளது” என்றார்.

“வைத்தியநாதன் கைதுசெய்யப்பட்டு, அவருடைய நிறுவனங்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட பின்பும், ஆவின் டெண்டருக்கு எப்படி அவர் விண்ணப்பித்தார்?” என்று ஆவின் நிர்வாக இயக்குனர் சுனில் பாலிவாலிடம் கேட்டோம். 

“ஆவின் பால் டேங்கர் லாரிகள் டெண்டர் 2016-2018 ஆண்டுக்கு விண்ணப்பம் செய்பவர்களுக்கு சில விதிமுறைகள் உள்ளன. அதில், கருப்புப் பட்டியலில் உள்ள நிறுவனங்களின் பெயர்களில் வரும் விண்ணப்பங்கள் நிச்சயமாக நிராகரிக்கப்படும். அந்த வகையில் வைத்தியநாதன் உட்பட விதிமுறைகளுக்கு உட்படாத எந்தவொரு விண்ணப்பமும் நிராகரிக்கப்படும். 

டேங்கர் லாரிகள் தவிர்த்து, ஆவின் பால் பாக்கெட்களை சென்னை நகருக்குள் ஏற்றிச்செல்லும் லோக்கல் ரூட் வாகனங்களுக்கான டெண்டர், சமீபத்தில் நடைபெற்றது. அதற்கும் வைத்தியநாதன் விண்ணிப்பித்து இருந்தார். அதை நிராகரித்துவிட்டோம். வைத்தியநாதனிடம் இருந்து கற்றுக்கொண்ட அனுபவத்தைக் கொண்டு, ஆவின் நிறுவனத்துக்கு என்று சொந்தமாக 66 டேங்கர் வாகனங்களும், 15 ரூட் வாகனங்களும் வாங்கி உள்ளோம். இதற்காக 110 ஓட்டுநர்களைப் புதிதாகப் பணியில் சேர்த்து உள்ளோம். இதெல்லாம் நாம் கற்றுக்கொண்ட பாடங்களில் இருந்து, திருத்திக்கொண்ட செயல்கள்” என்றார் சுனில் பாலிவால்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...