News
Loading...

வேற்று கிரக உயிர்கள் உள்ளனவா?

வேற்று கிரக உயிர்கள் உள்ளனவா?

வேற்று கிரகங்களில் உயிரினங்கள் இருக்கின்றனவா என்ற கேள்விக்கு, சமீபத்தில், 'அஸ்ட்ரோபயாலஜி' இதழில் வெளியிடப்பட்ட கட்டுரை ஒன்று, புதிய கோணத்தில் விளக்கம் தருகிறது. உயிரினங்கள் வேறு கிரகங்களில் உருவாக ஆரம்பித்தபோதே, மிதமிஞ்சிய வெப்பம் அல்லது குளிரால் அழிந்து போயிருக்கலாம் என்று அக்கட்டுரையில் ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழக விஞ்ஞானிகள் விவரித்துள்ளனர்.

ஒரு கிரகத்தில் உயிரினங்கள் உருவாகி, நீடித்து வாழ, சூரியன் போன்ற நட்சத்திரத்திலிருந்து குறிப்பிட்ட தொலைவில் அந்த கிரகம் சுற்றும் பாதை இருக்க வேண்டும் என்பது விண்வெளி விஞ்ஞானிகள் வகுத்துள்ள ஒரு விதி. இன்று பல ஆயிரம் நட்சத்திர கூட்டங்களில், 'உயிர்கள் வசிக்கத்தக்க' கிரகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

''இவற்றில் எண்ணற்ற உயிரினங்கள் இருக்க வேண்டும் என்று பல விஞ்ஞானிகள் நினைக்கின்றனர். ஆனால், உயிர்கள் உருவாகும் ஆரம்ப கட்டம் எளிதில் அழியும் தன்மையுடையதாகவே இருக்கும். அவை தங்களைச் சுற்றியுள்ள சூழலை கிரகித்து, வெளியேற்றும் சுழற்சியை வேகமாக நிகழ்த்தி, அந்தச் சூழலையே தங்களுக்கு ஏற்றதாக நிலைப்படுத்தியாக வேண்டும். ஆனால், அது சாத்தியமாகாமல், உயிர்கள் ஆரம்ப கட்டத்திலேயே அழிந்திருக்க வேண்டும்,'' என்கிறார் கட்டுரையை சமர்ப்பித்த ஆய்வுக்குழுவின் தலைவரான டாக்டர்.ஆதித்யா சோப்ரா. 

வேற்று கிரகங்களில் உயிர்கள் கண்டுபிடிக்கப்பட்டால், அவை பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவற்றின் உடல்களாகவே இருக்கும் என்கிறார் சோப்ரா. அதுவும்கூட, டைனோசர்கள் அல்லது மனிதர்களைப் போன்ற பல செல் உயிரிகளாக இல்லாமல், நுண்ணுயிரிகளின் உடல்களாகத்தான் இருக்கும் என்கிறார் அவர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...