News
Loading...

தொடரும் மத்திய அரசின் துரோகம்

தொடரும் மத்திய அரசின் துரோகம்

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசும் கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் அரசும் கைகோத்து, உச்ச நீதிமன்றம் அமைக்கச் சொன்ன காவிரி மேலாண்மை வாரியத்துக்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டன. தமிழகத்துக்கு சட்டரீதியாகக் கிடைக்கவேண்டிய உரிமையிலும் மண் அள்ளிப்போட்டுவிட்டது மத்திய அரசு. கர்நாடக காங்கிரஸ் அரசின் அடாவடித்தனத்தாலும் முதுகில் குத்தும் மத்திய பாரதிய ஜனதா அரசின் துரோகத்தாலும் ஏற்கெனவே துவண்டுபோன தமிழக விவசாயிகளின் இதயத்தில் இடியை இறக்கியிருக்கிறது இன்னொரு விவகாரம்.

கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யா, ``காவிரி ஆற்றின் குறுக்கே 5,700 கோடி ரூபாய் செலவில் மேக்கேதாட்டூவில் புதிய அணை கட்டுவதற்காக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுவிட்டது. இந்தத் திட்டம் குறித்து கர்நாடக சட்டமன்றம் ஒப்புதல் அளித்த பிறகு, உரிய அங்கீகாரம் பெறப்பட்டு புதிய அணை கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்படும்'' என்று கூறியிருக்கிறார். பெங்களூரு நகரின் குடிநீர் தேவைக்காகவே மேக்கேதாட்டூ அணை கட்டப்பட இருப்பதாக, கர்நாடக அரசியல்வாதிகள் முன்னர் சொல்லிவந்தார்கள். ஆனால், இப்போது மேக்கேதாட்டூ அணையில் 400 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டமும் உள்ளது என சித்தராமைய்யா உறுதிப்படுத்தி இருக்கிறார். 93 டி.எம்.சி கொள்ளளவு உள்ள மேட்டூர் அணையில் செயல்படுத்தப்படும் இரு மின்திட்டங்களிலும் 250 மெகாவாட் மின்சாரம் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. ஆனால், மேக்கேதாட்டூ அணையில் 400 மெகாவாட் திறன்கொண்ட மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட உள்ளது என்றால், அந்த அணையின் கொள்ளளவு எவ்வளவு அதிகமாக இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

ஏற்கெனவே காவிரி மேலாண்மை வாரிய விஷயத்தில் கர்நாடக அரசுக்குச் சாதகமாக நடந்துவரும் மத்திய அரசு, மேக்கேதாட்டூ அணை விவகாரத்தில் மட்டும் நியாயமாக நடந்துகொள்ளும் என எதிர்பார்க்க முடியாது.

ஒரு பிரதமர் என்பவர், அனைத்து மாநில மக்களுக்கும் நியாயமாக நடந்துகொள்ளவேண்டியவர். ஆனால், கர்நாடக ஓட்டு வங்கி அரசியலை மட்டும் மனதில்கொண்டு, இப்படி பாரபட்சமாக நடந்துகொள்வது நியாயமே இல்லை. தமிழ்நாட்டில் இருந்து தன்னைப் பார்க்க வந்த 49 எம்.பி-க்களை பிரதமர் அலுவலக அதிகாரிகள் நடத்திய விதமே மோடி அரசின் சந்தர்ப்பவாதத்துக்குச் சாட்சி. அதிலும் பிரதமரைப் பார்க்க வந்த அ.தி.மு.க எம்.பி-க்களில் ஒருவர் நாடாளுமன்றத் துணை சபாநாயகரும்கூட. தேசியக் கட்சிகள், தேசிய ஒருமைப்பாட்டைக் குலைக்கக் கூடாது.

ஒரு சாமானிய இந்தியக் குடிமகன் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டாலே `தனக்கு நீதி கிடைக்கும்; ஆறுதல் கிடைக்கும்' என்று அவன் நாடுவது உச்ச நீதிமன்றத்தைத்தான். ஆனால், ஒரு மாநிலத்தின் உரிமையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்த பிறகும் அநீதி இழைக்கும் இன்னொரு மாநிலத்தின் நிலைப்பாட்டை ஆதரித்து மத்திய அரசு அநீதியான நிலைப்பாட்டை எடுப்பது சந்தர்ப்பவாதத்தின் உச்சம். இதில் மேக்கேதாட்டூ அணை விவகாரமும் இணைந்துகொள்ளும்போது என்ன செய்யப்போகிறோம் நாம்?

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...