News
Loading...

புத்தகத்தைப் பிரிக்காமலே படிக்கலாம்!

புத்தகத்தைப் பிரிக்காமலே படிக்கலாம்!

திறந்த புத்தகத்தை படிப்பதே பலருக்குப் பெரிய விஷயம். ஆனால் மூடி வைத்திருக்கும் புத்தகத்தைப் படிப்பதற்கு அண்மையில் மாசாசூசெட்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இதற்கென உருவாக்கிய இயந்திரத்தில் தாளில் ஒரு எழுத்தை அச்சிட்டு வைத்தபோது, அந்த இயந்திரம் ஒன்பது தாள்களில் உள்ள எழுத்துகளை சரியாகக் கண்டுபிடித்து ஆராய்ச்சியாளர்களுக்குத் தெம்பூட்டியிருக்கிறது. 

சரி, இதில் கைதட்ட என்ன ஆச்சரியம் இருக்கிறது? 
இது பயன்படும் துறையில்தான் ஆச்சரியமிருக்கிறது. இது பயன்படப்போவது நூலகத்தில்தான். ‘‘நியூயார்க் மெட்ரோபாலிடன் நூலகம்தான் இதில் எங்களைவிட அதிக ஆர்வம் காட்டி தொடர்ந்து ஆராய்ச்சியை முடுக்கியது. 

அவர்களின் நூலகத்தில் உள்ள தொன்மையான புத்தகங்களை யாரும் தொடாமல் இருக்க இந்தத் தொழில்நுட்பம் உதவும்’’ என்று நம்பிக்கையாகப் பேசுகிறார், எம்.ஐ.டி.யின் ஆராய்ச்சியாளரான பர்மாக் ஹெஸ்மத்.  

சிதைந்துபோகும் தன்மை கொண்ட பழங்கால கடிதங்கள், நூல்களிலுள்ள எழுத்துகளைக் கண்டுபிடிக்கும்படியான ஒரு அல்காரிதத்தை உருவாக்கலாம் என்று எண்ணியபோதும் அதன் உருவாக்கம் அவ்வளவு எளிமையாக இல்லை என்பதுதான் உண்மை. இதனை எளிமையாகப் புரிந்துகொள்ள இணையத்தில் ‘கேப்ட்சா’ எனப்படும் எந்திரனா, மனிதனா என்று அடிக்கடி செய்யப்படும் சோதனையை உதாரணமாகக் கூறலாம். 

இந்த ஆய்வில் தாளில் உள்ள எழுத்துகளைக் கண்டறிய டெராஹெர்ட்ஸ் கதிர்வீச்சு பயன்படுத்தப்படுகிறது. மின்காந்தக் கதிர்கள், சிற்றலைகள், அகச்சிவப்புக் கதிர்கள் உள்ளிட்டவற்றுக்கு இடைப்பட்ட வகையைச் சேர்ந்ததுதான் இந்த டெராஹெர்ட்ஸ் கதிர்களாகும். ஒலி அலைகள் மற்றும் எக்ஸ் கதிர்கள் போல பல்வேறு பரப்புகளில் ஊடுருவும் தன்மை கொண்டது இது.

இது பல்வேறு வேதிப்பொருட்களை ஈர்க்கும் தன்மை கொண்டிருப்பதால், வெவ்வேறு அலைநீளத்தில் வெவ்வேறு கோணங்களில் இதனைப் பாய்ச்சி அவற்றைக் கண்டறிய முடியும். இந்த பிளஸ் பாயின்ட்டே இந்த ஆராய்ச்சிகளுக்கு அடித்தளமாக உள்ளது. 

இதன் தன்மை வெற்றுத்தாள், மை என இரண்டையும் கண்டுபிடிக்கும் வலிமை கொண்டது என்பதால்தான், இந்த ஆராய்ச்சியில் டெராஹெர்ட்ஸ் கதிர்கள் பயன்படுத்தப்பட்டன. மேலும் மீயொலியைக் காட்டிலும் இந்த கதிர்கள் நல்ல துல்லியத்தன்மையைக் கொண்டிருக்கின்றன.

 இதனால் இயந்திரத்திலிருந்து வெளிப்படும் டெராஹெர்ட்ஸ் கதிர்கள் அல்காரிதத்தின்படி இயங்கி தாளில் ஊடுருவி சென்சாரை அடையும்போது எழுத்துகளை எளிதாகக் கண்டறிய முடிகிறது. இது தொடக்கநிலைதான். எனவே தொடர்ச்சியாக இதனை மேம்படுத்தும் பணியில் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

‘‘டிடெக்டர் மற்றும் சென்சார் இரண்டுக்கும் இடையில் பாயும் கதிர்களின் தன்மையை மேலும் திறன்கொண்டதாக்க முயற்சித்து வருகிறோம். அது வெற்றியடைந்தால் புத்தகத்தை திறக்காமலேயே அதனைப் பதிவு செய்து வைத்துவிட முடியும்’’ என்கிறார் பெர்க்லி பல்கலைக்கழக எலக்ட்ரிகல் துறை பேராசிரியர் லாரா வாலர். 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...