News
Loading...

பேய் அக்வாரியம்!

பேய் அக்வாரியம்!

*ஜப்பான் தலைநகரம் டோக்கியோவில் உள்ள சன்ஷைன் அக்வாரியம், பகல் நேரங்களில் குழந்தைகள் வந்து பார்வையிடுவதால் பிஸியாக இருக்கும். ஆனால் இரவில் மூடி வைப்பார்கள். இப்படி இரவு நேரங்களில் அக்வாரியத்தை வீணாக மூடிவைப்பதை விட  நாலு காசு பார்க்கத் திட்டமிட்டது அந்த நிறுவனம். 

விளைவு... Noroi no Mizugush (The Haunted Water Comb) என்ற பெயரில் இரவு திகில் மாளிகையை தனது அக்வாரியத்தில் உருவாக்கியது அந்த நிறுவனம். மீன்கள் நீந்தும் தண்ணீரிலேயே பேய்கள், கோர  உருவங்களை அலையவும் நீந்தவும் விட்டு ஒரு படு பயங்கர லுக்கைக் கொடுத்துவிட்டது. 

பேய் அக்வாரியம்!

இதனால் இரவிலும் ஜப்பானியர்கள் காசைக் கொடுத்து வந்து பார்த்து, பயத்தை அனுபவித்துச் செல்கிறார்கள்.இப்போது சன்ஷைனுக்குப் போட்டியாக இருபதுக்கும் மேற்பட்ட பேய் அக்வாரியங்கள் உண்டாகிவிட்டனவாம்.

*இந்த ஆண்டு ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியில் புதிதாக சேர்க்கப்பட்ட சொற்களில் ‘ஐயோ’ (Aiyoh) என்ற தமிழ் வார்த்தையும் இடம் பிடித்துள்ளது. வியப்பு, பயம் மற்றும் வலி போன்றவற்றில் உபயோகப்படுத்தப்படும் உணர்ச்சியிலான தமிழிலேயே கூட உள்ளர்த்தமில்லா சொல் ‘ஐயோ’. இது ஆங்கில அகராதியில் இடம் பெற்றிருப்பதை ‘ஐயோடா’ என்றுதான் சொல்லவேண்டும்.

*குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியில் மனிதன் வந்திருந்தாலும் இதுவரை வால் இருந்ததில்லை. ஆனால் நாக்பூரைச் சேர்ந்த 18 வயது இளைஞனுக்குத்தான் இப்படி வால் முளைத்துள்ளது. தற்போது 18 சென்டி மீட்டர் அளவில் இருந்த வால், இவர் பிறக்கும்போது உடன் பிறந்ததல்ல. 14 வயதில் முளைக்க ஆரம்பித்து நான்கு ஆண்டுகளில் இந்த அளவுக்கு வளர்ந்து விட்டது. 

இதற்கு முன்னர் சிலருக்கு அரிதாக வால் இருந்தாலும்,  இப்படி வளர்ந்துகொண்டே போனதில்லை. அந்த வகையில் இது அரிதான பிரச்னை என்றுதான் சொல்ல வேண்டும். சிறிதாக முளைக்க ஆரம்பித்த வாலை ஆடைகளுக்குள் மறைத்து வைத்தாலும், நாளாக நாளாக அது பெரிதாக ஆரம்பித்ததால் மருத்துவமனையில் சேர்த்து அறுவை சிகிச்சை மூலம் அகற்றி விட்டனர்.

இதுவரை உலகில் 23 பேருக்கு அறுவை சிகிச்சை மூலம் வால் அகற்றப்பட்டுள்ளது. அதில் மிக நீளமான வால் இதுதான். இதற்கு முன்பு 17 செ.மீ அளவில் ஒருவருக்கு வால் அகற்றப்பட்டுள்ளது.

*நீங்கள் கோபமாக இருக்கும்போதோ  அல்லது மன வருத்தத்தோடு இருக்கும்போதோ, வழக்கமாகச் செய்யும் கடுமையான உடற்பயிற்சியைச் செய்தால், அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் மாரடைப்பு ஏற்படும் அபாயத்தின்  அளவு அதிகரிக்கும் என்று  சர்வதேச சுகாதார ஆய்வு கூறியுள்ளது. 52 நாடுகளில் 12 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த மாரடைப்பு பற்றி தெரிய வந்ததாக  அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் ஜர்னலில்  செய்தி வெளியாகியுள்ளது.

*இதுவரை ஆன்லைன் மூலம் ஆடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள், மின்னணுப்பொருட்கள், உணவுப் பொருட்கள் வரை விற்பனை  செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் ஜெர்மனியில் சமீபத்தில் ஆன்லைனில் வெளியான ஒரு விளம்பரம் எல்லோரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. 

அவ்விளம்பரத்தில் ‘பிறந்து 40 நாட்களே ஆன  பச்சிளம் பெண் குழந்தை விற்பனைக்கு’ என குறிப்பிடப்பட்டிருந்தது. மரியம் என்ற  அக்குழந்தை படுக்கையில் அயர்ந்து தூங்கும் போட்டோவும் வெளியிடப்பட்டிருந்தது. 

ஜெர்மனியின் வடக்கு ரினே-வெஸ்ட் பாலியா மாகாணத்தில் இருந்து அவ்விளம்பரம் வெளியாகியிருந்தது. இது குறித்து விசாரித்த போலீசாரின் நடவடிக்கையால்,  பிரசுரிக்கப்பட்ட 30 நிமிடங்களில் அந்த விளம்பரம் நீக்கப்பட்டது. தற்போது இந்த விற்பனையாளர் யார் என்று ஜெர்மன்  போலீசார் தேடி  வருகின்றனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.