News
Loading...

சென்னை மாநகராட்சி... செயல்படாத ஆட்சி!

சென்னை மாநகராட்சி... செயல்படாத ஆட்சி!

2011-ல் உள்ளாட்சித் தேர்தல் வந்தபோது, சென்னை மாநகராட்சியின் மேயர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்தது. சட்டமன்ற தேர்தலில் அடைந்த தோல்வியால் துவண்டு போயிருந்த சைதை துரைசாமியை வேட்பாளராக அறிவித்தார் ஜெயலலிதா. தேர்தலில் வெற்றிபெற்று மேயர் நாற்காலியில் அமர்ந்த சைதை துரைசாமி, பல திட்டங்களை அறிவித்தார். அந்த அறிவிப்புகள், ஐந்து ஆண்டுகள் கடந்த பிறகும், வெறும் அறிவிப்புகளாகவே உள்ளன.

முதல் ஆண்டிலேயே மூடுவிழா!

துரைசாமி மேயர் ஆனதும், ஒவ்வொரு வார்டிலும் குப்பை சேகரிக்கும் மையங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தலா 90 ஆயிரம் ரூபாய் செலவில் குப்பை சேகரிக்கும் மையங்கள் அமைக்கப்பட்டன. ‘குப்பையை அகற்றுவதற்கு மாறாக, குப்பையை மேயர் ஒளித்துவைக்கிறார்’ என விமர்சனம் எழுந்தது. முதல் ஆண்டிலேயே பல மையங்கள் மூடுவிழா கண்டன.

பாலமும்... பரிதாபமும்.!

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு ஏழு மேம்பாலங்கள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது.  தெற்கு உஸ் மான்- வடக்கு உஸ்மான் இணைப்பு பாலம், ஈகா தியேட்டர்-வள்ளுவர் கோட்டம் இடையே ஒருங்கிணைந்த  மேம்பாலம், மத்திய கைலாஷ் பாலம், கோட்டூர்புரம் சந்திப்பில் பாலம் என ஏழு பாலங்கள் என அறிவிக்கப்பட்டது. ஆனால், ஒரு பாலம் கூட கட்டப்படவில்லை. மேலும், தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்ட பாலங்கள்கூட முழுமையாக முடிக்கப்படவில்லை. 

24 சாலை அறிவிப்பு!

சென்னை நகரின் மையப்பகுதியில் இருக்கும் முக்கியமான 24 சாலைகள் விரைவில் அகலப்படுத்தப்படும் என்ற அறிவிப்பும் சென்னை மாநகராட்சியில் அறிவிக்கப்பட்டது. ராயப்பேட்டை ஹைரோடு, பெரம்பூர் பேரக்ஸ் ரோடு ஆகியவற்றை அகலப்படுத்தப் போவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை. அதேபோல, 60 முக்கியச் சாலைகளை அனைத்து வசதிகளுடன் உலகத் தரத்துக்கு மாற்றவும், 1,084 சாலைகளை, கான்கிரீட் சாலைகளாக மாற்றவும் திட்டங்கள் வகுக்கப்பட்டன. நீண்டகாலம் தாக்குப்பிடிக்கக்கூடிய பிளாஸ்டிக் சாலைகள் அமைக்கும் திட்டம் கொண்டுவரப்படும் என அறிவித்தனர். எல்லாமே கிடப்பில் உள்ளன. 

தோண்டப்படாத சுரங்கப்பாதை!

சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் மக்கள் சாலையைக் கடக்க வசதியாக சுரங்கப்பாதை கட்டப்படும் என அறிவித்தனர்.  கோடம்பாக்கம், வடபழனி, காமராஜர் சாலை ஆகியவற்றில் சுரங்கப்பாதை அமைக்கப்படும் என அறிவித்தனர். ஆனால், இவற்றில் எந்தப் பணியும் நடைபெறவில்லை. அதே போல, 142 சுடுகாடுகள், மின்மயானமாக மாற்றப்படும் என்ற அறிவிப்பும் நின்றுபோனது. 

நொச்சியும் இல்லை.. கொசுவும் போகல!

கொசு ஒழிப்புக்கு மாநகராட்சி முக்கியத்துவம் கொடுக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இயற்கை யிலேயே கொசுக்களை விரட்டும் ரசாயன குணம் கொண்ட நொச்சிச் செடிகளை சென்னை முழுவதும் நீர்நிலைகள், பூங்காக்கள், பள்ளிக்கூடங்கள், அரசு அலுவலகங்கள் போன்றவற்றில் உள்ள காலி இடங்களில் வளர்க்க மாநகராட்சி முடிவு செய்தது. பொதுமக்களுக்கு 5 லட்சம் நொச்சிச் செடிகள் இலவசமாக  வழங்கப்பட்டதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. கொசுக்களை ஒழிக்க ரூ.9.97 கோடியில் 5.89 லட்சம் கொசுவலைகள் வழங்கபட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. சென்னையில் மொத்தம் 17 லட்சம் வீடுகள் உள்ளதாகவும், இதில் கொசுத்தடுப்பு வேலைகள் செய்ய 3200 பேர் பணி அமர்த்தப் பட்டுள்ளார்கள் என்கிறார் மேயர். ஆனால், இவ்வளவு பணியாளர்கள் பணியிலேயே இல்லை என்கின்றனர் மாநகராட்சி அதிகாரிகள். 

மாறாத நாற்றம்

கூவம் நதியை மேம்படுத்த​ மெகா திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால், கூவத்தின் நாற்றத்தில் எந்த மாற்றமும் நிகழவில்லை. சென்னையின் கழிவுநீர் வடிகால் அமைப்பு 1958-ம் ஆண்டு போடப்பட்ட திட்டப்படிதான் உள்ளது. பெருகி வரும் மக்கள் தொகை மற்றும் வீடுகளின் வசதிக்கு ஏற்ப எந்த மேம்பாடும் செய்யப்படவில்லை.  அம்பத்துார் ஏரி, கொரட்டுர் ஏரி ஆகியவற்றில் பாதி ஏரியாவையே ஆட்டையைப்போட்டுவிட்டனர். ஆனால் மேயர், “மழை நீர் கால்வாய் அரைகுறையாக நிற்பது உண்மை தான். மழைக்காலத்தில், பெரும் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்படாத நிலை வேண்டும். மழைநீர் கால்வாய் பணியை விரைவில் முடிப்பதோடு, ஆக்கிரமிப்புகளை அகற்றுவதும் அவசியம். ஆக்கிரமிப்பு குடிசைகளைக் கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. மற்ற பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன” என்கிறார். சென்னையில் 1007 கி.மீ. அளவுக்கு மழை நீர் வடிகால் தூர்வாரப்பட்டுள்ளது என்கிறார்கள். இது தவறான கணக்கு என்கிறார்கள், உள்விவரம் தெரிந்தவர்கள்.

நிதியை விழுங்கும் அம்மா உணவகங்கள்

சென்னை மாநகராட்சி... செயல்படாத ஆட்சி!

சென்னை மாநகராட்சியில்தான் முதலில் அம்மா உணவகம் தொடங்கப்பட்டது. தற்போது, 300 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், 107 உணவகங்கள் தொடங்கப்பட உள்ளன என்கிறார்கள். நிதிச்சுமையால் மாநகராட்சி திண்டாடி வரும் நிலையில், மாநகராட்சியின் பெரும்பகுதி நிதி, அம்மா உணவகங்களை செயல்படுத்துவதில்தான் சென்று கொண்டிருக்கிறது என்று புலம்புகின்றனர் அதிகாரிகள். 

எல்.இ.டி-யில் முறைகேடு

“சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 1,56,464 எல்.இ.டி பல்புகள் பொருத்தப்பட்ட தெருவிளக்குகள் அமைக்கப்பட்டன. மத்திய அரசு இதற்கு மானியம் வழங்க முன்வந்தும், அதை மறுத்துவிட்டு, தனியாக ஒப்பந்தம் போட்டு கூடுதல் விலைக்கு எல்.இ.டி பல்புகள் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. எல்.இ.டி பல்புகளாக மாற்றப்பட்டபின், ஆண்டுக்கு 13.56 கோடி மின்கட்டணம் குறைந்துள்ளதாக மேயர் பெருமைப்​பட்டார். ஆனால், எல்.இ்.டி பல்புகள் வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளது” என்கிறது மாநகராட்சி வட்டாரம்.

அம்மா திட்டம்... போலி பட்டாக்கள்!

சென்னை தரமணி அருகே உள்ள களிக்குன்றம் பகுதியில் வசித்த தலித் மக்கள் பயன்பாட்டில் சுமார் பத்தரை கிரவுண்டு நிலம் இருந்துள்ளது. அதில், சுமார் 5 கிரவுண்டு நிலத்தைச் சிலர் போலியாக ஆவணங்கள் தயாரித்து அபகரித்துக்கொண்டனர் என்று களிக்குன்றம் பகுதி மக்கள் புகார் கூறியுள்ளனர். மேலும், அந்த ஆவணங்கள் மூலம்  பட்டா கேட்டு விண்ணப்பித்து ‘அம்மா திட்ட முகாம்’ மூலம் இலவச வீட்டுமனைப் பட்டாவும் பெறப்பட்டுள்ளது. அதற்கு சென்னை மேயர் துணை போயிருக்கிறார் என்றும் கூறி அதிர்ச்சி கிளப்புகின்றனர் களிக்குன்றம் வாசிகள்.

1008 நிழற்குடைகள் சென்னையில் அமைக்கப் படும் என்றார் மேயர். ஆனால் இதுவரை 250 நிழற்குடைகள்தான் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சி... செயல்படாத ஆட்சி!

5000 கழிப்பிடங்கள் கட்டித்தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், சொற்ப எண்ணிக் கையில்தான் கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளன. ஆர்.கே.நகர், கோட்டூர்புரம் பகுதிகளில் அம்மா குடிநீர் வழங்கும் நிலையங்கள் உள்ளன. அம்மா வாரச் சந்தை, அம்மா தியேட்டர் எல்லாம் அறிவிப்போடு நின்றுவிட்டன. கொடுங்கையூர் குப்பைக்கிடங்கு பிரச்னையில் மாநகராட்சி நிர்வாகத்தை சென்னை உயர் நீதிமன்றம் சாட்டையால் விளாசியது.

சென்னை எப்படி இருக்கிறது என்று சென்னைவாசிகளுக்கே நன்கு தெரியுமே! 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.