News
Loading...

பாகிஸ்தானை எப்படி தாக்க வேண்டும்?

பாகிஸ்தானை எப்படி தாக்க வேண்டும்?

‘‘போர் ஒன்றுதான் தீர்வு’’ என சமூக வலைத்தளங்களில் முழங்குகிறார்கள். ‘‘நம் ஒரு பல்லைப் பிடுங்கினால், எதிரியின் தாடையைப் பெயர்த்தெடுக்க வேண்டும்’’ என்கிறார் பாரதிய ஜனதா பொதுச் செயலாளர் ராம் மாதவ். மத்திய அமைச்சர் ஜிதேந்தர் சிங், ‘‘கோழைத்தனமாக இருக்க மாட்டோம். பதிலடி கொடுப்போம்’’ என கொக்கரிக்கிறார். டி.வி. செய்தியாளர்கள் கையில் மைக்குக்கு பதிலாக துப்பாக்கிகள் இருந்திருந்தால், இந்நேரம் இந்தியா - பாகிஸ்தான் போர் துவங்கி இரண்டு வாரங்கள் ஆகியிருக்கும். ‘‘பகை முழக்கம் வேண்டாம், அமைதி’’ என யாராவது சொன்னால், அவரை தேசத் துரோகி ஆக்கிவிடுவார்கள் போலிருக்கிறது. 

ஏற்கனவே இரண்டு முழுமையான போர்கள், இரண்டு சின்ன யுத்தங்கள்... இத்தனைக்குப் பிறகும் மாறாத நிலைமையை இன்னொரு போர் மாற்றிவிடுமா என்ன? பிரதமர் மோடி இதைப் புரிந்துகொண்டு புத்திசாலித்தனமாகக் காய் நகர்த்துகிறார். காஷ்மீரில் இருக்கும் உரி ராணுவ முகாமை பாகிஸ்தானிலிருந்து அனுப்பப்பட்ட தீவிரவாதிகள் தாக்கி 19 ராணுவ வீரர்களைக் கொன்றது இந்தியாவையே கொந்தளிக்க வைத்தது. 

ஏற்கனவே காஷ்மீரில் நிலவும் பதற்றம்... 80 நாட்களுக்கும் மேலாகத் தொடரும் ஊரடங்கு நிலை... 80 பேருக்கும் மேற்பட்டவர்கள் இறக்க நேர்ந்த கலவரங்கள்... இதை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் உலக அளவில் கொண்டு செல்ல செய்யும் முயற்சிகள் என எல்லாமே சேர்ந்து கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தாக்குதல் நிகழ்ந்த சில மணி நேரங்களிலேயே போர் முழக்கம் எழுந்தது. பொதுவாக மீடியாவும் முன்னாள் ராணுவ அதிகாரிகளும் மட்டுமே இதைச் செய்வார்கள். இம்முறை சில அமைச்சர்களும் போர் முழக்கம் செய்தார்கள். 

எதிர்க்கட்சியான காங்கிரஸும் இதே குரலை எதிரொலித்தது. இடையில், முக்கியமான இரண்டு விஷயங்களைக் கவனிக்க வேண்டும்...

பாகிஸ்தானை எப்படி தாக்க வேண்டும்?

1) பா.ஜ.க.வும் காங்கிரஸும் போர் முழக்கம் செய்தாலும், பஞ்சாப் மாநிலத்தில் இந்த இரண்டு கட்சித் தலைவர்களுமே ‘போர் வேண்டாம்’ என்கிறார்கள். பஞ்சாப்பில் இந்தியா - பாகிஸ்தான் எல்லை 553 கிலோமீட்டர் நீளத்துக்கு இருக்கிறது. இந்த எல்லையில் 1871 கிராமங்கள் உள்ளன. எல்லையில் இருப்பவர்கள்தான் ஒரு போரின் வலியை உடனே உணர்வார்கள். ஒவ்வொரு போரிலும் மொத்தமாக எல்லாவற்றையும் இழந்துவிட்டு மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பித்த வேதனை அவர்களுக்கே தெரியும். 

2) Pew Research Centre என்ற அமைப்பு ஒரு கருத்துக்கணிப்பு நடத்தியது. அதில் 51 சதவீதம் பேர், ‘இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சு வார்த்தை நடத்தி பதற்றத்தைத் தணிக்க வேண்டும்’ என கருத்து சொல்லியிருக்கிறார்கள். போருக்கான ஆதரவு பொதுமக்கள் மத்தியில் குறைவாகவே இருக்கிறது.

இதையெல்லாம் உணர்ந்து பிரதமர் மோடி போர் குறித்து ரொம்பவே பக்குவத்தோடு பேசினார். அவர் பாகிஸ்தான் அரசுக்கு அறை கூவல் விடுக்கவில்லை. பாகிஸ்தான் மக்களுக்கு அவரது போர்ச்செய்தி வித்தியாசமானதாக இருந்தது. ‘‘இந்தியா உங்களோடு போர் செய்யத் தயாராக இருக்கிறது என பாகிஸ்தான் மக்களுக்குச் சொல்கிறேன். உங்களிடம் வலிமை இருந்தால், சண்டை போடுங்கள். வறுமை, கல்வியறிவின்மை, பச்சிளம் குழந்தைகள் மரணமடைவது போன்ற கொடுமைகளுக்கு எதிராக சண்டை போடுங்கள். யார் ஜெயிக்கிறார்கள் பார்க்கலாம்’’ என்றார். 

ஒரு போரோ, வலுவான உளவு அமைப்போ, ‘இன்னும் விழிப்போடு இருந்திருக்கலாம்’ என்கிற கண்காணிப்போ நிலைமையை மாற்றப் போவதில்லை. உரி தாக்குதலுக்கு முன்பாக இதுபோன்ற 19 தாக்குதல் முயற்சிகளை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்திருக்கிறது. ஆனால் அது வெளியில் தெரியாது. உலக வர்த்தக மையத் தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்கா தீவிரவாதத் தடுப்புக்கு எத்தனையோ கோடி டாலரைக் கொட்டியிருக்கிறது. ஆனாலும் அடுத்து நிகழ்ந்த பல தாக்குதல்களை அது தடுக்கவில்லை. 

வேரைப் பிடுங்காமல், கிளைகளை வெட்டிப் பயனில்லை. பேச்சுவார்த்தைகள் நடத்தி, நவாஸ் ஷெரிப் குடும்ப நிகழ்ச்சிக்கு திடீரென மோடி ஒரு நண்பராகச் சென்று பங்கேற்று... கடைசியில் எதுவுமே நடக்கவில்லை! மறைமுகப் போர் மட்டுமே பாகிஸ்தானை அடிபணியச் செய்யும். அதற்கு என்ன செய்ய வேண்டும்?

* எதிரிக்கு வேறு ஏதாவது வேலை கொடுத்தால், நம்மைப் பற்றிச் சிந்திக்க நேரம் இருக்காது. பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணங்களில் தீவிரவாதம் தலைவிரித்து ஆடியபோது, காஷ்மீரில் பிரச்னையே இல்லை. சுற்றுலா தழைத்தது; தேர்தல் நடந்தது. எல்லாம் சுமுகமாக இருந்தது. அங்கே அமைதியானதும், இங்கே எரிகிறது. 

பலுசிஸ்தானில் எழும் விடுதலைக் குரல் பற்றி மோடி தனது சுதந்திர தின உரையில் பேசினார். ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் பிரச்னை எழுந்தால், பாகிஸ்தான் ராணுவம் அங்கே பிஸியாகிவிடும். இந்திய எல்லையில் அவர்கள் படைகளைக் குவிக்க மாட்டார்கள். அங்கே பிரச்னையைப் பெரிதாக்க ‘இயன்றதை’ச் செய்ய வேண்டும்.

* பாகிஸ்தானில் ஆட்சியாளர்களை விட ராணுவத்துக்கே செல்வாக்கு அதிகம். பேச்சுவார்த்தையை அரசிடம் நடத்தினாலும், பாகிஸ்தான் மக்களோடு பேச வேண்டும். ‘தீவிரவாதம் ஒழிந்தால் எப்படிப்பட்ட வளர்ச்சி கிடைக்கும்’ என்பதை அவர்களை உணரச் செய்ய வேண்டும். அது ராணுவத்துக்கு எதிராக மக்களை அமைதியிழக்க வைக்கும். 

* சிந்து நதி ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வதாக மோடி அறிவித்திருப்பது நல்ல முடிவு. சிந்து மற்றும் பஞ்சாப்பின் ஐந்து நதிகளில் 80 சதவீத நீரை பாகிஸ்தானுக்கு வழங்கும் இந்த ஒப்பந்தம், பாகிஸ்தானின் தண்ணீர் பற்றிய கவலையை மறக்கச் செய்கிறது. ‘தண்ணீரையும் ரத்தத்தையும் ஒரே நேரத்தில் ஓடச் செய்ய முடியாது’ என்ற வாதத்தில் மோடி உறுதியாக இருக்க வேண்டும்.

* போர் கூக்குரல் ஒருபக்கம் இருந்தாலும், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே வர்த்தகம் கணிசமாக நடக்கிறது. கடந்த ஆண்டு இருநாட்டு வர்த்தகம், 17 ஆயிரம் கோடி ரூபாய். இதைத் தடுத்தாலும் துபாய் வழியாக இந்த வர்த்தகம் தொடரும். இன்னொரு பக்கம் கணிசமாக இந்திய வியாபாரிகளும் பாதிக்கப்படுவார்கள். ஆனால் சில சலுகைகளை இல்லாமல் செய்யலாம். தெற்காசிய நாடுகளுக்கு இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் நமக்கும் பாகிஸ்தானுக்கும் உள்ளது. 

இதை ரத்து செய்யலாம். பாகிஸ்தான் சிமென்ட் எந்த இறக்குமதி வரியும் இல்லாமல் இந்தியாவுக்குள் வந்து இறங்குகிறது. இதற்கு அதிகபட்ச வரி விதிக்கலாம். பாகிஸ்தானுக்கு இப்படிக் கிடைக்கும் வருமானம்தான் ஆயுதங்களாக மாறி தீவிரவாதிகள் கைக்கு வருகிறது என்பதை மறந்துவிடக்கூடாது.

* உலகமே பாகிஸ்தானை தீவிரவாத நாடாக அறிவிக்க வேண்டும் என்று கேட்கிற நாம், இன்னமும் ‘Most Favoured Nation’ என்ற பட்டியலில் வைத்திருக்கிறோம். 96ம் ஆண்டிலிருந்து இப்படி அந்தஸ்து தந்து, பல வரிச்சலுகைகளையும் முன்னுரிமைகளையும் வழங்கினாலும், இப்படி ஒரு அந்தஸ்தை நமக்கு வழங்க பாகிஸ்தான் எப்போதும் முன்வந்ததில்லை. இதை மாற்றினால், பாகிஸ்தான் தானாக மாறும்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.