News
Loading...

புதிய முதல்வரை நியமனம் செய்யுங்கள்

புதிய முதல்வரை நியமனம் செய்யுங்கள்

“புதிய முதல்வரைத் தேர்வு செய்யாமல், முதல்வரின் பொறுப்புகளை மட்டும் மாற்றியது சட்டபடி தவறு”  என கவர்கனருக்கு அறிக்கை அளித்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார் மூத்த வழக்கறிஞர் தடா துரைசாமி. முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப் பட்டார்.  தமிழக அரசின் அனைத்து துறை அதிகாரிகளும் அப்போலோவில் குவிந்து, அரசு நிர்வாகம் முடங்கிய நிலையில் இருந்தது. இரண்டாவது வாரம் முதல்வர் உடல்நலம் குன்றியிருப்பதால், பொறுப்பு முதல்வரை நியமிக்க வேண்டும் என்று தி.மு.க வலியுறுத்தியது. தமிழக கவர்னருக்கு மத்திய அரசிடமிருந்து அழுத்தங்கள் வரவே, கவர்னர் மாளிகைக்கு, தலைமைச்செயலாளரை முதலில் அழைத்து ஆலோசனை நடத்தினார் கவர்னர் வித்யாசாகர் ராவ். அடுத்த சில மணி நேரங்களில் தமிழகத்தின் மூத்த அமைச்சர்களான ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோ ரையும் அழைத்து ஆலோசனை நடத்தினார். மறுபுறம் சுப்பிரமணியன் சுவாமி, ‘‘தமிழகத்தின் அரசு இயந்திரம் முடங்கிவிட்டது 356 பிரிவை மத்திய அரசு பயன்படுத்த வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார். மறுதினமே கவர்னர் மாளிகையில் இருந்து ஒரு அறிக்கை வெளியானது. அதில், ‘‘தமிழக முதல்வரின் ஆலோசனை அடிப்படையில் முதல்வர் வசம் இருந்த பொறுப்புகளை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூடுதலாகக் கவனிப்பார், மேலும் அமைச்சரவை கூட்டத்துக்கு அவரே தலைமை தாங்குவார்” என்று அறிக்கை வந்தது. இந்த அறிக்கை குறித்து தி.மு.க தலைவர் கருணாநிதியும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பினார். ‘‘மருத்துவமனையில் இருக்கும் ஜெயலலிதாவின் கையெழுத்து எப்படி பெறப் பட்டது?” என்று கேள்வியை அவர் எழுப்பினார்.

இந்த நிலையில் மூத்த வழக்கறிஞர் தடா துரைசாமி கவர்னரிடம் ஆறு பக்க அறிக்கை ஒன்றை அளித்துள்ளார். அந்த அறிக்கையில் சட்டவிதிகளை மீறி  முதல்வரின் துறைகளை மாற்றியுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளார். 

சட்ட அஸ்திரத்தை கவர்னருக்கு எதிராக வீசியிருக்கும் துரைசாமியிடம் இதுகுறித்து கேட்டபோது, “தமிழகத்தின் முதல்வர் வகித்துவந்த பொறுப்புகளை மற்றொரு அமைச்சரிடம் மாற்றி கொடுத்ததில் சட்டவிதிகள் மீறப்பட்டுள்ளன என்பதைத் தகுந்த சட்டவிதிகளின் ஆதாரங்களோடு நான் சுட்டிக்காட்டியுள்ளேன்.  இந்திய அரசியல் சட்டப்பிரிவு 167-வது பிரிவின்படி ஒரு மாநிலத்தின் கவர்னர், அந்த மாநிலத்தின் முதல்வரை மட்டுமே சந்திக்கலாம். மாறாக ஒரு அமைச்சரையோ, தலைமை செயலாளரையோ சந்திக்கக் கூடாது. ஆனால், கவர்னர் இவர்களைச் சந்தித்துள்ளார். அதேபோல், அமைச்சர் பன்னீர் செல்வத்திடம் முதல்வரிடமிருந்த துறைகளை ஒப்படைத்துள்ளார்கள். இதுவும் சட்டபடி செல்லாது. எம்.ஜி.ஆர் ஆட்சியில் நெடுஞ்செழிய னிடம் பொறுப்புகள் கொடுக்கப் பட்டதை ஒப்புக்கு சொல்கிறார்கள். ஆனால் அப்போது, அமைச்சர்க ளின் குழு தீர்மானம் நிறைவேற்றி அதை கவர்னருக்கு அனுப்பியதால்தான் நெடுஞ்செழியனிடம் பொறுப்புகள் வழங்கப்பட்டன.

உச்ச நீதிமன்றமும் அமைச்சர்களின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கலாம் என்றுதான் சொல்லியுள் ளார்கள். ஆனால் பன்னீர்செல்வத்திடம் துறையை ஒப்படைத்தபோது அமைச்சர்கள் கூடி தீர்மானம் நிறைவேற்றவில்லை. பன்னீர்செல்வத்திடம்  முதல்வரின் துறைகளை கூடுதல் பொறுப்பாக அளித்து தொடர்பாக கவர்னர் வெளியிட்ட அறிக்கையில், ‘முதல்வரின் ஆலோசனைப்படிதான் துறைகள் மாற்றப்பட்டன’ எனக் குறிப்பிட்டுள்ளார். இதுவும் தவறு. துறைகளை மாற்றும்போது முதல்வர் நேரடியாகச் சென்று சொல்லவேண்டும், அல்லது எழுத்து பூர்வமாக அவர் கையெழுத்திட்டு அளிக்கவேண்டும். அது இரண்டுமே  நடக்கவில்லை.

அதுமட்டுமல்ல முதல்வருக்கும், கவர்னருக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டுள்ளது. எந்த ஒரு நிலையிலும் மாநிலத்தின் கவர்னர், முதல்வரை மட்டுமே தொடர்புகொள்ள வேண்டும் என்று சட்டவிதி சொல்கிறது. ஆனால், கவர்னரோ முதல்வரைப் பார்க்க முடியாதநிலை உள்ளது. அப்படி இருக்கும்போது முதல்வர் அனுமதியோடு தான் இந்த உத்தரவு என்று சொல்லுவதே பொய். பன்னீர்செல்வத்துக்கு அமைச்சரவை கூட்டத்தை நடத்தும் அதிகாரம் கொடுத்திருப்பதும் தவறு. 

அரசு இயந்திரம் முற்றிலும் முடங்கியுள்ளது. அரசு நிலைகுறித்து கவர்னருக்குத் தெரிவிக்க வேண்டியது முதல்வரின் கடமை. இங்கு கவர்னரே முதல்வரை பார்க்க முடியவில்லை. சட்டப்பிரிவு 164-படி கவர்னர் திருப்திடையும் வரையில்தான் ஒருவர் முதல்வராகத் தொடர முடியும் என்று உள்ளது. ஆனால், இப்போது கவர்னர் முதல்வரைப் பார்க்கக்கூட முடியாத நிலையில் முதல்வர் குறித்து கவர்னருக்கு எப்படி திருப்தி வரும். அப்படி முதல்வரை கவர்னர் தொடர்புகொள்ள முடியாத அளவுக்கு சூழ்நிலை இருக்கும் பட்சத்தில், மாநில கவர்னர் ஆட்சி அமைப்பதற்கான சட்டம் 356-ஐ கூட பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளது.

இப்போது கவர்னர் செய்ய வேண்டிய வேலை என்னவென்றால், பெரும்பான்மையாக இருக்கும் கட்சியில் இருந்து ஒரு புதிய முதல்வரைத் தேர்ந்தெடுக்கவேண்டிய வேலைதான். கூடுதலாகப் பொறுப்பு கொடுத்ததும் தவறு, அது செல்லாது. ஒருவேளை ஜெயலலிதா சுயமாகக் கையெழுத்திட்டு, பன்னீர் செல்வத்திடம் பொறுப்பை ஒப்படைப்பதற்கு ஒப்புதல் கொடுத்திருந்தால் இந்தப் பிரச்னைக்கே இடம் இல்லை. ஆனால், அது நடக்கவில்லை என்பது தெரிகிறது. தமிழகத்தில் அரசு செயல்படாமல் ஒருபுறம் உள்ளது. கவர்னருக்கும், முதல்வருக்கும் தொடர்பு இல்லாமல் இருப்பதாலும் புதிய முதல்வரை நியமனம் செய்வது மட்டுமே சட்டவிதிகள்படி சரி என்பதைதான் நான் சுட்டி காட்டியுள்ளேன்” என்று தான் வீசிய அஸ்திரத்தை விவரித்து முடித்தார். மத்திய அரசு என்ன பதில் சொல்லப் போகிறது?!

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...