News
Loading...

குட்டிச்சுவர் சிந்தனைகள்

குட்டிச்சுவர் சிந்தனைகள்

அக்னிச்சட்டி எடுத்தும், ஆறிப் போன மண் சோறு தின்றும், ஆறடி அகலமா அலகு குத்தியும் அவனவன் ‘அம்மா’ மீது அன்பைக் காட்டுனா, கவிஞர் சிநேகிதன் (பெயர் நீங்கள் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு மாற்றப்பட்டுள்ளது) ‘அம்மா என்னாச்சும்மா உங்களுக்கு, நீங்க வேணும்மா எங்களுக்கு’ன்னு நோகாம நோம்பு கொண்டாடியிருக்காரு. அம்மாவுக்காக பாட அவரு இருக்காரு, ஆனா முக்கா சம்பளத்தையும் முழு போனஸையும் தீபாவளி கொண்டாட குடும்பத்துக்கு கொடுத்துட்டு, இப்ப முண்டா பனியனோட ‘ஹேப்பி தீபாவளி’ சொன்னபடி ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்கும் அப்பாவுக்கும் யார் கவிதை சொல்லுவா? நாமதானே சொல்லியாகணும்.

அப்பா, என்னப்பா ஆச்சு உங்களுக்கு?
நல்லாதானப்பா இருந்த போன பொங்கலுக்கு...
கண்ணுறங்க நேரமின்றி கணப்பொழுதும் உழைச்சீங்க,
அரை லிட்டர் தண்ணில அரை மணி நேரம் குளிச்சீங்க
கரன்ட் பில் எகிறும்னு லைட்டெல்லாம் அணைச்சீங்க,
ஈரோடு மகேஷ் காமெடிக்குக்கூட கலகலன்னு சிரிச்சீங்க,

அப்பா, என்னப்பா ஆச்சு உங்களுக்கு?
நல்லாதானப்பா இருந்தீங்க போன பொங்கலுக்கு...
அம்மா புடவை விலை கேட்டு நெஞ்சை பிடிச்சீங்க
அக்காவுக்கு சுடிதார் வாங்க ஆல் டிகிரில முழிச்சீங்க 
மொத்த பில்லை பார்த்து வாயை பொளந்தீங்க 
உங்க கண்ணீர்லயே நீங்க செத்த மீனா  மிதந்தீங்க 

அப்பா, என்னப்பா ஆச்சு உங்களுக்கு?
நீங்க வேணும்பா எங்களுக்கு...
நீங்க போட்ட டவுசரெல்லாம் ஓட்ட டவுசராச்சு
பொங்கல் புது வேட்டி கிச்சன் கரித்துணியாச்சு
தம்பிக்கு பட்டாசு செலவு பல்லாயிரம் ரொக்கமாச்சு
உங்களுக்கு கடைசில கைலியும் துண்டும்தான் மிச்சமாச்சு

அப்பா, என்னப்பா ஆச்சு உங்களுக்கு?
நீங்க வேணும்பா எங்களுக்கு...
அம்மா எது சொன்னாலும் ஆமா சொல்வீங்களே
தீபாவளி செலவைப் பார்த்து கோமாவுக்கு போனீங்களே
பலகாரம் செஞ்சிருக்கோம் பணியாரம் செஞ்சிருக்கோம்
கடிகாரம் சுத்துதப்பா கட்டில்ல இருந்து எழுந்து வாங்கப்பா

அப்பா, என்னப்பா ஆச்சு உங்களுக்கு?
புதுப் படத்துக்கு போகணும் டைமாச்சுப்பா எங்களுக்கு...
நீங்க எழுந்து வருவீங்கன்னு வாசலையே பாத்திருக்கோம்
ஹேப்பி தீபாவளி சொல்ல லைன்ல காத்திருக்கோம்
அடுத்த பண்டிகைக்கு புது சட்டை துணி எடுத்துக்குவோம்
போட்டிருக்கிறத கொடுங்க வண்டி துடைக்க வச்சுக்குவோம்

அப்பா, என்னப்பா ஆச்சு உங்களுக்கு?
நீங்க வேணும்பா எங்களுக்கு...
அப்பல்லோ ஃபர்ஸ்ட் ப்ளோர்ல அமைச்சர்களா இருக்காங்க
அப்பல்லோ செகண்ட் ப்ளோர்ல அம்மாவே இருக்காங்க
ஹாஸ்பிடல் இங்க இருந்து ரொம்பவும் தூரமில்லப்பா
ஆனா இன்னைக்கு கூட்டிப் போக யாருக்கும் டயமில்லப்பா

அப்பா, என்னப்பா ஆச்சு உங்களுக்கு?
நல்லாதானப்பா இருந்தீங்க போன பொங்கலுக்கு..
புது பனியன் ஜட்டி இருக்கு குளிச்சுட்டு போட்டுக்குங்க
உங்க போனஸ் பணத்துல 10% எடுத்துக்குங்க
டாஸ்மாக் சேல்சுக்கு டார்கெட்டெல்லாம் இருக்காம்பா
தொட்டுக்கொள்ள சைடுடிஷ் அம்மா சுட்ட முறுக்காம்பா 
ஒரு கட்டிங் போட்டுட்டுவந்து பட்டிமன்றம் பாருங்கப்பா
உன்னை விட்டா எங்களுக்கு ஏ.டி.எம் மெஷின் யாருப்பா
அப்பா, என்னப்பா ஆச்சு உங்களுக்கு?
புதுப் படத்துக்குப் போகணும் டைமாச்சுப்பா எங்களுக்கு...

‘கடவுள் இருக்கு’ன்னு சொல்றவனை நம்பலாம்; ‘கடவுள் இல்லை’ன்னு சொல்றவனை நம்பலாம்; ஆனா ‘நான்தான் கடவுள்’னு சொல்றான் பாருங்க... அவனுங்களை நம்பக்கூடாதுன்னு உலக நாயகன்  படத்துல அருமையான டயலாக் ஒண்ணு வரும். மிக மிக சத்தியமான அந்த வார்த்தைகள் அடிக்கடி நிரூபிக்கப்பட்டு வருகின்றன. வீட்டுல இருக்கிற எல்லோருக்கும் ஆளுக்கொரு மெயின் கதவு சாவி இருக்கிற மாதிரி, அர்ச்சனை பண்றவங்களில் ஆரம்பிச்சு அல்லேலூயா சொல்றவங்க வரைக்கும் ஆளுக்கொரு டிவி வச்சிருக்காங்க. இந்த மாதிரி பொழுதுக்கும் புல்லரிக்க வைக்கிற சேனல்களை பார்க்கிறப்ப, பொறுக்க முடியாம புத்தி கூட கோணல் மாணலாகிடுது. 

பிறந்ததில் இருந்தே நடக்க முடியாம இருக்கிற ஒருத்தர, அஞ்சே நிமிஷம் ஜெபம் செஞ்சு நடக்க வைக்கிறார் ஒரு சாமியார்; அந்த வீடியோவைப் பார்த்தா, பிறந்ததில் இருந்தே சிரிக்காம இருக்கிற ஒருத்தர் கூட சிரிச்சுடுவாரு. கால் நூற்றாண்டா கண் தெரியாம வாழ்ந்த ஒருத்தருக்கு, ஜெபம் பண்றேன்னு ‘தலையில தண்ணியோட கீழ விழுந்த பழைய பித்தளை பாத்திரத்துக்கு அதக்கு எடுக்கிற மாதிரி’ சுத்தி வர நாலு தட்டு தட்டி விடுறாரு ஒரு சாமியாரு. உடனே சம்பந்தப்பட்ட நோயாளிக்கு கண் பார்வை கிடைச்சிடுது. 

இதையே நீங்க குற்றால அருவி முன்னால நின்னு சுத்தியலால தட்டி தட்டி ஜெபம் பண்ணுனா தண்ணிக்கு பதிலா பெட்ரோலா கொட்டாது?  நான் கேட்கிறதெல்லாம், காது கேட்காதவங்களுக்கு காது கேட்க வைக்கிறாங்க, ஓகே!  இப்ப கண்ணு இல்லாதவனுக்கு கண்ணு கிடைக்க வைக்கிறாங்க, சரி!  கை இல்லாதவர்களுக்கு கை கிடைக்க வைக்கிறாங்க, அட... அதுவும் பரவாயில்ல! 

தமிழ்நாட்டுல நாப்பது லட்சம் பேருக்கு மேல கல்யாணம் பண்ண பொண்ணு கிடைக்காம இருக்கான், அவனுக்கு கல்யாணம் பண்ணி குழந்தை குட்டி பெத்து கும்மாளமா வாழ, ஜெபம் பண்ணி பொண்ணு கிடைக்க செய்யுங்க பார்ப்போம்! யாகம் செஞ்சு குணமாக்குறேன், பூஜை செஞ்சு குணமாக்குறேன், ஜெபக் கூட்டங்கள்ல குணமாக்குறேன்னு புரூடா விடுறவங்கள, அப்பல்லோவுக்குள்ள விடணும். அப்புறம் இவங்க பொய் பித்தலாட்டம் தெரிஞ்சு, அரசே புழல்ல விட்டுடும். 

ஒரு மாநிலத்தின் முதலமைச்சரின் உடல்நிலை பற்றி நாலு பேரு விவாதம் செஞ்சாகூட ‘வதந்தி பரப்புறாங்க’னு கைது பண்றாங்க. அதுவும் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி கருத்து சுதந்திரத்தை மையப்படுத்தி கண்டிக்கிற அளவுக்கு கைது பண்றாங்க. சரி, அவர்கள் வதந்தி பரப்பியது உண்மையென்றால் கைது செய்யட்டும். இப்ப நாங்க கேட்கிறது, ‘புள்ளையார் பால் குடிக்கிறார்’னு பரப்பினாங்களே... கேஸ் டிரபுள் வர்ற அளவுக்கு பல வருஷமா வெறும் கொழுக்கட்டை மட்டும் சாப்பிட்டு வாழும் புள்ளையாரை அது எவ்வளவு புண்படுத்தியிருக்கும், அவங்களை கைது செய்யுங்க! 

ஒவ்வொரு ரயில்வே பிளாட்பாரத்துலயும், ‘சரியான டைமுக்கு வந்திரும், இன்னைக்கு ஏன் வரலன்னு தெரியலை’ன்னு நம்ம ரயில்வேயைப் பற்றி தெரியாம, பங்சுவாலிட்டியைப் பத்தி பேசி வதந்தி பரப்புறாங்களே... அவங்களைக் கைது செய்யுங்க. உலகத்துல எல்லாத்துக்கும் ஒரு விலையுண்டு, ஆனா ‘ஒண்ணு எடுத்தா ரெண்டு ஃப்ரீ’ன்னு புடவைக்கடை முதல் பிளாஸ்டிக் பொருள் விக்கிற கடை வரை வதந்தி பரப்புறாங்களே... அவங்களைக் கைது செய்யுங்க. 

சரி, அதெல்லாம்கூட வேணாம், ‘இந்தியாவுல தொழில்துறைல நம்ம மாநிலம் முதலிடத்துல இருக்கு, சுகாதாரம் சுத்தத்துல ரெண்டாவது இடத்துல இருக்கு, மக்கள் மகிழ்ச்சில ஆறாவது இடத்துல இருக்கு’ன்னு வதந்தி பரப்புறாங்களே அமைச்சர்கள்... அவர்களையாவது கைது செய்யுங்கப்பா.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.