News
Loading...

கேரளாவின் குப்பைத் தொட்டியாக மாறிவரும் கோவை

கேரளாவின் குப்பைத் தொட்டியாக மாறிவரும் கோவை

அரிசி, பால், முட்டை, கறிவேப்பிலை, காய்கறி, மணல், மாடு...இவையெல்லாம் இங்கிருந்து அங்கே செல்பவை. இறைச்சிக் கழிவு, மருத்துவக்கழிவு, பாலித்தீன் குப்பை, செருப்புக்கழிவு... இவையெல்லாம் அங்கிருந்து இங்கே வருபவை. தமிழகத்துக்கும், கேரளாவுக்குமான பண்ட மாற்று முறை, இப்போதைக்கு இப்படித்தான் இருக்கிறது. நல்லவற்றைக் கொடுத்து, தீமையை வாங்கும் பாவத்தைச் செய்வது, வேறு யாருமில்லை...தமிழர்கள் தான்.

பணத்துக்காக எதையும் செய்யத்துணியும், 'அற்பமான' சில மனிதர்களால், தமிழகத்திலிருந்து ரேஷன் அரிசி, ஆற்று மணல் என எல்லாம் அத்துமீறி அங்கே செல்கின்றன. அதே பணத்துக்காக, அத்தனை அசிங்கங்களும் இங்கே கொண்டு வரப்படுகின்றன.

வாய்க்கால் தகராறு : தமிழக - கேரள மாநிலங்களுக்கு இடையே முல்லைப்பெரியாறு, பரம்பிக்குளம் - ஆழியாறு, சிறுவாணி என, நதிநீர் பங்கீடு பிரச்னைகள் நீண்ட காலமாக நிலவுகின்றன. 'கடலில் கலந்தாலும் கலக்கவிடுவோம்; தமிழகத்துக்குத் தர மாட்டோம்' என்கிற ரீதியில், தண்ணீர் விஷயத்தில் தமிழகத்தை கண்ணீர் விட வைக்கும் கேரளா தான், இப்போது கழிவுகளை மலை மலையாக இங்கே குவித்து வருகிறது. கேரளா மாநிலம், கோழிக்கோட்டில் இருந்து, கர்நாடகா மாநிலத்துக்கு பாலித்தீன் கழிவு கொண்டு செல்வதாக கணக்கு காட்டி விட்டு, கோவை, எட்டிமடை நீலிக்காடு தோட்டம் அருகே பல நுாறு டன் எடையுள்ள கழிவுகளை கொட்டியுள்ளது, சமீபத்திய சாட்சி. ஆனால், வழக்கத்தை விட, இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது; சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கொதித்துப் போயுள்ளனர்.பாலித்தீன் கழிவு மட்டுமின்றி, செருப்பு, பாட்டில், ரப்பர், மறு சுழற்சிக்கு பயன்படுத்த முடியாத கழிவுகள், மருத்துவமனை கழிவுகளும் குவிக்கப்பட்டுள்ளன. விவசாயம் கைவிடப்பட்ட நிலத்தைக் குத்தகைக்கு வாங்கி, அதை குப்பைக் கிடங்காக மாற்றியுள்ளனர்.

அக்கறையற்ற அரசாங்கம் : 'ஆற்றில் மணல் எடுக்க தடை, மலைகளை குடைந்து குவாரி அமைக்க தடை, தொழிற்சாலை கழிவு, மருத்துவமனை கழிவுகளை அவர்களே சுத்திகரித்துக் கொள்ள வேண்டும். கோழி, மாட்டிறைச்சிக்கழிவு மற்றும் மீன் கழிவுகளை திறந்தவெளியில் கொட்டக்கூடாது; வனத்திலும், திறந்தவெளி பரப்பிலும் பாலித்தீன் கழிவுகளை பயன்படுத்தக்கூடாது' என, ஏராளமான விதிமுறைகளை வகுத்துள்ளது கேரள அரசு.ஆனால், இங்கிருந்து செல்லும் அரிசி, மணல் போன்றவற்றையும், அங்கிருந்து வரும் கழிவுகளையும் தடுக்கவும் திராணியற்ற அரசாக தமிழக அரசு உள்ளது. அக்கறையற்ற அரசு, பணத்தாசை பிடித்த அதிகாரிகள், விழிப்புணர்வு இல்லாத விவசாயிகளால், தமிழகம் நஞ்சுக்காடாகி வருகிறது. பணத்துக்காக இந்த வாகனங்களுக்கு பல்லிளித்து பச்சைக்கொடி காட்டும் தமிழக அதிகாரிகள் தான், இந்த பாவத்தின் முதலிடம் பிடிப்பவர்கள். தமிழக - கேரள எல்லையில், பொள்ளாச்சி, கோவை சுற்றுப்பகுதிகளில் மானாவாரி விவசாய நிலத்தை குத்தகைக்கு பிடித்து, இடைத்தரகர்கள் மூலம், கேரள மாநில கழிவுகளை தமிழகத்தினுள் குவிக்கின்றனர். இந்த பிரச்னை, இன்றல்ல, நேற்றல்ல; பல ஆண்டுகளாக தொடர்கதையாக உள்ளது. இந்த கழிவுகள், காற்று, நிலத்தடி நீர் என எல்லாவற்றையும் பாதிப்பை ஏற்படுத்தி, கோவை மக்களுக்கு நோய்களை வாரி வழங்குகின்றன.

புதுச் சட்டம் தேவை : 'அண்டை மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கும், தமிழகம் வழியாக வேறு மாநிலத்தும் கழிவுகள் கொண்டு அனுமதியில்லை' என, தமிழக அரசு புதிதாக சட்டம் இயற்றுவது மட்டுமே இதற்கு நிரந்தரத் தீர்வாகும். இத்தகைய கழிவுகளை ஏற்றி வரும் வாகனங்களை, தமிழகத்திற்குள் அனுமதிக்கும் அதிகாரிகளை எவ்வித விசாரணையும் இன்றி, பணி இடை நீக்கம் செய்வது, உடனடியாகச் செய்ய வேண்டியது அவசியம். எல்லையோரத்திலுள்ள விவசாயிகள், குத்தகைக்கு நிலங்களை ஒப்படைக்கும் போது, என்ன மாதிரியான தொழில் செய்யப்போகிறார்கள் என்பதை அறிந்து, போலீஸ் மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தர வேண்டும். எல்லாரும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே, இந்த கழிவு கலாசாரத்துக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

சட்டப்பூர்வ நடவடிக்கை : ஹரிஹரன், கலெக்டர் தமிழக எல்லையிலுள்ள சோதனை சாவடிகளில், கேரளாவில் இருந்து வாகனங்களை முழுமையாக சோதனைக்கு உட்படுத்தி அனுமதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வாகனங்களில் கழிவுகள் இருப்பதை உறுதிபடுத்தினால், தமிழகத்தினுள் அனுமதிக்காமல், திருப்பி அனுப்ப வேண்டும். 'அதிகாரிகள் கண்காணிப்பையும் மீறி, கழிவு லாரிகள் தமிழகத்தினுள் வந்தால், லாரிகள் பறிமுதல் செய்து, கழிவுகள் கொண்டு வந்தவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தீவிர கண்காணிப்பு : ரம்யா பாரதி, எஸ்.பி.,விவசாய நிலத்தில் கழிவு கொட்டிய, 22 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு, கோர்ட் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. வாகனங்களில் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படும். குத்தகைதாரர், நில உரிமையாளர், கழிவு அனுப்பியவர்களிடம் விசாரணை நடக்கிறது. இனிமேல், கழிவுகள் கொண்டு வருவதை தடுக்க, சோதனை சாவடி உள்ள பகுதிகளிலும், மற்ற வழித்தடத்திலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது.

குண்டர் சட்டம் பாயுமா? : முரளி, முன்னாள் கவுன்சிலர், பொள்ளாச்சி நகராட்சி. மண் வளம், நிலத்தடி நீர் வளம் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு, அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை விடுவிக்கக்கூடாது. இக்குற்றங்களில் ஈடுபடுவோரை, மாநில நலனுக்கு குத்தகம் விளைவித்ததாக, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

புகார் வந்தால் நடவடிக்கை : முருகானந்தம், இணை கமிஷனர், கோவை சரக போக்குவரத்துத்துறை கேரளாவில் இருந்து மருத்துவக்கழிவு உள்ளிட்ட கழிவுகள் கொண்டு வரும் வாகனங்களை பறிமுதல் செய்து, பர்மிட் ரத்து செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. சோதனை சாவடி வழித்தடத்தை தவிர்த்து, குறுக்கு வழித்தடங்கள் ஆறு இடங்களில் உள்ளன. அந்த வழியாகவும் வாகன சோதனை நடத்தப்படுகிறது. அதிகாரிகள் கையூட்டு பெற்றுக்கொண்டு, வாகனங்களை சோதனை செய்யாமல் அனுமதிப்பதாக புகார் வந்தால், விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

திருப்பி அனுப்ப 'அட்வைஸ்' : அனீஷ், இணை கமிஷனர் (அமலாக்கம்), வணிகவரித்துறைசோதனை சாவடிகளில் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு அனுமதிக்கப்படுகிறது. கர்நாடகாவுக்கு பாலித்தீன் கழிவு கொண்டு செல்வதாக ஆவணங்கள் பதிவாகியுள்ளது. ஆனால், எட்டிமடை அருகே கொட்டியுள்ளனர். எனவே, வேறு மாநிலங்களுக்கு கழிவு பொருட்களை கொண்டு செல்வதாக வாகனங்கள் வந்தால், முழுமையாக சோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ஆவணங்களுக்கு முரணாகவும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் கழிவு இருந்தாலும் திருப்பி அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கழிவுகளில் பல விதம் : கேரளாவுக்கு கொண்டு செல்லும் கோழி, மாடு எது இறந்தாலும், தமிழகத்தில் ரோட்டோரத்தில் வீசி எறிவது வழக்கமாகி விட்டது. கேரளாவுக்கு இறைச்சிக்காக கோழி, மாடு ஏற்றிச்செல்லும் வாகனங்களிலேயே அவற்றின் கழிவைத் தமிழகத்துக்கு அனுப்பி வைக்கின்றனர். மாட்டிறைச்சி எலும்பு கழிவுகளை கூழாக்கி, உரம் தயாரிப்புக்கு என்ற பெயரில் தமிழகத்துக்கு அனுப்புகின்றனர். பொள்ளாச்சி அருகே, 2002ல், எலும்பு கழிவு கொட்டிய போது கையும் களவுமாக ஒரு கும்பல் பிடிபட்டது. பொள்ளாச்சி சி.கோபாலபுரம் கிராமத்தில், விவசாய நிலத்தை குத்தகைக்கு பிடித்து, கேரளாவிலுள்ள மருத்துவமனைகளில் இருந்து மனித உறுப்பு கழிவுகள் கொண்டு வந்து புதைக்கப்பட்ட சம்பவமும் அரங்கேறியுள்ளது. சமீப காலமாக, மருத்துவமனைக்கழிவு, பாலித்தீன் உள்ளிட்ட திடக்கழிவுகள், 'உரம்' என்ற பெயரிலும், மறுசுழற்சிக்கு என்ற பெயரிலும் எல்லை தாண்டி ஊடுருவுகின்றன. 

இது சாவடிகளின் ராவடி : அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து, தமிழகத்தில் கோவை அருகிலுள்ள மாங்கரை, ஆனைகட்டி, தோலம்பாளையம், வாளையார், வேலந்தாவளம், வீரப்பகவுண்டனுார், நடுப்புணி, ஜமீன்காளியாபுரம், கோபாலபுரம், கோவிந்தாபுரம், மீனாட்சிபுரம், செம்மணாம்பதி ஆகிய வழிகளிலும், திருப்பூர் மாவட்டத்தில் உடுமலையை அடுத்த மறையூர் வழியாகவும் வாகனங்கள் நுழைகின்றன. இதில், கோவிந்தாபுரம், மீனாட்சிபுரம், கோபாலபுரம், வாளையார், மறையூரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் (ஆர்.டி.ஓ.,), போலீஸ் மற்றும் வணிகவரி சோதனை சாவடிகள் உள்ளன. சோதனை சாவடிகள் இல்லாத ரோடுகளில், போலீசார் 'வசூல்' சோதனையில் மட்டும் ஈடுபடுகின்றனர். வாகனங்களிலுள்ள சரக்கு பற்றி கண்காணிப்பதில்லை. சோதனைச்சாவடிகளில் அதிகாரிகள் களமிறங்கி சோதனை செய்வதில்லை. வாகனத்தின் தன்மைக்கு ஏற்ப, கறாராக மாமூல் வசூலிப்பதில் மட்டும் கவனமாக செயல்படுகின்றனர். பல நேரங்களில், ஆவணங்களில் கிளீனர்களே 'சீல்' வைத்து டேபிளில் மாமூலை போட்டுச் செல்கின்றனர்.

பாதிப்பு தவிர்க்க முடியாது : சண்முகம், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்சோதனை சாவடிகளில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சோதனை செய்ய முடியாது. கழிவு கொட்டப்பட்ட இடத்தில் ஆய்வு செய்யப்பட்டு, மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு கழிவுகள் தேங்கும் போது, மண் தன்மையும், நிலத்தடி நீரும் பாதிக்கும்.மருந்துவ கழிவுகள் குறைவாகவும், பாலித்தீன் கழிவுகள் அதிகமாகவும் உள்ளது. வருவாய் துறை, போலீஸ், வணிகவரித்துறையினர் நடவடிக்கை எடுக்கும் போது, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஒத்துழைப்பு கொடுத்து வருகிறது.

அங்கே அப்படி, இங்கே இப்படி : இருபது ஆண்டுகளுக்கு முன், பொள்ளாச்சி அருகே தமிழக எல்லையான கோபாலபுரத்தில், கேரளாவை சேர்ந்தவர்கள் மாட்டிறைச்சி தொழிற்சாலை கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. கேரளாவில் மாட்டிறைச்சி தொழிற்சாலைக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், தமிழகத்தில் அமைக்க முனைப்பு காட்டினர். ஆனால், பல்வேறு போராட்டங்களின் விளைவாக, மாட்டிறைச்சி தொழிற்சாலை திட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அதை அங்கு அமைத்தால், தினமும் நுாற்றுக்கணக்கான மாடுகள் ஏற்றுமதி இறைச்சிக்காக கொல்லப்படும். அதனை சுத்தம் செய்யும் போது வெளியேறும் கழிவுகளால், மண் மற்றும் நிலத்தடிநீரின் தன்மை பாதிக்கும் என்பதால், கேரளாவில் அத்தொழிற்சாலைக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால்,தமிழகத்தில் தாராள அனுமதி கொடுக்கப்பட்டாலும், மக்கள் போராட்டத்தால் திட்டம் கைவிடப்பட்டது.

சட்டம் தேவை : ஈஸ்வரன், ம.தி.மு.க., இளைஞரணி செயலர் கேரளாவில் இருந்து, 20 ஆண்டுகளாக, மருத்துவமனை கழிவு, கோழி, மாட்டிறைச்சி கழிவு கள், மற்றும் பாலித்தீன் கழிவுகள், கோவை மாவட்டத்தில் தமிழக எல்லையோர கிராமங்களில் கொட்டி வருகின்றனர். இங்கிருந்து கேரளாவுக்கு அனுப்பப்பட்ட காய்கறியில் ரசாயன உரம், பூச்சிக்கொல்லி பயன்பாடு அதிகமாக இருப்பதாக கூறி திருப்பி அனுப்பினர். ஆனால், அங்கிருந்து மனசாட்சியே இல்லாமல், கழிவுகளை தமிழகத்துக்கு அனுப்புகின்றனர். அண்டை மாநிலத்தில் இருந்து, தமிழகத்தினுள் கழிவுகள் எந்த ரூபத்திலும் அனுமதிக்கக்கூடாது. அதற்கான சட்டம் கொண்டு வர வேண்டும். எல்லையிலுள்ள சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.

சோதனைச் சாவடிக்கு சோதனை பரமசிவம், பாசன சபை தலைவர், பொள்ளாச்சி கேரளா மருத்துவமனையில் மனித உறுப்பு கழிவுகள் ரத்தம் சொட்டச்சொட்ட, சி.கோபால புரம் கிராமத்தில், மானாவாரி பூமியில் நான்கு ஆண்டுக்கு முன் புதைக்கப்பட்டது. கிராம மக்கள் அதனை கண்டுபிடித்து, கழிவு கொண்டு வந்த வாகனத்தை சிறை பிடித்து, போலீசில் ஒப்படைத்தோம். இதுபோன்ற கழிவுகளால், சுற்றுச்சூழல் பாதிக்கிறது. ஓரிரு ஆண்டுகளில் விவசாய உரமாக மாறிவிடும் எனக்கூறி, விவசாயிகளை ஏமாற்றி மருத்துவக்கழிவு, ரசாயன கழிவுகளை கொட்டுகின்றனர். கழிவுகள் கொண்டு வரும் வாகனங்களை அனுமதித்தால், சோதனை சாவடிகளில் பணியில் இருக்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நிலை உருவானால் தான் இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

காற்றும் நீரும் மாசு: காரணம் காசு மணிகண்டன், கோவை கரங்கள் அறக்கட்டளை தலைவர்கேரளாவுக்குள் செல்லும்போது அம்மாநில அதிகாரிகள் வாகனங்கள் மீது ஆய்வு செய்கின்றனர். ஆனால், தமிழக சோதனைச் சாவடிகளில் அதுபோன்ற கண்காணிப்பும், ஆய்வும் இல்லை. குறிப்பாக, சோதனை சாவடிகளில் காசை வாங்கிக்கொண்டு சோதனையே செய்வதில்லை. நம் மாநில குப்பையால், ஏற்கனவே நிலம், நீர் மாசுபட்டுள்ளது. இந்நிலையில், கேரளா மாநில ரசாயன கழிவு, மருத்துவக்கழிவால் சுற்றுச்சூழலும், நிலத்தடி நீர் மட்டமும் பாதிக்கிறது. மண் தன்மையும் மாறி விடுகிறது. அண்டை மாநிலத்தில் இருந்து, தமிழகத்தினுள் கழிவுகள் கொண்டு வருவதை தடுக்க அனைத்துத்துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.