News
Loading...

சிறகடிக்கும் சிக்கிம்... டல் அடிக்கும் டெல்லி! - எதில் தெரியுமா?

சிறகடிக்கும் சிக்கிம்... டல் அடிக்கும் டெல்லி! - எதில் தெரியுமா?

இந்தியாவில், சிக்கிம் மாநிலம்தான் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு உகந்த மாநிலமாக இருக்கிறது என்கிறது சி.எஸ்.ஐ.எஸ் (Centre for Strategic and International Studies) என்ற அமெரிக்க ஆய்வுசார் நிறுவனம் மற்றும் நாதன் குழுமமும் இணைந்து நடத்திய ஆய்வின் முடிவு.

டெல்லி, சென்னை, மும்பை போன்ற மெட்ரோ நகரங்களில்தான் பெண்கள் அதிகம் அளவில் வேலைக்கு செல்கிறார்கள். முக்கியமாக நான்கு காரணிகள் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் மதிப்பெண் கொடுத்து இருக்கிறது.

 தொழிற்சாலை, ஐ.டி நிறுவங்கள், சில்லறை வர்த்தகம் என பல தரப்பட்ட வேலைகளுக்குச் செல்லும் பெண்களுக்கு வேலை நேரம்.

 மொத்த தொழிலாளர்களில் பெண் தொழிலாளர்களின் சதவிகிதம்.

 நீதி அமைப்புகளின் செயல்பாடுகள்.

 பெண் தொழிலாளர்களுக்கு இருக்கும் சலுகைகள் மற்றும் பெண் தொழில்முனைவோருக்கான தொழில்முறை கொள்கைப் படிநிலைகள்.

மேற்சொன்ன நான்கு கோணங்களில், இந்தியாவில் உள்ள மாநிலங்களை அளந்து, மதிப்பெண்கள் வழங்கி இருக்கிறது அமெரிக்க ஆய்வு நிறுவனம். அதன்படி, அதிகமாக 40 புள்ளிகள் பெற்று, முதல் இடம் வகிப்பது சிக்கம் மாநிலம்.

அந்த மாநிலத்துக்கு அடுத்த படியாக, வேலைக்கு செல்லும் பெண்களுக்கான உகந்த மாநிலமாக தெலுங்கானா 28.5 புள்ளிகளைப் பெறுகிறது. அடுத்தடுத்த இடங்களில் புதுச்சேரி, கர்நாடகா, ஹிமாச்சல பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், கேரளா, மகாராஸ்டிரா மாநிலங்கள் இருக்கின்றன. இதில் 21.1 புள்ளிகள் பெற்று எட்டாவது இடம் பெற்று இருக்கிறது தமிழகம். இதன்மூலம் மேற்சொன்ன நான்கு கோணங்கள் தமிழகத்தில் எந்த அளவில் இருக்கிறது என்பது தெளிவாகிறது.  மேலும் நாட்டின் தலைநகர் டெல்லியில் வேலைக்கு செல்லும் பெண்களின் நிலை ரொம்ப மோசமாக இருக்கிறது எனக் காட்டுகிறது இந்த ஆய்வு.

டெல்லிக்கு வெறும் 8.5 புள்ளிகள்தான் அந்த ஆய்வு அறிக்கை கொடுக்கிறது. நாட்டின் தலைநகரில் வேலைக்கு செல்லும் பெண்களின் நிலை இவ்வளவு மோசமாக இருப்பது தேசத்தின் அவமானம்.

உலக அளவில் ஒப்பிடும்போது இந்தியாவில்தான் பெண் தொழிலாளர்கள் குறைவாக இருக்கிறார்கள். அதாவது நாட்டின் வளர்ச்சியில் பெண்களின் பங்கு 24 சதவிகிதம்தான்.

ஒன்பது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பெண்களை இரவு பணியில் அமர்த்துவது இல்லை. மேலும் 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பெண் தொழில்முனைவோருக்கு எந்தச் சலுகைகளுக்கும் கொடுப்பது இல்லை. அதேபோல், இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 16 சதவிகிதம்தான் பெண்களின் பங்கு உள்ளது என்பது நாட்டின் வளர்ச்சிக்கு பெரிய இழுக்கு.

சிக்கிம் மாநிலத்தைவிட சுயதொழில், தொழிற்சாலை, ஐ.டி நிறுவனங்கள், சில்லறை வர்த்தகம் என அதிக தொழில் வாய்ப்புகள் அதிகம் இருக்கும் மாநிலம் தமிழகம். ஆனால், வேலைக்கு செல்லும் பெண்களுக்கு சிறந்த மாநிலமாக இல்லை. இதற்கு பாலியல் வன்முறைகள் மற்றும் அதற்கான நீதிகள், சலுகைகள், பணி இடத்தில் பெண்களின் உரிமை மறுப்பு என பல காரணங்கள் இருக்கின்றன.

டெல்லியில் பணியிடத்தில் பாலியியல் தொல்லை என 36 வழக்குகள் பதிவாகியுள்ளன. நாட்டிலே வேலைக்கு செல்லும் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறை வழக்குகள் அதிகமாக பதிவான மாநிலமும் டெல்லியே. மற்ற மாநிலங்களைவிட  டெல்லியில் அதிகமான தொழில்வாய்ப்புகள் இருப்பதால் தவறுகள் அதிகமாக  நடக்கும் மாநிலம் டெல்லியாக இருக்கிறது. டெல்லி பெண்களுக்கு வாய்ப்புகளை மட்டும் உருவாக்கி கொடுக்கிறது. ஆனால், பாதுகாப்பைக் கொடுக்காமல் இருக்கிறது.

பொதுவாக, குறைவான மற்றும் நடுத்தர வருமானம் அதிகம் உள்ள நாடுகளில் பொருளாதார வளர்ச்சியில் பெண்களுக்கு அதிக வேலைகள் உருவாக்க வழிசெய்வார்கள். ஆனால் சமீபத்திய தேசிய மாதிரி ஆய்வின், இந்தியாவில் உழைக்கும் பெண்கள் எண்ணிக்கை விகிதம் 2004-05, 2011-12 வரையில் இருந்த எண்ணிக்கை, கிட்டத்தட்ட ஏழு சதவிகிதம் சரிந்து, தற்போது 22.5 சதவிகிதம் என இருக்கிறது.

சர்வதேச  மனித வள அமைப்புகள் மற்றும் தன்னார்வ ஆராய்ச்சி நிறுவனங்கள், உலகில் 2,000 நிறுவனங்களை ஆய்வுசெய்து வெளியிட்ட அறிக்கையில், பெண்கள் தலைமைகளின் எண்ணிக்கை மோசமாக இருக்கும் 48 நாடுகளின் பெயர்களில் இந்தியாவும் இடம் பெற்றிருக்கிறது.

பெண்களைப் போற்றுவதாகச் சொல்லும் மத்திய அரசு என்ன சொல்லப் போகிறது?

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...