News
Loading...

வருமானத்துக்குரிய மேயர்! - திருப்பூர் தகிடுதத்தம்...

வருமானத்துக்குரிய மேயர்! - திருப்பூர் தகிடுதத்தம்...

பஸ்ஸில் நம் அருகில் அமர்ந்து பயணிக்கும் ஒருவர் கண் அயர்ந்து தூங்கிவிட்டால், அவர் இறங்கும் ஊர் வந்ததும், யாராவது அவரை தோள்தட்டி எழுப்பிவிடுவார்கள்.  ஆனால், வெளியூரில் இருந்து திருப்பூர் செல்லும் பயணிகள் கண் அயர்ந்துவிட்டால், அவர்களைத் தட்டி எழுப்பும் வேலையை திருப்பூரே பார்த்துக்கொள்ளும். ஆம்... திருப்பூர் மாநகருக்குள் நுழைந்ததும் வீசும் சொல்லமுடியாத துர்நாற்றம், அந்தப் பயணியை அலறியடித்து எழவைக்கும். காஞ்சி மாநதி என்றழைக்கப்பட்டு, பன்னீர் போல ஓடும் நன்னீரை தாகம் தீர மக்கள் அள்ளிக்குடித்த நொய்யல் நதி, இன்று நாற்றம் வழியும் அமில ஆறாகிக் கிடக்கிறது.

உள்ளாடை ஏற்றுமதியில் உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் திருப்பூர் மாநகரின் உள்கட்டமைப்பு வேதனை அளிக்கும் விதத்தில் உள்ளது. 2011-ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று மேயர் பொறுப்பில் அமர்ந்தார் அ. விசாலாட்சி. அவருடைய நிர்வாகத்தில், திருப்பூர் மாநகராட்சியின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன? 

‘‘திருப்பூர் மாநகராட்சியில், ஆண்டுக்கு 500 கோடி ரூபாய்க்கு பட்ஜெட் போடப்படுகிறது. 150 கோடி ரூபாய்க்கும் மேல் வருமானம் வருகிறது. ஆனால், திருப்பூர் மாநகராட்சியின் நிர்வாகம் அந்த அளவுக்குத் தரமானதாக இல்லை. பாதசாரிகள் நடந்து  செல்ல நடைபாதைகள் கூட இல்லை. உலக அளவில் பெருமையாகப் பேசப்படும் இந்த ஊரை மேம்படுத்துவதற்கான சிறப்புத் திட்டங்கள் எதுவுமே இந்த ஐந்து ஆண்டுகளில் தீட்டப்படவில்லை” என்றார், தே.மு.தி.க-வின் 56-வது வார்டு கவுன்சிலர் கோவிந்தராஜ்.

மேலும் அவர் நம்மிடம்,  “ ‘டாலர் சிட்டி’ என்று அழைக்கப்படும் திருப்பூருக்கு பனியன் ஆர்டர் கொடுக்க பல நாடுகளைச் சேர்ந்த ‘பையர்கள்’ வருகிறார்கள். ஆனால், ஏற்றுமதி நிறுவன முதலாளிகளோ, அந்த ‘பையர்களை’ திருப்பூருக்குள் அழைத்து வருவதில்லை. மாறாக, கோயம்புத்தூரில் தங்கவைத்து ஆர்டர்களைப் பெற்றுக்கொண்டு, அப்படியே அனுப்பிவிடுகிறார்கள். அதற்கு, திருப்பூரில் நிலவும் சீர்கெட்ட சுகாதாரம்தான் காரணம். வருமானம் குறைவான மாநகராட்சிகள் எல்லாம், திடக்கழிவு மேலாண்மையை சிறப்பாக நடைமுறைப்படுத்தி வருகின்றன. ஆனால், திருப்பூரைப் பொருத்தவரை வீதிகள்தோறும்  குப்பைகள் நிறைந்து கிடக்கின்றன. இந்தக் குப்பைகளுக்கு ‘குட்பை’ சொல்லவேண்டும் என்பதற்காக, இடுவாய் கிராமத்தில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று சொன்னார்கள். பிறகு, அந்தத் திட்டத்தையே குப்பையில் போட்டுவிட்டார்கள்.

முன்னாள் அமைச்சர் ஆனந்தன் ஒரு கோஷ்டியாகவும், மேயர் விசாலாட்சி இன்னொரு கோஷ்டியாகவும், துணை மேயர் குணசேகரன்  தனி கோஷ்டியாகவும் ஆளுங்கட்சி கவுன்சிலர்களைப் பங்கு போட்டு விளையாடியதில் நல்ல தீர்மானங்கள் பல நிறைவேறவில்லை.  அப்படி நிறைவேற்றப்பட்ட திட்டங்களும் ஆமை வேகத்தில் நடைபெற்றதால், எல்லாமே அரைகுறையாகக் கிடக்கின்றன. அசுரவேக வளர்ச்சியில் இருக்கும் திருப்பூருக்கு ஈடுகொடுக்க, ‘தீயா வேலை செய்யும் மேயர்’ தேவை” என்றார் கோவிந்தராஜ்.

மேயர் தேர்தலின்போது வேட்பாளர் விண்ணப்பத்தில், 7-வது வகுப்பு மட்டுமே படித்துள்ளதாக விசாலாட்சி குறிப்பிட்டார். ஆனால், மேயர் நாற்காலியில் அமர்ந்ததும், தன் பெயருக்குப் பின்னால் ‘பி.ஏ.’ பட்டத்தைச் சேர்த்துவிட்டார். போலிப் பட்டம் குறித்த நிருபர் ஒருவரின் கேள்விக்கு,  விசாலாட்சி அளித்த பதில், ‘வாட்ஸ் அப்’ மூலம் தமிழகத்தையே கலங்கடித்தது. ‘‘எனது பெயருக்குப் பின்னால் உள்ள பி.ஏ. என்பது பட்டம் கிடையாது. ‘பினாங்கு அண்ணாமலை’ என்ற என் அப்பாவின் பெயர்’’ என்று, தோசையை அல்ல... தோசைக்கல்லையே திருப்பிப்போட்டார் மேயர் விசாலாட்சி.

“மாநகராட்சித் துப்புரவு பணியாளர்கள் நியமனத்துக்குத் தலா 3 லட்சம் ருபாய் லஞ்சம் கேட்டதாக மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அதுபோக, மொத்தம் உள்ள நான்கு மண்டலங்களில் இரண்டு மண்டலங்களில் உள்ள குப்பைகளை அள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்கு அனுமதி அளித்ததையடுத்து, சீனிவாசா வேஸ்ட் மேனேஜ்மென்ட் சர்வீஸ் என்ற நிறுவனம் 900 துப்புரவுப் பணியாளர்களை நியமனம் செய்து குப்பைகளை அள்ளி வருகிறது. இப்படி டன் கணக்கில் அள்ளப்படும் குப்பையில் இருந்து ஆண்டுக்கு கோடிக்கணக்கில் தனிப்பட்ட வருமானம் கிடைப்பதாகவும், இந்த தனியார் நிறுவனம் மேயர் விசாலாட்சி உள்ளிட்ட சிலரின் பினாமி நிறுவனம் என்ற பேச்சும் உள்ளது. இன்று பெருகிவரும் திருப்பூர் மக்கள் தொகைக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட ரூ.150 கோடி மதிப்பிலான நான்காவது குடிநீர் திட்டம் பேச்சளவிலேயே இருக்கிறது.” என்கிறது மாநகராட்சி வட்டாரம்.

வருமானத்துக்குரிய மேயர்! - திருப்பூர் தகிடுதத்தம்...

“30 சதவிகிதம் கமிஷன் கொடுத்தால் டெண்டர்; ஒப்பந்தக்காரர் யாராக இருந்தாலும் 30 சதவிகிதம் கமிஷனை முன்பணமாக வெட்டினால்தான் வேலை நடக்கும். வைட்டமினுக்கு ஆசைப்படாத கவுன்சிலர்கள் சிலரைத்தவிர, பண ஆசை கவுன்சிலர்கள் பலருக்கும் பங்கு பிரித்துத் தரும் சொம்பில்லா நாட்டாமை துணைமேயர்தான். மாநகராட்சிக் கூட்டங்களில் எலியும் பூனையுமாக மோதிக்கொள்ளும் மேயரும், துணைமேயரும் பங்கு பிரிப்பதில் பால் சட்டியும் பூனைக்குட்டியும் போல் இருப்பார்கள்” என்றார், சமூகச் செயற்பாட்டாளரும் வழக்குரைஞருமான மணிவண்ணன்.

மேலும் அவர், “திருப்பூர் மாநகரட்சியில் பதிக்கப்பட்டிருக்கும் பிரதான குடிநீர் குழாய்களை மாற்றி அமைக்கும் விதமாக, தனியார் பைப் தயாரிப்பு நிறுவனம் ஒன்றுக்கு எந்தவிதமான எழுத்து வடிவிலான ஒப்பந்தமும் இல்லாமல் 44 கோடி ரூபாய் நிதியை மாநகராட்சி நிர்வாகம் கொடுத்துள்ளது. ஆனால், நீண்ட காலம் ஆகியும் குழாய் இறக்கப்படவில்லை. இது குறித்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் விவரங்கள் கேட்டவுடன், அவசர அவசரமாக சில குழாய்களைக் கொண்டுவந்து இறக்கி வைத்துள்ளனர்” என்றார் மணிவண்ணன்.

திருப்பூர் மாநகராட்சி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் விரிவாக்கம் செய்யப்பட்டது.  வீரபாண்டி, முருகம்பாளையம், செட்டிப்பாளையம், ஆண்டிப்பாளையம், முத்தணம்பாளையம், தொட்டிப்பாளையம், மண்ணரை, நெருப்பெரிச்சல் ஆகிய 8 ஊராட்சிகளுடன், வேலம்பாளையம், நல்லூர் ஆகிய 2 நகராட்சிகளும் இணைக்கப்பட்டன. புதிதாக இணைக்கப்பட்ட இந்தப் பகுதிகளில் பாதாளச் சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப் படவில்லை. 

ஒரு கிராமப் பஞ்சாயத்தின் வசதிகள் கூட இல்லை என்ற நிலையில் உள்ள திருப்பூர், அனைத்து அடிப்படை வசதிகளையும் கொண்டதாகவும், உலக அளவிலான வர்த்தகர்கள் வந்து தங்கும் இடமாகவும் மாற வேண்டும். அதற்கு தொலை நோக்குப் பார்வை கொண்ட, தன்னலமற்ற மேயர் வேண்டும்.

குற்றச்சாட்டுகள் தொடர்பாக மேயர் விசாலாட்சியின் பதிலைக் கேட்பதற்காக அவரது செல்போனுக்கு பலமுறை தொடர்புகொண்டோம். ‘தாயிற்சிறந்த கோவிலும் இல்லை, தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை...’ என்ற பாடல்  தான் பதிலாகக் கிடைத்தது. மேயருக்குக் குறுஞ்செய்தி ஒன்றையும் அனுப்பியுள்ளோம். இதழ் அச்சுக்குப் போகும்வரை மேயரிடம் இருந்து பதில் வரவில்லை.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.